நெருக்கடியான நிலைகளில் மட்டுமே முஸ்லிம்களிடம் சமூக உணர்வு வெளிப்படுகிறது - விரி­வு­ரை­யாளர் ஆதம்­பாவா சர்ஜூன் » Sri Lanka Muslim

நெருக்கடியான நிலைகளில் மட்டுமே முஸ்லிம்களிடம் சமூக உணர்வு வெளிப்படுகிறது – விரி­வு­ரை­யாளர் ஆதம்­பாவா சர்ஜூன்

sarjoon

Contributors
author image

Editorial Team

– நேர்­காணல் : ஹெட்டி ரம்ஸி – (நன்றி விடிவெள்ளி)


ஆதம்­பாவா சர்ஜூன் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள நிந்­த­வூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். இவர் தனது ஆரம்ப கல்­வியை கமு – அட்­டப்­பள்ளம் வினா­யகர் வித்­தி­யா­ல­யத்­திலும் இரண்டாம் நிலை மற்றும் உயர்­நிலைக் கல்­வியை கமு –­ அல்-­அஷ்ரக் தேசிய பாட­சா­லை­யிலும் கற்­றுள்ளார். தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­ச­றி­வியல் துறையில் சிறப்புக் கலை­மானிப் பட்­டத்­தையும் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­ச­றி­வியல் துறையில் முது­மா­னிப்­பட்­டத்­தையும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தத்­துவ இள­மானி பட்­டத்­தையும் பிரித்­தா­னிய பிராட்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு வருட பட்­ட­மேற்­ப­டிப்பு டிப்­ளோ­மா­வையும் பூர்த்தி செய்­துள்ளார்.

கடந்த 14 ஆண்­டு­க­ளாக பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்றி வரும் இவர், ஆரம்­பத்தில் தென்­கி­ழக்குப் பல்கலைக்கழக­த்தில் பணி­யாற்றி தற்­போது பேராதனைப் பல்­கலைக்க­ழ­கத்தில் பணி­யாற்றி வரு­கிறார். முஸ்லிம் அர­சியல் சார்ந்த பல்­வேறு பிரச்­சி­னைகள் தொடர்பில் பல்­வேறு ஆய்­வு­களை மேற்­கொண்டுள்ள விரி­வு­ரை­யாளர் சர்ஜூன், தற்­போது மலே­சிய தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதிக் கற்­கைக்­கான ஆய்­வினை கொண்டு­வ­ரு­கிறார்.


முஸ்­லிம்­களின் அர­சியல் குறித்த பல ஆய்வு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளீர்கள். அதில் முஸ்லிம் சுயாட்சி குறித்த ஆய்­வொன்றை முது­மானிப் பட்­டத்­திற்கு சமர்­பித்­துள்­ள­தாக அறி­கிறோம். அவ்­வாய்வு பற்றி சற்று குறிப்­பிட முடி­யுமா?
உயர் கல்வி மட்­டத்­தி­லான எனது ஆய்­வுகள் எல்­லாமே முஸ்லிம் அர­சியல் சார்ந்­த­ன­வா­கவே உள்­ளன.

எனது இள­மானிப் பட்­டத்­துக்­காக ‘முஸ்லிம் அர­சி­யலில் அஷ்­ரப்பின் தலை­மைத்­துவம்’ குறித்து ஒரு விமர்­சன பகுப்­பாய்­வினைச் செய்­தி­ருந்தேன். அஷ்ரப் குறித்த ஆரம்­ப­கால ஆய்­வு­களில் இது முக்­கி­ய­மா­னது. அஷ்­ரப்பின் முழு வாழ்க்கை வர­லாற்றைப் பற்­றியும் முஸ்லிம் அர­சி­யலில் அவ­ரது தலை­மைத்­து­வத்தின் தாக்கம் பற்­றியும் பேசு­கி­றது.

