பலஸ்தீன விடுதலைக்காக போராடிய கிருஸ்தவ பேராயரின் குரல் ஓய்ந்தது! » Sri Lanka Muslim

பலஸ்தீன விடுதலைக்காக போராடிய கிருஸ்தவ பேராயரின் குரல் ஓய்ந்தது!

balas

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siraj Mashoor 


ஜெருஸலத்தின் முன்னாள் பேராயர் ஹிலாரியன் கபூச்சி (Hilarion Capucci)!
ஒரு பலஸ்தீன விடுதலைப் போராளியின் குரல் ஓய்ந்தது!!
பேராயர் இறந்து ஒரு கிழமையாகி விட்டது. ஆனாலும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய, மிக முக்கியமான பலஸ்தீன விடுதலைப் போராளி இவர்.

2017 ஜனவரி 01ஆம் திகதி, ஜெருஸலத்தின் முன்னாள் பேராயர் ஹிலாரியன் கபூச்சி , தனது 94 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். தனது அரசியல் செயற்பாடு காரணமாக புலம் பெயர்ந்திருந்த அவர், ரோம் நகரிலேயே மரணித்தார். ‘அரேபியரின் பேராயர்’ (Archbishop of the Arabs) என்று அன்பாக அழைக்கப்பட்ட அவர், வாழ்நாள் முழுவதும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் குரலாகவே இருந்து வந்தார்.

1960 களில் பலஸ்தீனத்தின் மக்கள் தழுவிய அறிவுஜீவியாக (Public Intellectual) மதிக்கப்பட்டார். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் உத்தியோகப்பற்றற்ற தூதுவர் என வர்ணிக்கப்படும் அளவுக்கு, சியோனிச இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுதி, பேசி, உரையாற்றி தனது பங்களிப்பை வரலாற்றில் பதிவு செய்தார். “யேசுநாதர்தான் முதலாவது ‘பிதாயீன்’ (Fidayeen) – எதிர்ப்புப் போராளி. நான் அவரைப் பின்பற்றுகிறேன்” என்று பிரகடனம் செய்தவர் அவர். விடுதலை இறையியலின் (Liberation Theology) மூல வேரை மிகச் சரியாக உணர்ந்தவர்.

“பேராயர் என்பவர் மேய்ப்பரின் பொறுப்பையே சுமந்துள்ளார். தன்னுடைய மந்தையை ஓநாய் அணுகுகிறபோது, மேய்ப்பன் தன்னைத் தியாகம் செய்து அந்த மந்தையைக் காப்பாற்ற வேண்டும்.

வன்கொடுமைக்குள்ளான பலஸ்தீன மக்களே எனது மந்தைகள்” என்று, முன்பொரு முறை வொஷிங்டனில் இடம்பெற்ற பாரபட்சத்திற்கெதிரான அமெரிக்க அரபு கவுன்சிலின் நிகழ்வொன்றில் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டிருந்தார்.

1965 ஜனவரி 01 இல் பலஸ்தீனப் புரட்சி அறிவிக்கப்பட்டபோது, அதைப் பகிரங்கமாக ஆதரித்தார். யாசிர் அரபாத்துடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார்.
1974 இல் தனது காரில் 200 றாத்தல் கிரனைட்டுகள், ரைபிள்கள் அடங்கிய வெடிபொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேலிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, 12வருட சிறைத் தண்டனைக்கு ஆளானார். இந்த வெடிபொருட்களை பலஸ்தீன விடுதலை இயக்கத்தினரிடம் (PLO) ஒப்படைப்பதே அவரது திட்டமாக இருந்தது. இவருக்கு ஆதரவாக பலஸ்தீன மக்கள் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருந்தனர்.

“நீங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், நாஸிகளிடமிருந்து யூதர்களைப் பாதுகாப்பதற்காக, ஆயர்கள் ஆயுதங்களைக் கடத்தியிருக்கின்றனர். இதற்காக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தங்களது உயிரையும் கொடுத்துள்ளனர். அரேபியரைக் காப்பாற்றத் தயாரான ஒரு மனிதரை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொரு பாதிரியாரான ஐந்தாவது மெக்சிமோஸ்.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முன்னெடுத்த ஈராக் யுத்தத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். 2010 இல் காஸா மீதான முற்றுகையை முறியடிப்பதற்காக துருக்கியிலிருந்து சென்ற ‘மாவி மர்மரா’ கப்பலில், முன்னாள் பேராயர் ஹிலாரியன் கபூச்சியும் பயணித்தார். (அவர் கப்பலில் இருந்து கொண்டு பைபிளை வாசிக்கும் படம் இணைக்கப்பட்டுள்ளது.) அதில் 09 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். இதற்காக தனது 88 ஆவது வயதில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசினால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். உயிரைப் பணயம் வைத்த போராட்டம் இது.

“எழுதிக் கொள்ளுங்கள் இதனை. நான் ஒரு அராபியன்” என்று தொடங்கும் மஹ்மூத் தர்வீஷின் கவிதையை, ஒரு தடவை சபையில் அவர் வாசித்துக் காட்டினார். ஏனெனில், அவர் எப்போதும் தன்னை அரேபியனாகவே உணர்ந்தார். தனது அரபு அடையாளத்தையே பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இப்போது போரின் கொடூரத்தால் உருவழிந்து போயிருக்கும் சிரியாவிலுள்ள அலெப்போவில்தான், 1922ஆம் ஆண்டு கபூச்சி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1965 இல் ஜெரூஸலத்தின் பேராயராக மாறி, பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகுக்கு உரத்துச் சொன்ன, அதற்காக களத்தில் இறங்கிப் போராடிய ஒரு பெரும் போராளி அவர்.

பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பது முற்று முழுக்க முஸ்லிம்கள் மட்டும் முன்னெடுத்த ஒரு போராட்டம் அல்ல. அது அநீதிக்கு எதிரான விடுதலைப் போராட்டம் என்பதற்கு பேராயர் கபூச்சி, ஜோர்ஜ் ஹபாஷ், எட்வேர்ட் செய்ட் போன்ற மிகப் பெரும் ஆளுமைகள் முக்கியமான சாட்சிகளாக உள்ளனர்.

இந்த உண்மையான, நேர்மையான போராளியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பில் மானுடம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

Web Design by The Design Lanka