பதவி விலகத் தயாராகும் ஜனாதிபதி! » Sri Lanka Muslim

பதவி விலகத் தயாராகும் ஜனாதிபதி!

maith

Contributors
author image

நஜீப் பின் கபூர்

பதவி விலகத் தயாராகும் ஜனாதிபதி!
தேர்தல் குழப்பங்களுக்கு மத்தியில்
மைத்திரி-மஹிந்த -ரணில் சந்திப்பு!!

மைத்திரி-மஹிந்த இணைய இரு மணித்தியாலங்கள் போதும்!
கோத்தாபே ராஜபக்ஷ கைதைத் தடுத்து நிறுத்தியது யார்?
ஊழல் எதிர் நடவடிக்கைகளை விமர்சிப்போருக்கு எச்சரிக்கை!
மைத்திரி-மஹிந்த இணைந்தால் சந்திரிக்கா வெளியேறிவிடுவார்!


உள்ளுரட்;சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மக்கள் கரங்களுக்கு கிடைக்கின்ற போது அதில் இருக்கும் பல தவறுகள் தெரிய வரும் என்று நாம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவருவதற்கு முன்னரே வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். அது இன்று நடந்திருக்கின்றது.

அமைச்சர் இந்தத் தவறை திட்டமிட்டு செய்திருக்கின்றார் என்று அரசியல் வட்டாரங்கள் இன்று சுட்;டிக் காட்டுகின்றன. ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க இந்த தேர்தல் தொடர்பான தடை உத்தரவை பைசருக்கு எதிராக பைசர் வழக்கு என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதற்குக் காரணம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தரப்பினரே அதற்கு எதிராகவும் தடை உத்தரவு வாங்கி இருக்கின்றார்கள். இந்த தவறான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக வழக்காட வந்திருப்பவரும் அமைச்சரின் கையாட்களே.

நமது நாட்டு அரசியல் கலாச்சாரம் எந்தளவுக்கு சீரழிந்திருக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இத்தனை காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து விட்டு தற்போது சில நாட்களாக நாட்டிலிருந்து துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தப்பியோடி இருக்கின்றார் அல்லது ஸ்கெப்பாகி இருக்கின்றார் என்று கூட நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

இதற்கிடையில் அரசியல் களம் சூடாகி இருக்கின்ற இந்த நாட்களில் மைத்திரி – மஹிந்த இணைப்புத் தொடர்பான முக்கியமானதொரு இரகசிய சந்திப்பு குளிரான நுவரெலிய நகரில் முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க வீட்டில் நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பில் மைத்திரி தரப்பில் சுசில் பிரேம்ஜயந், ஜோன் செனவிரத்னவும் மஹிந்த தரப்பில் சீ.பி. ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் பங்கு கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தொடர்பில் மைத்திரி-மஹிந்தவுக்கு தெளிவுபடுத்திய பின்னர் அடுத்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட இருகின்றது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இணைப்புக்கு இரு தரப்பினர் மத்தியிலும் நாம் முன்பு ஒரு முறை சொன்னது போல் கடும் எதிர்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ இந்தத் தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஜனாதிபதி மைத்திரி இணைத்துக் கொள்வது தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அப்படி இணைப்பு ஏற்பட்டால் அவர் இந்த கூட்டிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இணைப்பின் அவசியம் பற்றி அமைச்சர் நிமல் சிரிபால அங்கு பேசும்போது அப்படியானால் நாங்கள் கள்வர்களுடன் கூட்டுச்சேருவதா என்று சந்திரிக்கா கேள்வி எழுப்பி இருக்கின்றார். அப்போது நிமல் சிரிபால மெடம் இப்போது மட்டும் என்ன நாங்கள் நம்பர் வன் கள்வர்களுடன் இருப்பது உங்களுக்கு புரியவில்லையா என்று திருப்பிக் கேட்டிருக்கின்றார். அதற்கு சந்திரிகா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை ஆனால் சற்று நேரத்தில் கூட்டத்திலிருந்து அவர் வெளியேறி இருக்கின்றார். இந்த இணைப்பு முயற்சிகள் வெற்றி பெற்றால் சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்தில் தான் தேர்தலுக்கு வரும் என்று தெரிகின்றது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம மைத்திரியுடன் மஹிந்ந தரப்பு இணைந்து தேர்தலுக்கு வருமாக இருந்தால் தான் இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொள்வேன்; என்று பகிரங்கமாகப்பேசி வருகின்றார்.

இது பற்றி பசிலிடம் கேட்டால் சுதந்திரக் கட்சிக்காரர்கள் தமக்குள் பேசுகின்றார்கள் போலும், நாம் மொட்டுக்காரர்கள். எம்முடன் இது பற்றி எவரும் இதுவரை பேசவில்லை. நாம் எமது தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம் என்று அவர் கூறுகின்றார். விமல் வீரவன்ச அப்படியான இணைவுக்கு வாய்ப்புக்கனே இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்.

