பசில் ராஜபக்ஷா எம்.பி ஆவதில் சட்ட சிக்கல் உண்டா..? - Sri Lanka Muslim

பசில் ராஜபக்ஷா எம்.பி ஆவதில் சட்ட சிக்கல் உண்டா..?

Contributors

தேசியப்பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஷில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், அவர் தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசம் செய்யவுள்ளதாகவும், அதற்குரிய இறுதிக்கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஆளும் தரப்பின் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பஷில் ராஜபக்ச தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற வேண்டுமாயின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்திருந்த 17தேசியப்பட்டியல் ஆசனங்களில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் பதவி விலகுவதன் ஊடாக அப்பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 99ஆவது சரத்தின் ஏ பிரிவில் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பற்றிய ஏற்பாடு காணப்படுகின்றது.

அதனடிப்படையில் தேசிப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்களின் பெயர்கள் வேட்புமனுத்தாக்கலின் போது பெயரிட்டிருக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாடாளவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் ஏதாவதொன்றில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் காணப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு பட்டியிலிலும் பெயர் இல்லாத ஒருவர் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்பட முடியாது. அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

இதனை விடவும், இறுதியாக நாடாளுன்ற தேர்தல் நடைபெற்ற போது பஷில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அப்போதிருந்த சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அவரால் தேசியப்பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளவும் முடியாதிருந்தது.

ஆகவே யாராக இருந்தாலும் மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான முறைமையையே கடைப்பிக்க வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team