எனது M.Phil பட்­டத்­துக்­காக ‘முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கை’ பற்­றிய ஆய்­வினை மேற்கொண்டேன். முஸ்லிம் சுயாட்சி குறித்த முத­லா­வது ஆழ­மான ஆய்வு எனக்­கு­றிப்­பி­டலாம்.

இவ்­வாய்வு முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கை தோற்றம் பெற்­ற­தற்­கான கார­ணிகள், முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்­கையின் மாறிச்­சென்ற வளர்ச்சிப் போக்கு (changing dynamics) சமா­தான செயன்­மு­றையில் அக்­கோ­ரிக்கை உள்­வாங்­கப்­பட்ட விதம் (nature of accommodation), தொடர்ந்தேச்சையாக முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கை விமர்­ச­னத்­துக்கு உள்­வாங்­கப்­பட்டு புற­மொ­துக்கப்­ப­டு­வ­தற்­கான கார­ணிகள் என பல விட­யங்­களைப் பற்றி பகுப்­பாய்வு செய்­கி­றது.

முஸ்லிம் சுயாட்சி எனும் விடயம் முறை­யான வகையில் எண்­ணக்­க­ருப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை—­பல்­வேறு சூழ்­நி­லை­களில் பல்­வேறு வடி­வங்­களில் முன்­வைக்கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதும், முஸ்லிம் சுயாட்­சிக்­கான அர­சியல் வழக்­காடல் (political advocacy) தொடர்ச்­சி­யா­ன­தா­கவும் போது­மா­ன­வ­கை­யிலும் இருக்­க­வில்­லை—­அது தேர்­தலை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருந்­தது என்­பதும், அஷ்­ரப்­புக்கு பின்­ன­ரான முஸ்லிம் அர­சி­யலின் உடைவு (fragmentation / split) அதன் அர­சியல் வழக்­காடல் ஆற்­ற­லையும் சமா­தான செயல்­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்டு பரி­சீ­லிக்­கப்­படு­வ­தையும் மிகவும் பல­வீ­னப்­ப­டுத்­தி­யது என்­பதும், போருக்குப் பின்­ன­ரான கிழக்கின் புதிய அர­சியல் சூழ்­நிலை முஸ்லிம் சுயாட்­சியின் தேவையை கேள்­விக்­கு­றி­யாக்கி நிற்­கி­றது என்­பதும் ஆனால் கிழக்கில் இன்னும் முஸ்­லிம்­க­ளி­டையே சுயாட்­சிக்­கான அவா உள்­ளது என்­பதும் இந்த ஆய்­வி­னூ­டாக கண்­டு­கொள்­ளப்­பட்­டது.

இது 2013 இல் முடிக்­கப்­பட்ட ஓர் ஆய்வு. தற்­போ­தைய நில­மை­களில் சற்று வேறு­பாடு காணப்­ப­டலாம்.

சுயாட்சி கோரி­ய­தொரு சமூகம் ஆயுத ரீதியில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. பல்­லின மக்கள் வாழும் இலங்கை சூழலில் நல்­லி­ணக்கம் குறித்த கதை­யா­டல்கள் வலுத்து வரும் இவ்­வே­ளையில் முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கை எந்­த­ள­வுக்குச் சாத்­தி­யப்­படும்?
பல்­லின குழுக்­க­ளி­டையே அதி­கார முரண்­பாடும் போராட்­டமும் வலு­வ­டையும் போது நாட்டின் ஆள்­புல ஒரு­மைப்­பாட்டைப் பேணிக்­கொண்டு முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்­கான வழி­மு­றை­க­ளாக சமஷ்டி, சுயாட்சி, அதி­காரப் பர­வ­லாக்கம் போன்­றன சர்­வ­தேச அளவில் கையா­ளப்­ப­டு­கின்­றன.

இலங்­கை­யிலும் அம்­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் இலங்கை விட­யத்­தி­லுள்ள பிர­தான பிரச்­சினை என்­ன­வெனில் மேற்­படி எண்­ணக்­க­ருக்கள் தவ­றாக புரிந்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யாகும்.

எல்லா சமூ­கத்­தி­லுள்ள அர­சி­யல்­வா­தி­களும் தலை­வர்­களும் மக்­க­ளி­டத்தில் மேற்­படி எண்­ணக்­க­ருக்­களை தவ­றான வடி­வத்­தி­லேயே கொண்டு சேர்த்­தி­ருக்­கி­றார்கள். சுயாட்சி என்­பது தனி­நாட்­டுக்­கான வழி என எல்­லோரும் புரிந்­தி­ருக்­கி­றார்கள். இது தவ­றா­னது.

முதலில் அவ்­வெண்­ணக்கருக்கள் நாட்டைப் பிரிப்­ப­தற்­கா­ன­வைகள் அல்ல என்­பதை ஏற்றுக் கொண்­டால்—­அவை வேற்­று­மை­யிலும் ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வழி­மு­றைகள் என்­பதில் தெளிவு ஏற்­பட்டால் வட­கி­ழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மல்ல இந்த நாட்டில் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார மட்­டத்தில் மிகவும் பின்­தங்­கி­யி­ருக்­கின்ற மலை­யக மக்­க­ளுக்கும் வட-­கி­ழக்­கிலே வாழ்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கும் அவர்­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக சுயாட்சி அல­கு­களை ஏற்­ப­டுத்த முடியும்.

அர­சியல் மற்றும் சிவில் சமூக மட்­டத்தில் சமஷ்டி மற்றும் சுயாட்சி குறித்த தெளி­வான புரி­தல்கள் போருக்குப் பின்­ன­ரான அர­சியல் தீர்வு விட­யத்தில் முக்­கி­யத்­து­மிக்­க­ன­வா­க­வுள்­ளன.

கல்­முனை அல்­லது கரை­யோர நிர்­வாக மாவட்ட கோரிக்கை பற்றி நீங்கள் மேற்­கொள்­கின்ற ஆய்வின் உள்­ள­டக்­கத்தை சுருக்­க­மாக குறிப்­பிட முடி­யுமா?
எனது கலா­நிதி பட்­டத்­துக்­காக கல்­முனை நிர்­வாக மாவட்டக் கோரிக்­கை­யைப்­பற்றி ஆழ­மாக ஆய்வு செய்­து­கொண்­டி­ருக்­கிறேன். கிட்­டத்­தட்ட முடியும் கட்­டத்தில் உள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோ­ரத்­தி­லுள்ள தமிழ்­பேசும் மக்கள் விசே­ட­மாக முஸ்­லிம்கள் தனி­யான நிர்­வாக மாவட்டம் ஒன்றைக் கோரத் தூண்­டிய கார­ணிகள், அக்­கோ­ரிக்கை எதிர்­நோக்கி நிற்கும் சவால்கள், புதிய அம்­மா­வட்­டத்தை உரு­வாக்­குவதிலுள்ள சவால்கள், பிரச்­சி­னைகள் மற்றும் மாவட்டம் உரு­வாக்­கப்­ப­டு­வதால் ஏற்­படும் சாதக பாத­கங்கள் என்­ப­ன­வற்றினை இவ்­வாய்வு ஆராய்­கி­றது. முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கை போன்­றதே கல்­முனை அல்­லது கரை­யோர மாவட்டக் கோரிக்­கையும். அஷ்­ரப்­பிற்குப் பின்­ன­ரான அர­சி­யலில் இக்­கோரிக்கை பிர­பல்யம் பெற்­றது.

ஆனால் முறை­யற்ற அல்­லது தவ­றான எண்­ணக்­க­ரு­வாக்­க­லாலும் (அதா­வது முஸ்லிம் பெரும்­பான்மை மாவட்டம் எனக்­கோ­ரு­வது) போதி­ய­ளவு அர­சியல் ஆத­ரவு மற்றும் வழக்­காடல் ( advocacy) இல்­லாமை என்­ப­ன­வற்­றாலும் இக்­கோ­ரிக்கை பல்­வேறு எதிர்ப்­புக்­க­ளையும் சவால்­க­ளையும் சந்­தித்­த­துடன் தொடர்ச்­சி­யாக புற­மொ­துக்­கப்­பட்டும் வந்­தி­ருக்­கி­றது.

