பலஸ்தீனம் முதல்முறை ஐ.நாவில் வாக்குப் பதிவு - Sri Lanka Muslim

பலஸ்தீனம் முதல்முறை ஐ.நாவில் வாக்குப் பதிவு

Contributors

ஐ. நா. பொதுச்சபையில் பலஸ்தீனம் முதல் முறையாக வாக்களிப்பில் ஈடுபட்டது. சர்வதேச பிரதிநிதிகளின் கரகோசத்திற்கு மத்தியில் ஐ. நா.வுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் நேற்று முன்தினம் தமது தேசம் சார்பில் முதல் வாக்கை பதிவுசெய்தார்.

ஐ. நா. வில் முழு அங்கத்துவம் பெறுவதற்கான ஓர் அடையாளம் என அறிவித்துவிட்டே அவர் இந்த வாக்கை அளித்தார்.

முன்னாள் யுகோஸ்லாவியா தொடர்பிலான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியை தேர்வு செய்யும் வாக்கெடுப்பிலேயே பொதுச்சபையின் 193 அங்கத்துவ நாடுகளுடன் பலஸ்தீனமும் பங்கேற்றது. இந்த வாக்கெடுப்பின் மூலம் டொகோ நாட்டின் கெப்பி குமலியோ அபென்டே நீதிமன்றத்திற்கு தேர்வானார்.

“ஐக்கிய நாடுகளில் பலஸ்தீன மக்களின் போராட்ட வரலாற்றில் இது மிக மிக முக்கியமான நிகழ்வாகும்” என்று மன்சூர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வத்திக்கான் போன்று ஐ. நா.வின் அங்கத்துவம் அற்ற நாடாக அந்தஸ்து பெற்ற பின்னர் வாக்களிப் பொன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாகவே இது பதிவானது. இந்த வாக்கு பதிவு பலஸ்தீன தனிநாட்டு அந்தஸ்தை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

ஐ. நா. வில் பலஸ்தீன் முழு அங்கத்துவத்தைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்த மன்சூர், அந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா எதிராக சமிக்ஞை காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார். பலஸ்தீனின் தற்போதைய ஐ. நா. அங்கத்துவ அந்தஸ்தின்படி அதனால் ஒருசில விடயங்களில் வாக்களிக்கும் உரிமை இருப்பதோடு ஒருசில சர்வதேச அமைப்புகளில் இணையவும் தகுதியுள்ளது.

சர்வதேச அமைப்புகளில் அங்கத்துவம் பெறும் தகுதியை பயன்படுத்தி ஹேகிலிருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் நிறுவப்பட்ட ரோம் சாசனத்திலும் கையொப்பமிடப் போவதாக பலஸ்தீன் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

எனினும் பலஸ்தீனம் இதுவரையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையவில்லை. ஆனால் அது ஐ. நா. வின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இணைந்துள்ளது.

பாரிஸை மையமாகக் கொண்டு இயங்கும் யுனெஸ்கோவில் பலஸ்தீனத்தை சேர்த்ததற்கு எதிர்ப்பு வெளியிட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அந்த அமைப்புக்கான நிதியை நிறுத்தியது.

இதனால் அமெரிக்கா, இஸ்ரேலின் யுனேஸ்கோவில் வாக்களிக்கும் உரிமை இம்மாத ஆரம்பத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் ஐ. நா. வில் முழு அங்கத்துவம் பெறும் முயற்சிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.

பலஸ்தீன முழு அங்கத்துவ விண்ணப்பத்திற்கு எதிராக பாதுகாப்புச் சபையில் வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team