நைகர் நாட்டில் துப்பாக்கிதாரிகளால் 58 பொதுமக்கள் படுகொலை - தானியக் களஞ்சியங்கள், வாகனங்கள் மீது தீ வைப்பு - Sri Lanka Muslim

நைகர் நாட்டில் துப்பாக்கிதாரிகளால் 58 பொதுமக்கள் படுகொலை – தானியக் களஞ்சியங்கள், வாகனங்கள் மீது தீ வைப்பு

Contributors

நைகர் நாட்டில் மாலி நாட்டுடனான எல்லைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டில்லபரி பிராந்தியத்தின் சந்தை ஒன்றில் இருந்து திரும்பும் மக்களை ஏற்றிய நான்கு வாகனங்கள் மீது ஆயுததாரிகள் சரமாரியாக சூடு நடத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நடந்த இந்தத் தாகுதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் நைகரில் தற்போது இரு ஜிஹாதிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று மாலி மற்றும் புர்கினா பாசோவுக்கு அருகில் மேற்கிலும் மற்றது நைஜீரியாவுடனான எல்லையில் தென்கிழக்கிலும் இயங்கி வருகின்றன.

“இந்த காட்டுமிராண்டி செயற்பாட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, ஒருவர் காயமடைந்துள்ளனர். தானியக் களஞ்சியங்கள் மற்றும் வாகனங்கள் பலதும் தீ வைக்கப்பட்டுள்ளன” என்று நைகர் அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து நேற்று தொடக்கம் மூன்று நாள் துக்கதினத்தையும் அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் இரு கிராமங்களில் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 100 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது நைகரின் அண்மைய வரலாற்றில் மோசமான படுகொலை சம்பவமாக பதிவானது.

Web Design by Srilanka Muslims Web Team