முஸ்லிம் அர­சி­யலைப் பொறுத்­த­வரை மிகவும் உணர்­வு­பூர்­வ­மான ஒரு விட­ய­மாக இக்­கோ­ரிக்கை இருந்­து­வ­ரு­கின்ற போதிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு, குறிப்­பாக மு.கா. தலை­வர்­க­ளுக்கு இம்­மா­வட்­டத்தை உரு­வாக்கிக் கொள்­வ­தற்­காக சாத­க­மான சந்­தர்ப்­பங்கள் பல உரு­வா­கி­யி­ருந்த போதிலும் அவர்கள் அச்­சந்­தர்ப்­பங்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை என்­பதே உண்மை. உட்­கட்சிப் பூசல்­களும் பதவி, அதி­கார மோகமும் இம்­மா­வட்­டதை உரு­வாக்­கு­வதன் முக்­கி­யத்­து­வத்தை அக்­கட்­சி­யி­ன­ரி­டையே வலு­வ­டையச் செய்து அர­சியல் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்­வ­தற்கும் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­கு­மான ஓர் ஆயு­த­மாக கல்­முனை மாவட்ட விவ­கா­ரத்தை மேலோங்கச் செய்­தி­ருக்­கி­றது. முஸ்லிம் சுயாட்சி கோரிக்கை போலவே இப்­போது கல்­முனை கரை­யோர மாவட்டம் பற்றி பேசு­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் வாதி­க­ளுக்கு தேவை­யில்லை. அதற்கு இன்­னொரு தேர்தல் வர­வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூகம் குறித்த உங்­க­ளு­டைய அவ­தா­னங்கள் எவ்­வா­றுள்­ளது? இச்­ச­மூ­கத்தில் எவ்­வா­றான மாற்­றங்கள் நிகழ வேண்டும் என நீங்கள் கரு­து­கி­றீர்கள்?
இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு சமூக உணர்வும் அடை­யா­ளமும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். நெருக்­க­டி­யான நிலை­களில் மட்­டுமே இந்த உணர்வும் அடை­யா­ளமும் அவர்­க­ளிடம் தற்­கா­லி­க­மாக உரு­வா­கி­றது. பின்னர் அவர்கள் பிர­தேச ரீதி­யா­கவும் அர­சியல் சார்பு ரீதி­யா­கவும் பிரிந்து சிந்­திக்­கின்­ற­னர் —­ செ­யற்­ப­டு­கின்­றனர்.

இது முஸ்­லிம்­க­ளது பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­தர தீர்வை காண்­ப­தற்கு சவா­லாக அமை­கி­றது. உதா­ர­ண­மாக சொன்னால் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களைப் பற்றி கிழக்­கிலோ அல்­லது மற்­றய பகு­தி­யிலோ உள்­ள­வர்கள் தற்போது அதி­க­மாக பேசு­வ­தில்லை.

அவர்­களும் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு பகு­தி­யினர். கடந்த 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக உள்­நாட்டில் அக­தி­க­ளாக வாழ்­கி­றார்கள்.

அவர்­க­ளது சொந்த, பாரம்­ப­ரிய மண்­ணுக்கு திரும்­பு­வது என்­பது பெரும் போராட்­ட­மிக்­க­தா­கவே உள்­ளது. ஆனால் இது குறித்த கவலை மற்­றய பகுதி முஸ்­லிம்­க­ளிடம் தற்­போது அதி­க­ளவில் இல்லை.

