பகை மறத்தல் » Sri Lanka Muslim

பகை மறத்தல்

party

Contributors
author image

A.L.நிப்றாஸ்

‘கடந்தகால அநீதியின் வரலாற்றைத் திருத்தியமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்;கம் அல்லது பகை மறப்பு என்பதாகும்’ என்று, நிறவெறிக்கு எதிராக போராடி அதற்காகவே 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாபிரிக்காவில் மக்களாட்சி;க்கு வித்திட்ட பெருமைக்குரிய நெல்சன் மண்டேலா கூறினார். முன்பகையை மறத்தல் என்பது இனக் குழுமங்களுக்கு இடையில் மட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள்ளே இருக்கின்ற அணிகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

பகை மறப்பு என்பது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நல்லுறவும் நல்லெண்ணமும் ஒற்றுமையும் தோற்றம் பெறுவதற்கும் அடிப்படையாகின்றது. பகைமறப்பு பற்றி நெல்சன் மண்டேலா சொல்வதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்பே இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமை பற்றி உபதேசம் செய்திருக்கின்றது. ‘உலகில் முன்பு வாழ்ந்த சமூகங்கள் வேற்றுமை கொண்டு அழிந்தது’ பற்றியும் எச்சரித்திருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் பகைமறப்புக்கான அறிகுறிகளை விட பகை வளர்த்தலுக்கான காலநிலைகளே இதுகாலவரைக்கும் நிலைகொண்டிருக்கின்றது.

தமிழருடனான நல்லிணக்கம்
இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பிற்பாடு அதிகமதிகம் நாம் கேள்விப்பட்ட வார்த்தையே ‘நல்லிணக்கம்’ என்பதாகும். கடந்தகால தவறுகள் மற்றும் சம்பவங்களை ஆய்ந்தறிந்து அதற்கு பிராயச்சித்தம் காண்பதற்கும் அதனூடாக இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமாக ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது, அமைச்சு உருவாக்கப்பட்டது, அதற்கென அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் நல்லிணக்கம் முழு அளவில் ஏற்படவில்லை. இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று கடந்தகால பகையை மறப்பதில் உள்ள தாமதம் என்று சொல்ல முடியும்.

வார்த்தையளவில் நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கெதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற பெருந்தேசியவாத சிந்தனைகள், கடும்போக்கு அமைப்புக்கள் முன்கையெடுத்துள்ளமை, பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, சிறுபான்மை அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனங்கள், அடிமட்டத்தில் இருந்து பகைமறப்போ நல்லிணக்கமோ கட்டியெழுப்பப்படாமை என மேலும் பல விடயங்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து கொண்டிருக்கின்றன.

போருக்குப் பின்னரான இலங்கையில் பொதுவாக எல்லா இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி கடந்த சில வருடங்களாக அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுகின்றது. முஸ்லிம் சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான சிராஜ் மஸ்ஹூர் பகைமறப்பின் அவசியம் குறித்து நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி மேலும் பல ஆய்வாளர்கள், முற்போக்காளர்கள் மற்றும் அமைப்புக்களும் நல்லிணகத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

பகைமறப்பு அல்லது மீளிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால், முதலில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமக்கிடையே இடம்பெற்ற கடந்தகால தவறுகள் பற்றி பரஸ்பரம் பேசி மனதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும். அந்த வகையில், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மானசீகமாகவும் சிலவேளைகளில் பௌதீக ரீதியாகவும் தமது ஆதரவை வழங்கிய முஸ்லிம்களுக்கு, தமிழ் ஆயுத இயக்கங்கள் அநியாயங்களை இழைத்திருக்கின்றன. இதுபற்றி பேசவேண்டும்.

