பகலில் எதிர்க்கட்சி, இரவில் ஆளும் கட்சி, முஸ்லிம் அரசியலின் நிலை..! - Sri Lanka Muslim

பகலில் எதிர்க்கட்சி, இரவில் ஆளும் கட்சி, முஸ்லிம் அரசியலின் நிலை..!

Contributors

1960 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ‘மரம்’ சின்னத்தில் போட்டியிட்டு வி. கே. வெள்ளையன் முன்வைத்த கோரிக்கைகளை இன்று மலையக தேசியம் பெற்றுக் கொண்டது. அமரர் தொண்டமான் ஐயா அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் மேடையில் வைத்து கிழக்கின் குடியேற்ற தலைவர்களைப் பார்த்து சொன்னார் 50 வருட வரலாற்றையுடைய உங்களுக்கு எங்களைப்பற்றி கதைப்பதற்கு அருகதை இல்லை என்றும் தம்பி அஷ்ரப், தான் ஐந்து தசாப்தத்தில் சதிக்காததை அவர் ஒரு தசாப்தத்தில் சதித்துவிட்டார் என்றும் கூறினார்.

மலையகத்தின் இவ்விரு தலைவர்களின் பணிகளை வேற்றுமைகள் இருந்த போதிலும், பல பிரிவுகளாக நின்ற போதிலும் மலையகத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்று சாதித்துவிட்டார்கள். தங்களுக்கான பல புதிய பிரதேச சபைகள், பல புதிய வீடமைப்பு திட்டங்கள், பெரும் தோட்டங்களுக்கான புதிய கிராமங்கள், அபிவிருத்தி அதிகார சபை என்று சாதனைகள் தொடர்கிறது மலையக தேசியத்துக்கு.

ஆனால் முஸ்லிம் தேசியத்தின் தலைநகரில் நிலைமை வேறு. காலத்துக்கு காலம் தேர்தல் மேடைகளில் மாத்திரமே வாக்குறுதிகள் குமியும். கரையோர மாவட்டம், பிரதேச செயலகம், துபாய், சிங்கப்பூர் பாணியில் அபிவிருத்தி என்று கவர்ச்சி நாடகம் நடக்கும். முஸ்லிம் தேசியத்தின் வாக்குகள் இச்சிறு நாடகத்துக்கு சோரம்போய் மீண்டும் இன்னும் ஒரு தேர்தலுக்கு அதே நாடகம் அரங்கேறும்.

இதுவே தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் ஏற்படுத்திய தொடர் கதை. அவரின் பெயரில் அரசியல் செய்யும் அனைவரும் விட்ட தவறு, தமது தேசியத்துக்கான தலைமைத்துவத்தை அடையாளம் காண முயற்சி எடுக்காமையே. மரம், யானை, கதிரை, வெத்திலை, குதிரை, மயில், மொட்டு, வண்ணத்திப்பூச்சி என்று கரையோரம் பல சின்னங்களை கண்டது.

கரையோரம் இன்னும் இந்த நாடகத்தைத்தான் பார்க்கப்போகிறதா? கரையோர மாவட்டம் இவ்வாறு பின்தங்கியதற்கு அக்கரைப்பத்துக்கு கேபினட் அமைச்சை பெற்றுக்கொண்ட அதாவுல்லாஹ்வுக்கும், கல்முனையின் காவலன் என்று இயலாமை நிலையில் உள்ள ஹரிசுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

உங்கள் வரட்டு கெளரவங்களை விட்டெறியுங்கள். மலையக தேசியத்தைப் பின்பற்றுங்கள். உங்களை நீங்களே ஆளுங்கள். உங்களை விற்றுப்பிளைக்கும் தலைமைகளை துரத்துங்கள். சாய்ந்தமருது பிரதேச சபை, கல்முனை அபிவிருத்தி அதிகார சபை, கரையோர மாவட்டம் என்ன தென்கிழக்கு அலகினையே பெறலாம். முஸ்லிம் தேசியத்தின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் யுகத்தை மீண்டும் நிலைநாட்டலாம்.

இவை நடக்க வேண்டுமானால் கரையோர மக்களின் சிந்தனையில் மாற்றம் நிகழ வேண்டும் என்பது மட்டுமல்ல, தலைவர்களின் இரவின் ஆட்டமும் முடிவுக்கு வர வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team