இது விட­யத்தில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் ஒற்­று­மை­யற்றே செயற்­ப­டு­கின்­றன. இவ்­வி­டயம் முஸ்லிம் சமூ­கத்தின் பொதுப் பிரச்­சி­னை­யாக பார்க்­கப்­பட்டு அவர்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் மனோ­நிலை முஸ்லிம் சமூ­கத்தில் வலு­வாக்­கப்­பட வேண்டும்.

அவ்­வாறே, மற்­றய இனக்­கு­ழுக்­க­ளுக்கு தனித்­து­வமாய் அமை­வ­து­போன்ற பல விட­யங்கள் முஸ்லிம் சமூ­கத்தில் இல்­லா­தி­ருக்­கி­றது. உதா­ரண­மாக சொன்னால் கலா­சார ஆடை அடை­யா­ளத்தை குறிப்­பி­டலாம். எல்லா தனித்­து­வ­மான இனக்­கு­ழு­மங்­களும் தங்­க­ளு­டைய கலா­சார விட­யங்­களை பேணு­வ­தற்கும் பாது­காப்­ப­தற்கும் முயற்­சிக்­கின்­றன. கலா­சார அம்­சங்கள் ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை நிலை­நி­றுத்­து­வதில் முக்­கிய பங்கை ஆற்­று­கின்­றன.

ஆனால் ஒரு தனி­யான இன­மாக நிலை­நி­றுத்திக் கொள்­வதில் பெரும் போராட்­டத்தை எதிர்­கொள்ளும் முஸ்லிம் சமூகம் தங்­க­ளுக்­கென்று ஓர் அடை­யாள ஆடையை முன்­னி­லைப்­ப­டுத்­து­வதில் பின்­நிற்­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு ஓர் அடை­யாள ஆடைதான் இப்­போ­தைய அவ­சியத் தேவை என்­பது எனது உறு­தி­யான வாத­மல்ல.

முஸ்­லிம்கள் தங்­க­ளு­டைய இனத்தின் அடை­யா­ளத்தை மற்ற இனத்­த­வர்­க­ளுக்கு பாதிப்­பில்­லாமல் பலப்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிக்க வேண்டும் என்­பதே எனது கருத்து. தனது தனித்­துவம் பற்­றியும் மாறிக்­கொன்டு செல்லும் உலகில் தமது இருப்பு பற்­றியும் முற்­போக்­காக சிந்­திக்க வேண்­டிய தேவை முஸ்லிம் சமூ­கத்­துக்கு இருக்­கி­றது.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் இன்று தேசிய மட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­வ­தில்லை. முஸ்லிம் சமூக அர­சி­யல்­வா­தி­களும் இவற்றை கவ­னத்­திற்­கொள்­ளாமல் இருந்து வரும் நிலையில் முஸ்லிம் சமூகத்­திற்குள் ஒரு பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்­டி­யதன் முக்­கி­யத்­துவம் குறித்த உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?
முஸ்லிம் சமூ­கமும் அர­சி­யலும் பல­மாக உடை­வுக்­குட்­பட்­டி­ருக்­கி­றது என்­பதே இதன் பொருள். அர­சியல் வாதி­க­ளி­டத்­திலும் சமூக மட்­டத்­திலும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டாத வரையில் முஸ்லிம் சமூகப் பிரச்­சி­னைகள் தொடர்ந்தும் கவ­னிப்­பா­ரற்றே விடப்­படும்.

இது முஸ்லிம் சமூ­கத்­துக்கு மட்­டு­மான ஒரு விட­ய­மல்ல. தங்­க­ளது நேர்­மை­யாலும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளாலும் இந்த நாட்டில் பல இனங்கள் மத்­தியில் நன்­ம­திப்பைப் பெற்று ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் சலு­கைகள் வழங்­கப்­பட்ட ஒரு சமூ­க­மாக வாழ்ந்த பல­நூ­றாண்டு வர­லாறு இந்­த­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு உள்­ளது. இந்த நாட்டில் அர­சி­ய­லிலும் முஸ்லிம் தலை­வர்கள் முக்­கிய பாத்­தி­ரத்தை வகித்­தி­ருக்­கி­றார்கள்.

இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய எதிர்ப்­புக்­களும் சவால்­களும் எழு­கி­றது என்றால் அல்­லது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் கவ­னிக்­கப்­ப­டு­வ­தில்லை என்றால் அதற்கு முற்­றாக ஆட்­சி­யா­ளர்­க­ளையும் மற்­றைய இனத்­த­வர்­க­ளையும் குறை­கூற முடி­யாது. முஸ்­லிம்­க­ளி­டத்­திலும் பல பிரச்­சி­னை­களும் தவ­று­களும் உள்­ளன.

சிறு­பான்­மைக்குள் சிறு­பான்­மை­யாக வாழும் ஒரு சமூகம் தமது இனத்­துவ நலனைப் பேணிக் கொண்டு தேசிய மட்­டத்தில் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என்­பது பற்­றிய புரிதல் முஸ்­லிம்­க­ளுக்கும் தேவை­யா­க­வுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்த உங்­க­ளு­டைய மனப்­ப­திவு என்ன?
2015 இல் இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் என்­பது உள்­நாட்டுப் போருக்குப் பின்­ன­ரான இலங்­கையின் போக்கில் பாரிய திருப்­பு­மு­னை­யா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.

அபி­வி­ருத்தி, சமா­தானம் மற்றும் நல்­லாட்சி என்­ப­வற்றை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் ஆட்சி மாற்­றமும் புதிய அர­சாங்­கமும் முக்­கிய பங்­கினை ஆற்­ற­மு­டியும்.

ஆனால், துர­திஷ்­ட­மாக தனி­யொரு கட்­சிக்கு ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை பொதுத்­தேர்தல் பெற்­றுக்­கொ­டுக்­கா­மையால் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் கேள்­விக்­கு­றி­யாகி நிற்­கின்­றன. ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரது தேசிய அர­சாங்க முயற்சி பாராட்­டத்­தக்­கது.

ஆனால், தேசிய அர­சாங்கம் எனும் எண்­ணக்­கரு இலங்­கைக்கு புதி­யது என்­பதால் தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களும் கட்­சி­சார்­பா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.

தேசிய அர­சாங்­கத்தில் தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்டு அர­சாங்­கத்­தி­லுள்ள எல்­லோரும் அவற்றை தீர்க்க ஒரு­மித்து முயற்­சிக்க வேண்டும். ஆனால், தேசிய விட­யங்கள் தொடர்பில் ஒரு கருத்­தொ­ரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வது என்­பது அர­சாங்­கத்­துக்குள் பெரும் பிரச்­சி­னை­யா­கவே உள்­ளது. நல்­லாட்­சிக்­கான முயற்­சி­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே பலர் சவால்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழாலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வா­தப்­பி­ரச்­சி­னைகள் மீளவும் துளிர்­விட ஆரம்­பித்­துள்­ளன.? அதற்­கு­ரிய காரணம் என்ன? இன­வா­தப்­பி­ரச்­சி­னைகள் மூளாமல் இருப்­ப­தற்­கான சட்­டங்கள் பலப்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா?
நாட்டில் விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வாதம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக அர­சி­யல்­வா­திகள் மார்­தட்டிப் பேசி­னாலும் பயங்­க­ர­வா­தமும் வன்­மு­றையும் பல வழி­களில் வளர்­வ­தற்கு யுத்­தத்­துக்கு பின்­ன­ரான ஆட்­சி­யா­ளர்கள் வழி ஏற்­ப­டுத்திக் கொடுத்­து­விட்­டார்கள். அத்­தோடு மதத்­தீ­வி­ர­வாதம் மீள் எழுச்சி பெறு­வ­தற்கும் வழி­வி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன் விளைவே யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வும் வன்­மு­றை­க­ளு­மாகும். பெரும் பலம் ­பொ­ருந்­திய ஒரு பயங்­க­ர­வாத இயக்­கத்தை அழித்­தொ­ழித்­த­வர்­க­ளுக்கு இவற்­றையும் இல­கு­வாக கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்­கான ஓர் ஆயு­த­மாக ஆட்­சி­யா­ளர்கள் இவ்­வ­ழி­மு­றை­களைக் கையாண்­ட­தால்தான் இவ்­வ­ளவு பாத­க­மான நிலை உரு­வா­னது. முஸ்லிம் அர­சி­யலின் இய­லா­மையும் இதற்கு ஒரு காரணம்.