மறுபுறத்தில், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து சில தவறுகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தரப்பினரிடையே ஒரு கருத்து இருக்கின்றது. இராணுவம் மற்றும் ஒட்டுக் குழுக்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் நபர்களும், ஊர்ச் சண்டியர்களுமாக வெகுசிலர் மேற்கொண்ட இந்த தவறுகள் குறித்தும் முஸ்லிம்களும் தமிழர்களும் மனம்விட்டு பேச வேண்டியிருக்கின்றது. மறுதரப்பு செய்த தவறை சுட்டிக்காட்டுகின்ற ஒரு இனமானது தாம் செய்த தவறுகளை தார்மீகமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர்களின் கருத்துப்படி அதன்பிறகுதான் உண்மையான பகைமறத்தல் சாத்தியமாகும்.

சிங்களவருடன் நல்லுறவு
இதேவேளை நாட்டில் இப்போது இனவாத சக்திகள் தலைவிரித்தாடுகின்ற சூழலில், சகோதர வாஞ்சையுள்ள இனவாத வலைக்குள் அகப்படாத சாதாரண சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தை பேணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் இனவாதத்திற்கு எதிரானவர்களே தவிர பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும், சிங்கள மக்களுடன் நல்லுறவோடு வாழவே பிரயாசைப்பாடுகின்றார்கள் என்பதையும் வெளிக்காட்டுவதற்காக, பல முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். இது எந்தளவுக்கு என்றால், குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் பௌத்தர்களின் ‘பன’ ஓதுமளவுக்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.

இதுபோலவே, முஸ்லிம் மக்கள் பிரதேசவாதங்கள் மற்றும் பிராந்தியவாதங்களை கடந்து, வடக்கு முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையக முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள் என்ற வேற்றுமைகளுக்கு அப்பால் ஓரணியில் நின்று செயற்பட வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. மிகக் குறிப்பாக, மார்க்க கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற கொள்கை ரீதியான முரண்பாடுகள், மத இயக்க வேறுபாடுகள் களையப்பட்டு நல்லிணக்கத்தோடு ஓருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அவசியமும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது, முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு பகைமறக்க வேண்டும் என்றும், முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பேசப்படுகின்ற சமகாலத்தில் முஸ்லிம்கள் தமக்குள் பிரதேச, மத அடிப்படைகளில் இணக்கப்பாட்டோடு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் உருவாகி வருகின்றது. அப்படியென்றால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பகைமறப்பதும், இந்த சமூகத்தின் அரசியலானது நல்லிணக்கத்தோடும் ஒற்றுமையோடும் பயணிப்பதும் அவசியமில்லையா? என்ற வினா எழுகின்றது.

நமக்குள் ஒன்றுபடல்
அந்த வகையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கிடையே இருக்கின்ற பகைமை உணர்வுகளை மறப்பதும் நல்லிணக்கத்தோடு இயங்குவதும் அவசியமில்லை என்று சித்தசுவாதீனமுள்ள எவராலும் கூற முடியாது. அதுவும், இனவாதமும் சர்வதேச அளவிலான முஸ்லிம் விரோத சக்திகளும் இலங்கையில் தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்தத தொடங்கியிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலாவது முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை பரவலாக முஸ்லிம்கள் எல்லோரிடத்திலும் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அவ்வாறான ஒரு இணக்கப்பாடு தேவையில்லை என்று சொல்பவர்கள் சமூகத் துரோகிகளாக வரலாற்றில் பதியப்படுவார்கள்.

இலங்கைச் சோனகர்களின் அரசியல் என்பது பல்வேறு பரிணாமங்களை எடுத்து வந்திருக்கின்றது. இப்போதைய களநிலவரப்படி இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரும்பாலும் தனித்துவ அடையாள அரசியலாலும், பெரும்பான்மை கட்சிகள் சார்பு அரசியலாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது எனலாம். அதாவது, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமக்கான தனியடையாள அரசியலில் நாட்டம் கொண்டிருப்பதுடன், அதற்கு வெளியில் பெரும்பான்மைச் சமூகங்களோடு வாழும் முஸ்லிம்கள் பெருந்தேசிய கட்சிகளின் அரசியலில் தங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையிலேயே, முஸ்லிம் தலைவர்கள், சிறிய மற்றும் பெரிய அரசியல்வாதிகள் எல்லோரும் தமக்கிடையிலான பகையை மறந்து, ஒன்றுபட வேண்டும் என்று சமூக செயற்பாட்டுத் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்லும் போது, அதில் தனித்துவ அரசியல் செய்வோரும் உள்ளடங்க வேண்டும் அதேபோன்று பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளடங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு பிரச்சினை எழுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக முன்னிற்கின்ற பொறுப்பு தனிக் கட்சிகளை வைத்துள்ள றவூப் ஹக்கீமுக்கும், றிசாட் பதியுதீனுக்கும், அதாவுல்லாவுக்கும் அவ்வாறான கட்சிகளின் வழிவந்த ஏனைய சில அரசியல்வாதிகளுக்கும் மட்டுமேயானதல்ல.

