நீதி வெற்றி பெற்றுள்ளது - புஹாரி - Sri Lanka Muslim
Contributors
author image

M.A. Ramees

 

நீதிக்கும் அநீதிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் நீதி நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றதாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிழக்குப் பிராந்திய மக்களுக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போராட்டமாகவே இருந்தது. அந்த ஜீவமரணப் போராட்டத்தில் நீதியை ஜெயிக்க வைத்த வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அக்கரைப்பற்று பிரதேச மக்களும் கிழக்குப் பிராந்திய மக்களும் அரசியலில் மிகத் தெளிவு பெற்றவர்கள் உன்பதை அவர்களது வாக்களிப்பு எமக்கு பறைசாற்றுகின்றன.

 

இத்தேர்தலை மிகவும் சிறந்த முறையில் என்றுமில்லாதவாறு திட்டமிட்டு எந்தவித ஊழல்களும் இடம்பெறா வண்ணம் நடத்திய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இந்நாட்டு மக்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.

 

சர்வாதிகாரப் போக்கு, அடக்குமுறையாட்சி, இனவாதப் பேச்சு, ஊழல் மோசடியின் உச்சகட்டம், குடும்ப ஆதிக்கம் போன்ற அராஜகங்கள் புரையோடிப் போயிருந்த ஆட்சியினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று வீராவேசத்துடன் இருந்த மக்களுக்கு இந்தத் தேர்தல் அரியதொரு வாய்ப்பாய் அமைந்தது. அந்த வாய்ப்பை மக்கள் மிகுந்த சாதூர்யமாக பயன்படுத்தியுள்ளனர்.

 

வாழ்வா? சுhவா? என்ற போராட்டத்தில் நாம் தலைநிமிர்ந்து வாழ்வதா? கொத்தடிமைகளாய் செத்து மடிவதா? என்ற பாரிய கேள்விக்கு இத்தேர்தல் பெறுபேறு சிறுபான்மையினருக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு முழுக்க முழுக்க ஒரு சாதகமான முடிவையே தந்திருக்கின்றது. இந்த வெற்றிக்குப் பின்னால் நின்று செயற்பட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிக் காணிக்கைகள் உரித்தாகட்டும்.

 

அரசின் அமைச்சர்களின் பட்டாளப் பொய்ப்பிரச்சாரங்கள், அபிவிருத்தி மாயைககள், அத்தியாவசியப் பொருட்களில் விலை குறைப்பு, அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயிகளுக்கான வரட்சி நிவாரணம், வெள்ள நிவாரண சலுகைகள், அலரிமாளிகையின் விருந்துபசாரம் இன்னும் போதாதென்று பொலிவூட் நடிகர்களின் விளம்பரங்கள் மற்றும் படையினரின் கெடுபிடிகள், அரச ஊடகங்களின் செயற்பாடு போன்ற பொய்யான விடயங்களை மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட்டு தமது ஆணையினை உண்மையின்பால் வழங்கியிருக்கின்றார்கள்.

 

அடிதடி, கொலை, ஆட்கடத்தல், அச்சுறுத்தல் போன்ற அரச சதிவலைகளைப் பிய்த்தெறிந்து மஹிந்த குடும்பத்தின் காட்டுத் தர்பாரை கலைத்துச் சிதற வைத்த கைங்கரியம் செய்த மக்களே, உங்கள் தீர்மானம் நம் சமூகத்திற்கும் நாட்டின் ஏனைய மக்களுக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.

 

அக்கரைப்பற்றில் நடந்த எமது பிரச்சாரக் கூட்டங்களைக் குழப்புவதற்காய்ச் செய்யப்பட்ட கூச்சல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் இங்குள்ள மக்கள் அஞ்சாமல் வாக்களித்தமை வரலாற்றுத் தடயமாக எதிர்காலத்தில் பார்க்கப்படும்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்த நாட்டு மக்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே போன்றோர் சார்பாக நன்றி மலர்களை தூவி காணிக்கையாக்குகின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team