இன வன்­மு­றைகள் எழா­ம­லி­ருப்­பதை அல்­லது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை சட்­டத்தால் மாத்­திரம் கட்­டுப்­ப­டுத்­தி­விட முடியும் எனச் சொல்ல முடி­யாது.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அமு­லி­லி­ருந்த காலத்­திலே மேற்­படி சம்­ப­வங்கள் நடந்­தே­றின. பயங்­க­ர­வாத சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி சிறு குற்­றங்கள் புரிந்த சிறு­பான்மைச் சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்கள் கூட கைது செய்­யப்­பட்டு தண்­டிக்­கப்­பட்ட வர­லாறு உண்டு. ஆனால் போருக்குப் பின்னரான காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட எந்த பெரும்பான்மை இனத்தவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. எனவே சட்டத்தின் முறையான, நேர்மையான அமுலாக்கமே இங்கு முக்கியமானது. பல்மத சகிப்புத் தன்மை குறித்த மதப்போதனைகளும் இனங்களுக்கிடையே மேற்படி முறுகல் நிலை அல்லது வன்முறை ஏற்படுவதை குறைக்க உதவலாம்.

இலங்கை சுதந்திரம் பெற்றபொழுது இலங்கையை விட பல நாடுகள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. அந்நாடுகள் இன்று அரசியல் பொருளாதார சமூக ரீதியில் பலம் பொருந்திய நாடுகளாக உள்ளன. இலங்கை ஏன் இன்னும் அவ்வாறானதொரு நிலையை எட்டவில்லை. அதற்குரிய காரணங்கள் என்ன?
எங்களிடையே தேசிய உணர்வு இன்னும் முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லை. நாங்கள் இன்னும் இன ரீதியாகவே சிந்திக்கிறோம்—செயற்படுகிறோம்.

சுதந்திரத்தின் பின்னரான ஆட்சிமுறை இந்த பிரிவினையையே எம்மிடத்தில் உரமூட்டியிருக்கிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் தேசத்தை விட்டுப் பிரிந்து செல்லும் மனோநிலையும் செயற்பாடும் அதிகளவிலேயே உள்ளது. எம்மில் எத்தனை பேருக்கு எமது தேசிய கீதம் நினைவில் உள்ளது?. எத்தனை பேருக்கு அதைப் பாடும் போது தேசிய உணர்வு ஏற்படுகிறது?. எனவே முதலில் எம்மிடையே தேசிய உணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இதற்கு முதற்படியாக எல்லோரையும் இலங்கைத் தேசத்தவர்கள் என்று ஏற்று அவர்களது தனித்துவமான இன, மத, கலாசார அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நூற்றுக்கணக்கான இன, மொழிக்குழுக்களைக் கொண்டுள்ள பல ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தேசிய உணர்வும் தேசிய ஒருமைப்பாடும் பலமாக கட்டியெழுப்பபட்டிருக்கின்றன. தமக்கென்று ஒரு தனி மொழியே இல்லாமல் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல மொழி பேசும் பல இன மக்களிடையே ஒரே தேசியம் எனும் சிந்தனை பலமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டே இரண்டு மொழி பேசும் நான்கு இனக்குழுக்களுக்குள் ஓரே தேசியம் எனும் சிந்தனையை கட்டியெழுப்புவதில் நாம் தோல்வியுற்றிருக்கிறோம்.

Web Design by The Design Lanka