மாறாக, முஸ்லிம் எனச் சொல்கின்ற எல்லா அரசியல்வாதிகளும் மேற்சொன்ன தரப்பினரோடு ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் சம பொறுப்பு இருக்கின்றது. மக்களுக்கு ஒரு அநியாயம் நடக்கின்ற போது மகிந்தவுக்கு பயந்து கொண்டோ, ரணில்விக்கிரமசிங்கவுக்கு நல்ல பிள்ளை போல காண்பிப்பதற்காகவோ, முஸ்லிம் என்ற அடிப்படை கட்டமைப்புக்கு வெளியில் நின்று செயற்பட முடியாது.

ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் பகைமறக்க வேண்டும் என்று சொல்கின்ற முஸ்லிம் கட்சித் தலைவர்கள், பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மையினங்கள் மீளிணக்கம் பெற வேண்டுமென கூறுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென மேடைகளில் முழங்குகின்ற மக்கள் பிரதிநிதிகள் – தமக்கிடையே வளர்க்கப்பட்டிருக்கின்ற செயற்கையான பகையை மறந்து, ஓரணியில் திரள்வதற்கு முன்வரவும் இல்லை, அதுபற்றி பொதுத் தளத்தில் பேசுவதும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

மாறும் களநிலை
இருப்பினும் அண்மைக்காலமாக, நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள், முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை இல்லை என்பதால் அதனை சமாளிப்பதற்கான பலம் இல்லாதிருக்கின்றமை ஆகியவற்றின் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பகைமறந்து ஒரு கூட்டமைப்பாகவோ அல்லது வேறு அடிப்படையிலோ ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் சிவில் சமூகத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் சிலரும் காலங்கடந்து இதுபற்றி பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.

முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் உண்மைக்குண்மையாக ஒன்றுபட வேண்டுமென்றால் அவர்களிடையே இருக்கின்ற பகை மறக்கப்பட வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியதன் அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம் மக்களுக்கு கடந்தகாலத்தில் தாங்கள் இழைத்த அரசியல் அநீதியின் வரலாற்றை திருத்தியமைப்பதற்கான ஒரு ஒன்றிணைவாக, பகைமறத்தலாக இது அமைய வேண்டும். அதைவிடுத்து தமது அரசியல் எதிரிகளை எதிர்த்தாடுவதற்காக ஆட்களை திரட்டுகின்ற ஒரு கூட்டிணைவாக இருக்கக் கூடாது.

உண்மையில், ஏல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகைமறந்து, ஓரணியில் சேர வேண்டும் என்ற அவா இருந்தாலும் கூட நடைமுறைச் சாத்தியம் கருதி வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு அல்லது கூட்டணியை உருவாக்கி பின்னர் ஏனைய அரசியல்வாதிகளையும் அதில் உள்வாங்கிக் கொள்வதே சாலப் பொருத்தமானது என்று குறிப்பிட முடியும்.

முஸ்லிம் கூட்டமைப்பு எனும்போது முதலில் பிரதான முஸ்லிம் கட்சிகளும் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போடப்பட்ட அரசியல்வாதிகளும் ஒன்றிணைவது அவசியமாகின்றது. அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அப்படியாயின் அதன் தலைமைகளான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், அதாவுல்லா போன்றோரும், இப்போது தங்களுக்கென அரசியல் அணிகளை கொண்டியங்கும் மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் முன்னாள் செயலாலாளர் எம்.ரி.ஹசனலி போன்றோரும் இணைய வேண்டும். இந்த அணியோடு இவ்விரு மாகாணங்களிலும் உள்ள ஏனைய அரசியல்வாதிகளும் பகைமறந்து, கைகோர்க்க முடியும் என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.

