பல தியாகத்தை செய்த என்னை ஐக்கிய தேசியக் கட்சி இப்போது தூற்றுகின்றனர்-ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

பல தியாகத்தை செய்த என்னை ஐக்கிய தேசியக் கட்சி இப்போது தூற்றுகின்றனர்-ரவூப் ஹக்கீம்

Contributors
author image

Editorial Team

பேருவளையிலும், அளுத்கமையிலும் ஏற்பட்டது தனிநபர் இருவருக்கிடையிலான சிறிய தகராறு என்று அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி கூறியிருந்தார். அதனை பாரிய இனவாத வன்செயலாக காட்ட எத்தனிக்கப்படுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். குறைந்த பட்சம் நடந்து முடிந்த துக்கரமான அந்தச் சம்பவத்தையிட்டு ஜனாதிபதி அனுதாபமாவது தெரிவித்தாரா? இது வரையும் ஜனாதிபதி அது பற்றி கவலை தெரிவிக்கக் கூட முன்வரவில்லை.

 

இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

சனிக்கிழமை (13) இரவு பதுளை நகரில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
இதற்கு முந்திய தேர்தல்களிலும் அரசாங்கக் கட்சியோடு இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி எங்களை எச்சரித்துக் கூறியிருந்த போதிலும், நாங்கள் எங்களது கட்சியிலேயே போட்டியிடுகின்றோம். இது நாங்கள் நேற்று இன்று ஆரம்பித்த வேலையல்ல. இவ்வளவு காலமும் அரசாங்கத்தோடு வெற்றிலைச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட்டு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை நாங்கள் வெளியில் கொண்டு வந்து போட்டியிட வைத்திருக்கிறோம்.

 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக எனது அமைச்சுப் பதவிளை இரு முறை துறந்து நான் தேர்தல்களில் போட்டியிட்டேன். அவ்வாறான தியாகத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் செய்தேன். இந்நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மட்டுமல்லாது, நாட்டின் முழு அரசியல் வரலாற்றிலுமேயே அமைச்சர் ஒருவர் இருண்டு விடுத்தம் அரசாங்கத்தை விட்டு விலகி வந்து, ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவருவதற்கு பாடுபட்ட சம்பவம் நிகழ்ததில்லை. ஒரு முறை புதிய அரசாங்கத்தையே  ஏற்படுத்தினேன். அடுத்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக அவ்வாறு செய்தேன்.

 

ஒரு புறத்தில் மத்திய அரசாங்கத்தைம், மறுபுறம் கிழக்கு மாகாண ஆட்சியும் ஏற்படுத்துவதற்காக அமைச்சர் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்து வந்து போராடினேன். இவ்வாறான தியாகத்தைச் செய்த என்னைப் பற்றித் தான் இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினர் தூற்றித்திரிகின்றார்கள்.
ஜனாதிபதியின் சில செயல்பாடுகளைப் பற்றி நான் எப்பொழுதுமே கண்டித்துப் பேசிவருகிறேன்.

 

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆரம்பித்த நிலையத்தைத் திறந்து வைக்க அண்மையில் ஜனாதிபதி வருகை தந்து உரையாற்றிய போது, பேருவளையிலும், அளுத்கமையிலும் ஏற்பட்டது தனிநபர் இருவருக்கிடையிலான சிறிய தகராறு என்று கூறியிருக்கிறார். அதனை பாரிய இனவாத வன்செயலாக காட்ட எத்தனிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். குறைந்த பட்சம் நடந்து முடிந்த துக்கரமான அந்தச் சம்பவத்தையிட்டு ஜனாதிபதி அனுதாபமாவது தெரிவித்தாரா?. இது வரையும் ஜனாதிபதி அது பற்றி கவலை தெரிவிக்கக் கூட முன்வரவில்லை என்பதை மிகவும் கவலையோடு கூறுகின்றேன்.
இதனால் தான் முஸ்லிம்கள் கொதிப்படைந்திருக்கின்றார்கள். ஆட்சித் தலைமையின் இவ்வாறான மனப்போக்கில் மாற்றம் வரவேண்டும் எனறு முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான காரியங்களால் எங்களுக்கேற்பட்ட மனவேதனையின் வெளிப்பாடாகத் தான் அமைச்சர்களான நாங்கள் இருவரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஒன்று பட்டு, பலமான ஒரு குழுவாக தனித்து போட்டியிடுகிறோம்.
இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள பயம் என்னவென்றால், அவர்களுக்கு உரிய வாக்குகள் பறிபோய் விடும்என்ற பயமாகும். அந்தப் பயத்தைப் போக்க எங்களால் முடியாது. மாகாண சபைத் தேர்தல்கள் பல நடந்து முடிந்து விட்டன. பதுளையை விட இரு மடங்கு அதிகமான முஸ்லிம் வாக்குப் பலமுள்ள குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும், கம்பஹா மாவட்டத்திலும் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை பெற முடிந்ததா?. முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேண்டியதெல்லாம், முஸ்லிம் வேட்பாளர்களை அக்கட்சியில் நிறுத்தி முஸ்லிம் வாக்குகளை சூரையாடுவது மட்டும் தான்.

