பல தடவை வந்த அழைப்பு - சஜித்துடன் இணையும் ரணிலின் சகா..? - Sri Lanka Muslim

பல தடவை வந்த அழைப்பு – சஜித்துடன் இணையும் ரணிலின் சகா..?

Contributors

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பல தடவை அழைப்பு விடுத்தனர்.

அதனை நான் நிராகரிக்கவில்லை. அழைப்பை நிராகரிக்க எனக்கு காரணமும் இருக்கவில்லை. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்வேன். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக எனது பெறுமதியை அவர்கள் கண்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க,

தனக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி தேசியப்பட்டியலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தனது நிலைப்பாட்டை கூறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் நான் இனி பங்கேற்பதில்லை. அனைத்துவித கடமைகள், பொறுப்பிக்களில் இருந்தும் விலகி சுதந்திரமாக வாழ்க்கையை வாழ தீர்மானித்துள்ளேன்.

வழங்கப்பட்ட வாக்குறுதி மற்றும் இணைக்கப்பாட்டிற்கு அமைய ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் பதவியை எனக்கு அளிப்பதாக கூறியிருந்தார். எனினும் அது நடக்கவில்லை.

தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் தீர்மானத்தை அக்கட்சி சற்று பரிசீலித்திருக்க வேண்டும்.

நான் ஒருபோதும் தேர்தலில் தோல்வியடையவில்லை. 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் ஊடாக வருவதற்கு நான் எடுத்த தீர்மானம், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் கோரிக்கைக்கு அமைவானதாகும்.

தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கும் கலாசாரம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததில்லை என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team