பதுளை மாவட்ட முஸ்லீம்களுக்கு சோதனை - Sri Lanka Muslim
Contributors

பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்

.
முற்போக்கு முஸ்லீம் காங்கிரஸ் முதல்வர் அறிக்கை

 

பதுளை மாவட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் பஷீர் நியாஸ்தீன் 2014.08.22ம் திகதி தினக்குரல் நாளிதழில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் எமது கவனத்தை ஈர்த்துள்ளன. ஊவா மாகாண சபையின் முஸ்லீம் பிரதநிதித்துவத்தை இல்லாதொழிக்க ஆளும்தரப்பு சதிசெய்கிறதென அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 

எல்லாச் சதிகளையும் முறியடிக்கக்கூடிய சக்தி படைத்தவன் அல்லாஹ் என்ற கோட்பாட்டின் மீது கூடிய அளவு நம்பிக்கை கொண்டவர்களாக பதுளை மாவட்ட முஸ்லீம் வாக்காளர் இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என்று முற்போக்கு முஸ்லீம் காங்கிரஸ் முதல்வர் சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம்லெப்பை பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

எண்ணிக்கையில் கூடிய தொகுதியினரை குறைந்த தொகையினரான தியாகிகள் வெற்றி கொண்ட சம்பவங்கள் நமது வரலாற்றிலே பதிவாகியிருப்பதை நாம் அனைவரும் ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும் பதுளை மாவட்ட முஸ்லீம் வாக்காளர்கள் சகல வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமையுடனும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செய்றபடுவார்களாயின் இரட்டை இலையின் வழியாக இன்ஷா அல்லாஹ் முஸ்லீம் குரல் ஊவா மாகாண சபையில் ஒலிப்பதற்கு வாய்ப்புண்டு என்று நாம் நம்புகிறோம்.

 

சிங்கள மன்னர் காலம் முதல் சிறப்புடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் எவையென்று இந்த சந்தர்ப்பத்தில் விபரிக்கத் தேவையில்லை. இருப்பினும் மேற்குத் திசையில் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தளர்ந்த நிலையில் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை குறிப்பிடாமலிருக்க முடியாது.

 

இதன் பின்னணியில் பாராளுமன்றத்திலே எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அரசியல் கட்சிகள் புரிந்துணர்வுடன் ஒன்று சேர்ந்து பதுளை முஸ்லீம் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைப்பதற்காக துணிச்சலுடன் அம் மாவட்டத்தில் தமது அபேட்சகர்களை முன்னிறுத்தியுள்ளனர். நாம் இந்த நாட்டில் எதிர் நோக்கும் பல்வேறு சவால்களை முறியடிப்பதற்காக இவ்விடயத்தில் நாம் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது. முஸ்லீம்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால், முஸ்லீம் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான பொன்னான சந்தர்ப்பமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதலளிக்கும் ஓர் ஏற்பாடாகவும் இதனைக் கருதலாம். நமக்கு எதிரான சக்திகள் நம்மைப் பிரித்துவைக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம்.

 

மாகாணத்தில் எந்தத் தேசிய கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறப்போகின்றது. ஆட்சியமைக்கப் போகின்றது என்பதெல்லாம் எமது உடனடிப்பிரச்சினைகள் அல்ல. அதே போல எந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதி தெரிவாகப்போகின்றார் என்பதும் நமது பிரச்சினையல்ல மேற்குறித்த இவ்விடயங்கள் சம்பந்தமாக வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கூறி எமது கவனத்தை திசை திருப்புவதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாகாண அரசாங்கம் பற்றியோ, பாராளுமன்றத் தேர்தல் பற்றியோ, ஜனாதிபதில் தேர்தல் பற்றியோ தற்போது கவனம் செலுத்தத் தேவையில்லை. இவ்வேளையில் எமது பிரச்சினையெல்லாம் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றியது மட்டும்தான்.

 

 பதுளை மாவட்ட முஸ்லீம்கள் ஒன்று படுவதன் மூலம்தான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய ‘விளைதொகை’ தேர்தல் முடிவில் கிடைக்கும். ஒன்றுபட்டு இரட்டை இலைகளைத் தெரிவு செய்யாவிட்டால் நமது இலக்கை அடைய இயலாது போய்விடும்.

 
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க சதி செய்வதாக முதன்மை அபேட்சகர் பஷீர் நியாஸ்தீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அது சதி மட்டுமல்ல முஸ்லீம்களுக்கு எதிரான சோதனையும் கூட என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லீம்கள் இந்த விடயத்திலாவது ஒன்று பட்டு தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வார்களா என்பதற்கான சோதனையே தற்போது நடத்தப்படுகின்றது. அதற்கான விடை அல்லது எமது தலைவிதி பதுளை மாவட்ட முஸ்லீம் சகோதரர்களின் கைகளினால்தான் எழுதப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team