மைத்திரி-மஹிந்த ஆகியோரை இணைக்க தனக்கு இரு மணித்தியாலங்கள் இருந்தால் போதும் என்ற உறுதியான நம்பிக்கையில் இன்னும் அமைச்சர் சுசில் செயல்பட்டு வருகின்றார். அப்படி அவர் சொல்கின்ற இணைவு சாத்தியமானால் இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும். அப்படியானால் ஹீரோ இந்த சுசில்தான் என்பதை நாம் முன்கூட்டி சொல்லி வைக்கின்றோம். ஆனால் இது கடும் முயற்சி என்பதனையும் இங்கு சொல்லி ஆக வேண்டும்.

வெள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் ஏகமனதான தீர்மானமொன்றிற்கு அவர்களால் வர முடியாமல் போயிருக்கின்றது. இந்த சந்திப்புக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், சட்டமா அதிபரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்தத் தடை உத்தரவு 133 உள்ளுராட்சி மன்றங்களைப் பாதிக்கவில்லை. எனவே அந்த இடங்களில் தான் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு கூறி இருக்கின்றார். அத்துடன் திசம்பர் 4 ம் திகதிக்கு முன்னர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பது பற்றியும் அங்கு பேசப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி கட்டம் கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நிலைப்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்கின்றது. இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால் பழைய முறையில் தேர்தலை நடத்தும் படி ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. அவர்கள் அன்று முதல் இன்று வரை இதே நிலைப்பாட்டில் தான் ஆர்வமாக இருந்து வருகின்றார்கள்.

அதே தினம் குருனாகல-நிகவரடியில் நடந்த சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் மைத்திரி ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் கடுமையாக இருப்பதை மீண்டும் அவதானிக்க முடிந்தது. தான் ஊழலுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் விமர்சிப்பேரையும் அவர் கடுமையாக சாடி இருக்கின்றார். எனக்கு பதவி எல்லாம் முக்கியமில்லை ஊழலுக்கு எதிராக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுடன் வீதியில் இறங்கிப்போராடவும் நான் தயங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரி அங்கு எச்சரித்திருக்கின்றார்.

பிரதி அமைச்சர் சுஜீவ சேரசிங்ஹ ஜனதிபதியை சில தினங்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பிணைமுறி விவகாரத்தில் மூக்குடைபட்டவர் என்பதும் ஐக்கிய தேசியக் கட்சி பிணைமுறி விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க இடம் கொடுத்தது பெரிய தவறு என்றும் பகிரங்கமாக பேசி வருகின்றார்.

பிணை முறிவிவகாரத்தில் சிக்கி இருக்கின்ற இவர் கோப் கமிட்டிக் கூட்டங்கள் நடந்த போது அர்ஜூன் அலோசியசுக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருதந்து தெரிய வந்ததால் அவர் இது விடயத்தில் கடும் கோபத்தில் இருப்பதை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடிகின்றது. மேலும் தான் அப்படி அலோசியசுடன் தொடர் கொண்டதை இவர் ஏற்றுக் கொண்டு அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார்.

தான் இந்த பிணைமுறி விவகாரம் தொடர்பில் எழுதிய புத்தகத்திற்கு தகவல்கள் பெற்றுக் கொள்ளவே அப்படித் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவிக்கின்றார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அதற்கு இரு வருடங்களுக்கு முன்னர் அவர் இது பற்றிய புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார் என்பதுதான். ஒரு பொய்யை மூடிமறைக்க இப்போது பல நூறு பொய்களைச் சொல்ல வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

சுஜிவ சேரசிங்ஹ போன்றவர்கள் இன்று ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் கருத்துக்களைக் கூறிவருவது ஏன் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள முடியும். எப்படியும் வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இந்த பினைமுறி விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.

ஜனாதிபதி நடத்துகின்ற ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போடுகின்ற முட்டுக் கட்டைகளை சுதந்திரக் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பதற்கும் பிணைமுறி விவகாரத்தில் அறிக்கை திசம்பர் 8ம் திகதி கிடைக்கப் பெற்றதும் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

சுதந்திரக் கட்சியை இணைக்கின்ற முயற்சியில் அமைச்சர் சுசில் வெற்றி பெறுகின்றார் என்று எடுத்துக் கொண்டு நாட்டில் அரசியலை ஆராய்கின்ற போது நாட்டில் என்ன நடக்கும் என்று இப்போது பார்ப்போம்.