 

குருநாகலிலும், புத்தளத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்த போதுதான் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருவரை பெற முடிந்தது என்றார்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயங்களும் நடைபெற இடமளிக்கவில்லை என நான் பதுளை நகரில் இளைஞர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் தாம் கூறியதாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பிழையானது, முடியுமானால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.

 

அண்மையில் பதுளை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நான் இளைஞர்கள் மத்தியில் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக மேற்கொண்ட தீர்மானம் பற்றி விளக்கமளித்து உரையாற்றிய போது, குறிப்பிட்ட விஷயத்தை தலைகீழாகப் புரட்டி ஒரு சிங்களப் பத்திரிகை பிரசுரித்திருந்தது.
ஒரு சிங்களப் பத்திரிகையில் நான் கூறியதாக பிழையாக பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியை பற்றி நண்பர் ஆசாத் சாலி சில இணையத்தளங்களில் குற்றம் சாட்டியிருந்தார். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அந்த கூட்டத்தில் உரையாற்றினேன். அதனை அநேகமான தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்தன. அங்கு நான் சிங்களத்தில் உரையாற்றியதை முழுக்க முழுக்க திரிபுபடுத்தி அந்தச் சிங்களப் பத்திரிகையில் இளம் ஊடகவியாளர் ஒருவர் எழுதியிருந்தார்.

 

நான் வேலைப்பளு அதிகமாகவுள்ள அமைச்சர் என்ற காரணத்தினால் அந்தச் செய்தியை வாசிக்கமாட்டேன் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது ஊடக சுதந்திரத்திற்கு முற்றிலும் மாற்றமான முறையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பயிற்சி பெறும் இளம் ஊடகவியலாளராக இருக்கலாம் ஆகையால் அவரைப் பற்றி சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரிடம் முறையிட நான் விரும்பவில்லை.
இதே பதுளை நகரில் அன்று நான் ஆற்றிய உரையை நிறைய இளைஞர்கள் செவி மடுத்தனர். ஒரேயொரு சிங்களப் பத்திரிகையைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் அந்தச் செய்தி பிழையான வெளிவரவில்லை. எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் நான் அந்த கூட்டத்தில் உரையாற்றியிருந்தேன்.

 

இலங்கை முஸ்லிம்களின் கண்ணியத்துக்குரிய அகில இலங்கை ஜம்இய்யித்துல் உலமாவினால் கூட ஒன்றுபடுத்த முடியாமல் போன வேறு வேறு முஸ்லிம் கட்சியினரான எங்களை ஒற்றுமைப்படுத்திய சக்தி எது என்று அரசியல் விமர்சகர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது அன்று நான் அதற்கு உரிய பதிலை வழங்கிக் கொண்டிருந்தேன். அதாவது அமைச்சர்களான என்னையும், ரிஷாட் பதியுதீனையும் சம்மந்தப்படுத்தி அந்த சிங்கள அரசியல் விமர்சகர் ஒருவர் பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்த கட்டுரை ஒன்று பற்றியே அக்கூட்டத்தில் நான் பிரஸ்தாபித்து வஞ்சகமாகவும், வக்கிரகமாகவும் அவ்வாறு எழுதியதோடு,நாங்கள் ஒன்றிணைய வழிகோலிய அந்த சக்தி ஜனாதிபதியாக இருக்கலாமென்றும் அந்த விமர்சகர் கூறியிருந்தார்.

 

நான் சொன்னது என்னவென்றால்,இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் வன்செயல்களை கட்டுப்படுத்த ஆட்சித் தலைவரும் அரசாங்கமும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையாகும். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களை ஜனாதிபதியும், அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி நான் மிகவும் கவலையோடும், ஆத்திரமாகவும் அங்கு உரையாற்றினேன்.

 

பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நசீர் அகமதும் உரையாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், நசீர், தவம், கட்சியின் நிதிப்பணிப்பாளர் ஏ.சீ. எஹியாக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team