"நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுங்கள்" - NFGG வேண்டுகோள்! - Sri Lanka Muslim

“நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுங்கள்” – NFGG வேண்டுகோள்!

Contributors

சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்.

மேற்படி வேண்டுகோளினை சவூதி அரேபிய ராஜ்யத்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள காலித் ஹமூத் நாஸிர் அல் கஹ்தானி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஸபீல் நளீமி அவர்கள் தெரிவித்தார்.

சவூதி அரேபிய ராஜ்யத்தின் பிரதிநிதியாக நமது இலங்கை தேசத்திற்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தங்களை அன்புடன் நாம் வரவேற்றுக் கொள்கின்றோம்.

தங்களது நியமனம் எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டுமென ஆரம்பத்தில் பிராத்திக்கின்றோம்.

சவூதி அரேபிய அரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார மற்றும் பௌதீக வள அபிவிருத்த பல காத்திரமான பங்களிப்புகளை வழங்கியுள்ளதை நாம் இவ்விடத்தில் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும், 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டு திட்டம் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்தளிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் உயிர்களையும் உடைமைகளையும் வாழ்விடங்களையும் இழந்து நிர்க்கத்தியான மக்களுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினுள் அமைக்கப்பட்டுள்ள நுழைச்சோலை வீட்டு திட்டம் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பத்ர் நகர் பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்காகவே இந்த வீட்டு திட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை என்ற பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

பேரியல் அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்தபோது அவர்களது வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டது. இவ்வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக சவுதி அரசாங்கம் சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 500 வீடுகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வீடும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையதாகும்.

இவ்வீட்டுத்திட்டத்தில் மின்சார வசதி, நீர் வசதி மற்றும் விளையாட்டு மைதானம் என்பது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டு இவ்வீட்டு திட்டம் பூர்த்தியாக்கப்பட்டு இதுவரையில் அவை பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் பகிரப்படாமல் இருப்பது துரதிஷ்டமான விடயமாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு இவ்வீடுகளை கையளிக்குமாறு பல முயற்சிகள் செய்தும் சில பிரதேச அரசியல்வாதிகளின் காழ்புணர்;சிகளினாலும், இன்னும் சில தீய சக்திகளினாலும் இவ்வீட்டுத்திட்டத்திற்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, சவூதி அரசாங்கத்தின் இலங்ககைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team