இந்த இணைப்புக்காக ராஜபக்ஷாக்களுக்கு எதிராக இருக்கின்ற பல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களுக்கு சலுகைகளை மைத்திரி செய்ய வேண்டி வரும். அப்போது அதனை ஐக்கிய தேசியக் கட்சியும் ஜேவிபியும் தமது முக்கிய மேடைப் பேச்சாக எடுத்துக் கொள்ள முடியும். இது இன்று நல்லாட்சியை முன்னெடுக்கின்ற மைத்திரி – ரணில் உறவில் பாரிய விரிசலை உண்டுபண்ணும்.

ஜனாதிபதி மைத்திரி நன்றிகெட்ட ஒரு மனிதன் எங்களுடைய வாக்கை எடுத்துக் கொண்டு இன்று மஹிந்தவுடன் இந்த ஆள் குடித்தனம் நடத்துவது நாகரிகம் இல்லாத வேலை என்று அவர்கள் பேசுவார்கள். அரசியலில் நிரந்திர நண்பனும் பகைவனும் இல்லை என்பதனை இவர்கள் அப்போது மறந்து இந்த விமர்சனத்தை செய்வார்கள்.

மஹிந்தவைப் போல் ரணில் ஆட்களும் பெரிய ஊழல்பேர்வழிகள் எனவே தான் மஹிந்த தரப்புடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்தால் என்ன என்றும் மைத்திரி யோசிக்க இடமிருக்கின்றது. இதற்கிடையில் ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சிக்காரர்களைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்தவுடன் இரகசிய சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்கள் என்று கடந்த வாரம் ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது.

இன்று மைத்திரி பெரும் எண்ணிக்கையான சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை மஹிந்த ஆதரவாளர்கள் என்ற காரணத்தால் பதவியிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களுக்குப் புதியவர்களை நியமித்திருக்கின்றார். இணைப்பு வருகின்றது என்றால் தேர்தல் முன்னெடுப்புக்களில் பழைய புதிய அமைப்பாளர்கள் மத்தியில் கடும் மோதல் ஏற்படும். அப்போது பலர் கட்சியிலிருந்து வெளியேற இடமிருக்கின்றது.

இப்போது பொதுவாக கட்சிகள் தமது வேட்பாளர்களை இனம் கண்டிருக்கின்றது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைகின்ற போது இதில் பாரிய மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது. அப்போது 50 க்கு 50 விட்டுக் கொடுப்பு என்று வந்தாலும் அரைவாசிப்பேரை வேட்பு மனுவிலிருந்து nவிளியேற்ற வேண்டி வரும். அப்போது அங்கும் கடும் குழப்ப நிலை தோன்ற இடமிருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போது மைத்திரி -மஹிந்த அணி என்ற வெட்டுக் கொத்துக்கள் அங்கு நடக்க இடமிருக்கின்றது.

இதற்கிடையில் வீரகெட்டியாவில் அமைந்துள்ள தனது தந்தையின் ஞாபகார்த்த நூதனசாலையை அரச பணத்தில் நிறுவியது தொடர்பில் கடந்த 22ம் திகதி கோத்தாபே ராஜபக்ஷ கைது செய்யப்பட இருந்தார். நாட்டிலுள்ள சில முக்கிய பௌத்த குருமார் இந்தத் தகவலை அறிந்ததும் உடனே ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்திருக்கின்றார்கள் அவர்கள் கோத்தா கைதாவதை தடுக்குமாறு அங்கு கேட்டிருக்கின்றார். அதன் பின்னர் கோட்டா கைது தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

நீதி சட்டம் என்ற விடயங்களில் தான் ஒருபோதும் தலையிடுகின்ற ஆளில்லை என்று ஜனாதிபதி மைத்திரி அடிக்கடி மேடைகளில் பேசுவதையும் நாம் பார்க்கின்றோம் காவி உடைக்காரர்களுக்கு அஞ்சியோ அல்லது தேர்தலில் மஹிந்த தரப்புக்கு தனது நல்லெண்ணத்தைக் காட்டவோ இந்தக் காரியத்தை அவர் செய்திருக்கக் கூடும் என்று நாம் கருதுகின்றோம். இதற்கிடையில் இணைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்கு தான் பிரதமர் பதவி கோறுவதாக சொல்லப்படுகின்ற கதைகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, தான் அப்படி எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் மிக மோசமடைந்து வருகின்ற அரசியல் நிலமைகள் தொடர்பாக பிரதமர் ரணில் மைத்திரியை அவசரமாக சந்தித்துப்பேச இருக்கின்றார் என்றும் தெரிய வருகின்றது. எப்படியும் எதிர்வருகின்ற வாரங்கள் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு மிக்க நாட்களாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

நன்றி: 26.11.2017 ஞாயிறு தினக்குரல்

Web Design by The Design Lanka