அபிப்பிராயம் எப்படியிருந்தாலும் களநிலைமைகளின் படி மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகளிடையே அவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற பகையை மறக்கடிக்கச் செய்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இதற்கு முன்னர் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தமது எதிர்காலம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது. யாரோடு சேர்ந்தால் இலாபம் ஏற்படும், யாருடைய கூட்டு நட்டத்தை கொண்டு வரும் என்ற ஒரு கணக்கு இருக்கின்றது.

எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து, அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அடித்தளமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பகைமறந்து, ஒரு மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்ற போதிலும், அது இது காலவரைக்கும் சாத்திய எல்லைக் கோட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வந்தது. ‘காங்கிரஸ்களின்’ தலைவர்களோ ஹசனலி மற்றும் பசீர் அணியினரோ ஓரணியில் திரள்வது ஒருபுறமிருக்க, அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைப்பது கூட சாத்தியமில்லை என்றும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே மாட்டார்கள் என்றுமே பரவலாக கருதப்பட்டது. இந்தப் பகை மறக்கப்படக் கூடாது என்று நினைத்து அதில் பிழைப்பு நடாத்தியவர்களும் உள்ளனர்.

ஆனால், இந்நிலைமைகளில் மெதுமெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அண்மைக் காலத்தில் அவதானிக்க முடிகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் ஒரே மேசையில் அமர்ந்தமையும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இன்னுமொரு கட்சியினர் கலந்து கொள்ளாமையும் பல தரப்பினரால் கவனிக்கப்பட்டுள்ளது. தற்செயலான இச்சந்திப்பில், அரசியல்வாதிகள் இன்முகத்தோடு பல விடயங்களை பேசிக் கொண்டது போல், நிஜ அரசியலிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அந்நிகழ்வில் கலந்து கொண்ட சமூகநல செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்த வேளையில், அங்கிருந்த அரசியல்வாதிகள் அதற்கு சார்பான நிலைப்பாடுகளையும் தன்னிலை விளக்கங்களையும் அளித்தனர்.

இது சிறப்பான ஒரு முன்மாதிரியாகும். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவது ஒரு நீண்டகால செயன்முறை என்றாலும் அதற்கெல்லாம் அடிப்படையான பகைமறப்பின் ஆரம்பமாக இவ்வாறான சந்திப்புக்கள் அமையும் என்றும், மேற்படி அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்கள் சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் கருத்திட்டு, பகைமை வளர்க்கும் போக்குகள் தணிவடைவதற்கு காரணமாகலாம் என்றும் கூறலாம். ஆனால், பிரதான முஸ்லிம் கட்சித் தலைவரை இவ்வாறான நிகழ்வுகளில் காண முடியவில்லை என்பது கவலைக்குரியது. இது, பகைமறத்தல், முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிய அவரது (ஹக்கீமின்) நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அல்லது வேறு பல நியாயங்களும் கூறப்படலாம்.

இவ்விடத்தில் ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது,முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தாலும், அதனை திடுதிடுப்பென செய்ய முடியாது. முதலாவதாக, மு.கா.வை விடுத்து ஒரு கூட்டணி உருவாகும் என்றால் அதனது பிரதான நோக்கம் மு.கா.வை எதிர்த்து அரசியல் செய்வதாக இருக்கக் கூடாது. அத்துடன், அது வெறுமனே தேர்தலுக்கான குறுங்கால கூட்டாக அமையக் கூடாது. மாறாக, நீண்டகால திட்டங்கள் கையில் இருக்க வேண்டும். பகையை மறைக்காமல், பகையை மறப்பதில் இருந்தே அது உருப்பெற வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பார்த்த பலமும் கிடைக்காது, பலனும் கிடைக்காது.

பகைமறப்பதால்… ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 18.06.2017)

Web Design by The Design Lanka