பள்ளிகள் உடைக்கப்படுவதற்கெதிராக புத்த சாசன அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை- மௌலவி முபாறக் - Sri Lanka Muslim

பள்ளிகள் உடைக்கப்படுவதற்கெதிராக புத்த சாசன அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை- மௌலவி முபாறக்

Contributors

-எஸ்.அஷ்ரப்கான்-

மதஸ்தாபனங்கள் இனி அமைப்பதாயின் புத்த சாசன அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் ஏனைய மதங்களை அடக்கியாள நினைக்கும் சட்டமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சியின் மௌலவிமாருக்கான பிரிவான உலமா கட்சி தெரிவிதுள்ளது

 

இது பற்றி அதன் தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது,  புத்த சாசன அமைச்சு என்ற பெயரே அது புத்த மதத்துக்குரியது மட்டுமே என்பதை தெளிவாக சொல்கிறது. இந்த நிலையில் ஏனைய சமயங்களின் நடவடிக்கைகளை புத்த சாசன அமைச்சின் கீழ் வைத்திருப்பது என்பதே ஏனைய மதங்களுக்குச் செய்கின்ற அநியாயம் மட்டுமல்ல புத்த மதத்தின் அடிமைகளாக ஏனைய மதங்களை வைத்திருப்பதான மேலாதிக்கத்தையும் காட்டுகிறது.

 

இந்த நிலையில் ஏனைய மத ஸ்தலங்களை கட்டுவதாயின் புத்த சாசன அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாயின்  நிச்சயம் பௌத்த மதம் தவிர ஏனைய மதங்களுக்கு அநீதியே நடக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். காரணம் புத்த சாசன அமைச்சின் உயர்  அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாக இருப்பதையும், முஸ்லிம்களின் பள்ளிகள் உடைக்கப்படுவதற்கெதிராக புத்த சாசன அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிடலாம்.

 

அது மட்டுமல்லாது வீதிக்கு வீதி புத்தர்  சிலைகளை வைப்பதையும், சில தனியார் காணிகளில் கூட அல்லது தனியார் காணிகளின் முன்;பாக புத்தர் சிலையை வைப்பதற்குமெதிராக புத்த சாசன அமைச்சு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும் கிறேன்ட்பாஸ் பள்ளிவாயல் போன்ற முஸ்லிம்களின் மத ஸ்தலங்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதையும் கடந்த காலங்களில் நிறையவே நாம் கண்டு வருகின்றோம்.

 

ஆகவே புத்த மத ஸ்தலங்களை அமைப்பதற்கு வேண்டுமாயின் பத்த சாசன அமைச்சின் அனுமதியும், ஏனைய மதஸ்தலங்கள் அமைப்பதாயின் அந்தந்த சமய கலாச்சார திணைக்கள அனுமதியையும் பெற வேண்டும் என சட்டமியற்றுவதே இது விடயத்தில் சமயங்களுக்கிடையில் நீதியை நிலைநாட்டுவதாக அமையும். அதனை விடுத்து புத்த சாசன அமைச்சின் அனுமதியை ஏனைய மதங்கள் பெற வேண்டும் என்ற அநீதியான சட்டத்தை நாம் கண்டிக்கின்றோம்.

 

கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம், இந்து சமயங்களுக்கென தனியான அமைச்சு இருந்ததன் மூலம் நாட்டில் மத சமத்துவம் இருந்தது. அதனை இந்த சுதந்திரக்கட்சியும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்த கூட்டாட்சி இல்லாமல் செய்தது முதல் புத்த மதம் தவிர அனைத்து மதங்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றன. மேற்படி அமைச்சுக்களை மீண்டும் உருவாக்குவதன் மூலமும் இப்பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்பதை சொல்லி வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team