நேர்மையான குரலுடனான சரியான பயணப்பாதையே இன்று நாட்டுக்கு தேவையாகும் - ஜனாதிபதி » Sri Lanka Muslim

நேர்மையான குரலுடனான சரியான பயணப்பாதையே இன்று நாட்டுக்கு தேவையாகும் – ஜனாதிபதி

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இன்று தேவையாயிருப்பது வெற்று மனிதர்களின் வெற்று குரல்களை விடவும் நற்பண்புள்ள, கல்விகற்ற மனிதர்களினதும் தேசப்பற்றாளர்களினதும் நேர்மையான குரலுடனான சரியான பயணப்பாதையாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அந்த பயணப்பாதைக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு நாட்டின் பிரதான மக்கள் சேவகர் என்ற வகையில் தயாராயிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஒருமைப்பட்ட சுபீட்சமிக்க தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு பேதங்களின்றி இணைந்து கொள்ளமாறு அனைவரையும் கௌரவமாக அழைப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று (10) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘உத்தமாபிவந்தனா’ கெப்பிற்றிப்பொல வீரர்கள் நினைவுகூரல் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீர கெப்பிற்றிப்பொல அவர்கள் பயன்படுத்திய வாள்கள் மூலமோ, ரி – 56 அல்லது மல்ரிபரல் ஊடாகவோ இன்றிருக்கம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஞானத்துடன், அறிவுடன் அவற்றுக்கு முகங்கொடுப்பதன் மூலமே அவற்றை தீர்க்கமுடியுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களை விழிப்புறச்செய்து, தேசப்பற்றைக் கட்டியெழுப்பி காலத்தின் பணியை நிறைவேற்ற இணைந்துகொள்ளுமாறு நாட்டின் அனைத்து கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைப்பதாக தெரிவித்தார்.

எவரும் கேள்விகள், விமர்சனங்களை முன்வைக்க முடியுமாயினும் தீர்வுகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய சவால்களை புரிந்து கொண்டு எமது சிரேஸ்ட வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் எழுச்சிபெற்று, பெருமையுடனும் உணர்வுடனும் எழுந்து நிற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தமற்றவை சமூகத்தை நோக்கி வருகிறது. எமது சிரேஸ்ட வரலாறு மற்றும் பண்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய காலம் மீண்டும் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் சுதந்திரப் போரரட்டத்தின் ஆரம்பமாக கருதப்படும் 1818 ஊவா வெல்லஸ்ஸ போராட்டத்துக்கு தலைமைதாங்கிய கெப்பிற்றிப்பொல திஸாவ உள்ளிட்ட வீரர்களை நினைவு கூருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அவர்களால் தேசப்பற்றாளர்களாக கௌரவப்படுத்தப்பட்டு அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட வீரர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுக்கல் எதிர்கால பரம்பரையின் அறிதலுக்காக இலங்கை தேசிய நூதனசாலை மற்றும் சுதந்திர சதுக்க நூதனசாலையில் வைக்கப்படுவதற்காக அந்த நிறுவனங்களின் தலைவர்களிடமும்; கண்டி ஸ்ரீ தலதா மாளிகை நூதனசாலைக்காக தியவதன நிலமே அவர்களிடமும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வீர கெப்பிற்றிப்பொல மகா திஸாவே உள்ளிட்ட 19 வீரர்களினதும் பெயர்கள் அந்த பட்டியலிலிரந்து நீக்கப்பட்டது போன்றே, பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஏனைய வீரர்களையும் அந்த பட்டியலிலிருந்து நீக்குமாறு கோரும் மனு வீர மொனரவில கெப்பிற்றிப்பொல தேசிய மன்றத்தின் தலைவர் வோல்டர் பரகிற்றியாவதென்னே அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விடயத்தை வரலாற்று ஆய்வாளர்களான கலாநிதிகள், பேராசிரியர்களுக்க சமர்ப்பிக்கப்பட்டு, எவ்வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என தீர்மானித்து, தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, விஜேதாஸ ராஜபக்ஸ, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் பேராசிரியர் ஜே.பீ.திஸாநாயக்க, கே.என்.ஓ.தர்மதாஸ உள்ளிட்ட அறிஞர்களும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய உள்ளிட்ட அரச அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka