பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்? - Sri Lanka Muslim

பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்?

Contributors

”எனது மாமா உயி­ரி­ழந்து சரி­யாக 70 நாட்­களின் பின்­னரே அவ­ரது ஜனாஸா அடக்கம் செய்­யப்­பட்­டது. ஒருவர் மர­ணித்தால் அவருக்காகச் செய்ய வேண்­டிய தொழுகை, பிரார்த்­தனை, தர்மங்களைக் கூட செய்ய முடி­யாத நிலை­யில்தான் நாங்கள் இவ்வளவு நாட்­களும் இருந்தோம். இக்காலப்­ப­கு­தியில் ஜனா­ஸாவை எரித்­து ­வி­டு­வ­தற்கு அதி­கா­ரிகள் முயன்­றனர். அடிக்­கடி எமது வீட்டுக்கு பொலிசார் வந்து எரிப்­ப­தற்­கான அனு­ம­தியைப் பெற முயற்­சித்­தனர். இதனால் நாம் முகங்­கொ­டுத்த மன உளைச்­சல்­களை வார்த்­தை­களால் கூற முடி­யாது’’ என்­கிறார் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த அப்துல் ஜலீல் முகம்மட் அம்ஜத்.

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்வதற்கான அனு­மதி வழங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்­ளிக்­கி­ழமை முதல் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் பிரிவுக்­குட்­பட்ட காகித நகர் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள மஜ்மா நகரில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்­டுள்­ளன.

முதல் நாளில் அடக்கம் செய்­யப்­பட்ட 9 ஜனா­ஸாக்­களுள் அம்­ஜத்தின் மாமனார் மெள­லவி சித்­தீக்கின் ஜனா­ஸாவும் ஒன்று. கடந்த 2020 டிசம்பர் 26 இல் உயி­ரி­ழந்த அவ­ரது ஜனாஸா நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் காத்­தான்­குடி தள வைத்­தி­ய­சாலை பிரேத அறை குளிரூட்டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இவ்­வாறு அடக்கம் செய்­யப்­பட்­டது.

அவர் உயி­ரி­ழந்த நாள் முதல் ஜனா­ஸாவை அடக்கம் செய்யும் வரை உடலைப் பாது­காப்­ப­தற்­காக தாம் எடுத்த முயற்­சி­களும் அதனால் முகங்­கொ­டுத்த மன உளைச்­சல்கள் பற்­றியும் அம்ஜத் எம்­முடன் மனந்­தி­றந்து பேசினார்.

அடக்கம் செய்யும் வரை நிம்­ம­தி­யில்லை
‘‘மர­ணித்­த­வரை அடக்கம் செய்­வதை விடவும், அவ­ரது உடலை எரிப்ப­தி­லி­ருந்து பாது­காத்து எமது பொறுப்பில் எடுத்­து­விட வேண்டும் என்­பதே எமது ஒரே நோக்­க­மா­க­வி­ருந்­தது. ஜனாஸா எரிக்கப்­பட்­டு ­விட்­ட­தாக சிலர் வதந்­தி­களைப் பரப்பியமையும் எமக்கு மிகுந்த சிர­மங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. உங்கள் மாமாவின் ஜனா­ஸாவை எரித்­து­ விட்­டார்­க­ளாமே என்று சிலர் எம்­மிடம் வந்து கேட்­ட­போது வீட்­டி­லி­ருந்த எல்­லோரும் அழத் தொடங்­கி­ வி­டு­வார்கள்.

குறிப்­பாக வீட்­டி­லி­ருந்த பெண்கள் இதனால் கடு­மை­யாகப் பாதிக்கப்­பட்­டார்கள். சாப்­பி­ட­மாட்­டார்கள், தூங்­க­மாட்­டார்கள், எந்த நேரமும் வாப்­பாவைப் பற்­றியே சிந்­தித்துக் கொண்­டி­ருப்­பார்கள். வாப்­பாவின் ஜனாஸா இருக்­கி­றதா அல்­லது எரித்­து­ விட்­டார்­களா என்­பது தெரி­யாமல் குடும்­பத்­தினர் பட்ட கஷ்­டங்கள் சொல்ல முடியா­தவை. எம்மால் எமது அன்­றாட தொழில்­களில் கூட கவனம் செலுத்த முடி­ய­வில்லை. உண்­மையைச் சொல்லப் போனால் மாமாவின் ஜனா­ஸாவை அடக்கம் செய்த பின்­னர்தான் நாம் நிம்மதியாகத் தூங்­கினோம்’’ என்றும் அம்ஜத் கூறினார்.

இய­லாமை உணர்வு
பொது­வா­கவே முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை மர­ணித்­த­வர்­களை 24 மணி நேரத்­தினுள் மிக விரை­வாக அடக்கம் செய்­வது வழக்கம். இக் காலப்­ப­கு­தியில் அவர்­க­ளுக்­கான தொழு­கைகள், பிரார்த்­த­னைகள் இடம்­பெ­று­வ­துடன் அடக்கம் செய்­தது முதலே அவர்­க­ளது பெயரில் நன்­மையை வேண்டி அன்­ன­தா­னங்கள் செய்­கின்ற பணி­களும் ஆரம்­ப­மாகும்.

எனினும் கொவிட் மர­ணங்­களைப் பொறுத்­த­வரை இந்த வழக்­க­மான கிரி­யை­களைச் செய்­வ­தற்­கான வாய்ப்­புகள் இக் குடும்­பங்­க­ளுக்குக் கிடைக்­கா­மை­யா­னது மர­ணித்­த­வர்­க­ளுக்­கான இறுதிக் கடமைகளைக் கூட தம்மால் செய்­ய­மு­டி­யாமல் போய்­விட்­டதே என்ற இய­லாமை உணர்வை தோற்­று­வித்­துள்­ளது.

இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பல­வந்த எரிப்பு விவ­காரம் தொடர்பில் அண்­மையில் லண்­டனைத் தள­மாகக் கொண்டு செயற்படும் இலங்கை மக்கள் உரி­மை­க­ளுக்­கான குழு விரி­வான ஆய்­வ­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.

இவ்­வ­மைப்பின் பிர­சார முகா­மை­யாளர் அப்துல் பாஸிர், தமது ஆய்வுக்­காக இக் குடும்­பங்­களைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்­க­ளது மனக் கவ­லை­களை தம்மால் உணர முடிந்­த­த­தாக குறிப்பி­டு­கிறார்.

நெருப்­புக்குப் பலி கொடுத்­து ­விட்­டோமே
‘‘தகவல் திரட்டும் நோக்கில் எரிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­களை நாம் தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்­த­ளவு தூரம் உள­வியல் ரீதி­யான அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளார்கள் என்­பதை உணர முடிந்­தது.

சுமார் 30 குடும்­பங்­க­ளுடன் நாம் தொடர்பு கொண்டோம். அர­சாங்கம் அடக்­கத்­திற்கு அனு­மதி கொடுத்த பின்னர் இவர்­க­ளது கவ­லைகள் மேலும் அதி­க­ரித்­துள்­ளன. தனது தாயோ தந்­தையோ உற­வி­னரோ அடக்கம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் மர­ணித்­தி­ருக்­க­லாமே அநி­யா­ய­மாக அவர்­களை நெருப்­புக்குப் பலி கொடுத்­து­ விட்­டோமே என்று அந்தக் குடும்­பங்கள் கத­று­கின்­றன.

இவை எல்­லா­வற்­றையும் விட இக் குடும்­பங்­களில் பலரின் மன அழுத்­தங்கள் அத­க­ரிப்­ப­தற்குக் காரணம் கொவிட் 19 தொடர்­பான எந்­த­வித அறி­கு­றி­களும் அற்ற நிலையில் மர­ணித்த தமது உறவினர்களின் உடல்கள் எரிக்­கப்­பட்­டு­ விட்­டன என்­ப­தே­யாகும்.

நீண்ட கால­மாக வேறு நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள், வெளித்­ தொ­டர்­பு­க­ளின்றி பாது­காப்­பான முறையில் வீடு­க­ளி­லி­ருந்து மர­ணித்தும் கூட அவர்­க­ளுக்கு கொவிட் தொற்று உள்­ள­தாக கூறி, பரி­சோ­தனை அறிக்­கை­களைக் கூட காண்­பிக்­காது பல­வந்­த­மாக எரித்­த­மை­யா­னது இக் குடும்­பங்­களை மேலும் கஷ்­டத்தில் ஆழ்த்தியுள்­ளது’’ என்றும் அப்துல் பாஸிர் குறிப்­பிட்டார்.

ஏரா­ள­மான சம்­ப­வங்கள்
குடும்­பங்­களை மன அழுத்­தங்­க­ளுக்கும் தேவை­யற்ற நெருக்கடிகளுக்கும் உள்­ளாக்­கிய இவ்­வா­றான ஏரா­ள­மான சம்பவங்களை இங்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பிட முடியும்.

44 வய­தான பாத்­திமா ரினோஸா 2020 மே 5 ஆம் திகதி கொழும்பு ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையில் மர­ணித்தார். எனினும் அவ­ரது உடலை எரித்த பின்­னரே அவர் மர­ணித்­து ­விட்­ட­தாக குடும்­பத்­தி­ன­ருக்கு வைத்­தி­ய­சாலை நிர்­வா­கிகள் அறி­வித்­தனர்.

உட­ன­டி­யாக ரினோ­ஸா­வுடன் தொடர்­பி­லி­ருந்த குடும்­பத்­தினர் அனை­வரும் நாட்டின் பல பகு­தி­க­ளி­லு­முள்ள தனி­மைப்­ப­டுத்தல் முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர். எனினும் மறுநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற வைத்­தியர் ஒருவர், ரினோ­ஸாவின் பி.சி.ஆர் பரி­சோ­தனை முடிவில் அவ­ருக்கு தொற்று இல்லை எனக் கண்­ட­றிந்­துள்­ள­தா­கவும் அவர் தவ­று­த­லாக எரிக்கப்பட்­டு­ விட்­ட­தா­கவும் கூறினார். இத­னை­ய­டுத்து தனிமைப்படுத்­த­லி­லி­ருந்து குடும்­பத்­தினர் மீண்டும் அவர்­க­ளது வீடுக­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர்.

‘‘எனது தந்தை இன்னும் அழுது கொண்டே இருக்­கிறார். தாயாரைப் பிழை­யான முறையில் எரித்­து ­விட்­டார்­களே என்­பதை அவரால் தாங்க முடி­யா­துள்­ளது. எனது மனைவி மர­ணித்­து­ விட்டார் என்ற செய்­தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர் எரிக்கப்­பட்­டதை ஒரு­போதும் சரி ­கா­ண­மாட்டேன் என வாப்பா அடிக்கடி கூறிக்­ கொண்­டே­யி­ருக்­கிறார்’’ என ரினோ­சாவின் நான்கு பிள்­ளை­களில் ஒரு­வ­ரான முகமட் சாஜித் குறிப்­பி­டு­கிறார்.

முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி கத்­தோ­லிக்­கர்­களும் தமது உற­வு­களை அடக்கம் செய்­வ­தற்­கான உரிமை மறுக்­கப்­பட்­டதை கவலையுடனேயே நினை­வு­ப­டுத்­து­கின்­றனர்.

கொழும்பு ராஜ­கி­ரி­யவில் வசித்த ராஜேந்­திரன் ரவீந்­திரன் 2020 நவம்பர் 11 இல் படகு விபத்து ஒன்றில் மர­ணித்தார். திய­வன்னா ஓயாவில் மீன் பிடிக்கச் சென்ற போது இரா­ணு­வத்­தி­னரின் படகு ஒன்று மோதியே இவ்­வி­பத்து நிகழ்ந்­தது. எனினும் ரவீந்­தி­ரனின் சட­லத்தில் கொவிட் தொற்று உள்­ள­தாகக் கூறி அவ­ரது சட­லத்தை எரித்­து­ விட்­டனர்.

இக் குடும்பம் வீதி­யி­லி­றங்கி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதை ஊடகங்கள் ஒளி­ப­ரப்­பின. தமது கண­வரின் உடலைத் தராது, மரணத்­திற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய பிரேத பரி­சோ­தனை கூட நடாத்­தாது சட­லத்தை எரித்­ததை ஏற்க முடி­யாது அக் குடும்பம் இன்றும் மிகுந்த கவ­லையில் உள்­ளது.

அதே­போன்று பிறந்து 20 நாட்­க­ளி­லேயே மர­ணித்த ஷெய்க் பாஹிம் எனும் குழந்­தையின் சடலம் எரிக்­கப்­பட்ட சம்­பவம் அக் குடும்பத்தினரை மாத்­தி­ர­மன்றி முழு நாட்டு மக்­க­ளை­யுமே பாதித்தது.

அக் குழந்­தையின் புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்தும் எல்­லோரும் தமது குழந்தையொன்றை பறி­ கொ­டுத்த உணர்­வுக்குத் தள்­ளப்­பட்­டனர் என்­பதே உண்மை.

இக் குழந்தை எரிக்­கப்­பட்ட விவ­கா­ரமே அடக்கம் செய்­வ­தற்கு அனும­திக்­கக்­ கோரும் போராட்­டத்­திற்கு உணர்­வு­பூர்­வ­மான உத்வேகத்­தை­ய­ளித்­தது.

‘‘எமது குழந்­தையின் முகத்தைக் கூட பார்ப்­ப­தற்கு எம்மை அனுமதிக்­க­வில்லை. தாயா­ருக்கு கூட குழந்­தையைக் காட்டவில்லை. மாறாக உங்கள் குழந்­தையின் சட­லத்தை எரிக்கப் போகிறோம். தக­னச்­சா­லைக்கு வாருங்கள் என என்னை அழைத்தார்கள். எனது பச்­சிளம் குழந்­தையின் உடல் எரிந்து சாம்பரா­கு­வதை எப்­படி என்னால் நேரில் பார்க்க முடியும். இன்றும்கூட குழந்­தையின் புகைப்­ப­டத்தைப் பார்த்துப் பார்த்து நாம் எல்­லோரும் அழுது கொண்­டி­ருக்­கிறோம்’’ என்­கிறார் தந்தை பாஹிம்.

அவர் ஒரு முச்­சக்­கர வண்டி சாரதி. கொவிட் முடக்கம் கார­ண­மாக தொழிலைக் கூட இழந்து பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்த நிலையில் குழந்தை மர­ணித்து எரிக்­கப்­பட்­ட­மை­யா­னது குடும்பத்தை உள ரீதி­யாக கடு­மை­யாக பாதித்­துள்­ளது.

உள­வள சிகிச்சை பெறும் குடும்­பங்கள்
கொவிட் தொற்று ஆரம்­பித்து சட­லங்கள் எரிக்­கப்­படத் தொடங்கியதி­லி­ருந்து வாராந்தம் ஆகக் குறைந்­தது 6 பேரா­வது தன்னைச் சந்­தித்து உள­வள ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்டதா­கவும் இந்­நிலை அடக்கம் செய்ய அனு­மதி கிடைக்கும் வரை தொடர்ந்­த­தா­கவும் உள­வியல் நிபுணர் கலா­நிதி லுக்­மானுல் ஹக்கீம் தெரி­வித்தார்.

‘‘மர­ணித்தால் நம்­மையும் எரித்­து­ வி­டு­வார்­களோ என்ற அச்­சத்தில் ‘பத­க­ளிப்பு’ நிலைக்குச் சென்­ற­வர்­களே இவர்­களில் அதி­க­மானோர். தமக்கு ஏற்­பட்­டுள்­ளது மன அழுத்தம் என்­பதை அறி­யாது அதனை மார­டைப்பு எனக் கருதி சிகிச்­சைக்­காக சென்ற பலர் என்­னிடம் சிகிச்­சைக்­காக அனுப்­பப்­பட்­டனர். இவர்­க­ளிடம் தூக்கக் குறை­பாடு, தூக்­கத்தில் அச்­சத்­தினால் விழித்தெ­ழு­வது போன்ற அறி­கு­றிகள் காணப்­பட்­டன.

அடுத்த சாரார் எரிக்­கப்­பட்ட ஜனா­ஸாக்­களின் நெருங்­கிய உறவினர்கள். சுமார் 8 பேர் வரை இவ்­வாறு என்­னிடம் சிகிச்­சைக்­காக வந்­தார்கள். தாயின் உடலை எரித்­ததால் மனச்­சோர்வு நிலைக்குச் சென்ற ஒருவர் என்­னிடம் வந்தார். நண்பர் ஒரு­வரின் உடல் எரிக்கப்பட்­டதால் பத­க­ளிப்பு நிலைக்குச் சென்ற மற்­றொ­ரு­வ­ரையும் நான் சந்­தித்தேன். இன்று தகனம் செய்­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் பாதிக்­கப்­ப­டு­வோரின் எண்­ணிக்கை குறைந்­தாலும் ஏலவே எரிக்கப்பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் இன்­னமும் அதன் தாக்கங்களிலி­ருந்து மீள­வில்லை’’ என்றும் குறிப்­பிட்டார்.

இவ்­வாறு எரிக்­கப்­பட்ட நபர் ஒரு­வரின் குடும்­பத்­திற்கு தான் சிகிச்சை­ய­ளித்த அனு­ப­வத்தை மற்­றொரு உளவளத்துணையாளரான ஹாஜரா சதாம் பகிர்ந்து கொண்டார்.

‘‘அக்­ கு­டும்­பத்தின் தூணாக இருந்த கணவர் மர­ணித்து அவ­ரது உடல் எரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மனை­வியும் மூன்று பிள்­ளை­களும் மிகுந்த மன அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர்.

10 வய­தான இளைய பிள்­ளைக்கு தனது தந்­தையின் உடல் எரிக்கப்பட்ட விடயம் இது­வரை தெரி­யாது. அக் குழந்தை தனது அறையை விட்டு பல வாரங்­க­ளாக வெளியில் வரவே இல்லை. மற்றொரு மகள் இம்­முறை சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்றினாலும் தந்­தையின் மர­ணத்­தினால் ஏற்பட்ட பாதிப்பினால் அப்பரீட்சைக்கு சரிவர முகங்கொடுக்கவில்லை. தாயாரும் இந்த அதிர்ச்சியிலிந்து மீள முடியாத நிலையிலேயே இன்று வரை இருக்கிறார்’’ என்றார்.

நிறுவனமயப்பட்ட வேலைத்திட்டம் தேவை
இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்குத் தேவை­யான மானசீகமான ஆத­ரவை வழங்­கு­வது அர­சாங்­கத்­தி­னதும் தொண்டு நிறு­வ­னங்­க­ளி­னதும் கடப்­பாடு என்றும் உள­வ­ளத்­து­ணை­யா­ள­ரான ஹாஜரா சதாம் குறிப்­பி­டு­கிறார்.

இவ்­வா­றான குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கக் கூடிய ஒரு பொறிமுறையை ஆரம்­பிப்­பதன் மூல­மாக இவர்­களை ஓர­ள­வுக்கு பாதிப்­பி­லி­ருந்து மீட்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை இம் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்து அவர்­க­ளது மனக் கவ­லை­களைக் கேட்­ட­றி­வ­தற்­கான பொறிமுறையொன்றை ஏற்­ப­டுத்­து­வது கூட அவர்­களை இதி­லி­ருந்து மீட்­ப­தற்­கான ஒரு வழி என உள­வியல் நிபுணர் கலா­நிதி லுக்­மானுல் ஹக்கீம் கூறு­கிறார்.

‘‘இது­வொரு நீண்ட பொறி­முறை. அவர்கள் அதிர்ச்­சியில் இருக்கிறார்கள். அவர்­க­ளுக்கு முதலில் ஆன்­மிக ரீதி­யான வழிகாட்டல்கள், ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட வேண்டும். அடுத்­தது உளவள சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதனை ஒரு நிறுவனமயப்பட்ட வகையில் முன்னெடுப்பதே சிறந்தது என்றார்.

Vidivelli

Web Design by Srilanka Muslims Web Team