பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி விவகாரத்தால் பதற்ற நிலை - Sri Lanka Muslim

பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி விவகாரத்தால் பதற்ற நிலை

Contributors
author image

ஹாசிப் யாஸீன்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காரைதீவு சந்தியிலுள்ள சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிக்கு எல்லையிட இன்று சென்றபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

 

காரைதீவு சந்தியிலுள்ள புத்தர்சிலைக்கு அருகாமையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியொன்று உள்ளது. குறித்த காணிக்கு எல்லையிட சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் இன்று காலை சென்றுள்ளனர். இதன்போது குறித்த ஒரு குழுவினர் இந்ந நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியினை காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் அதனை அரச காணி என அடையாளப்படுத்தி அதற்குள் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கிய அனுமதிக் கடிததினை அடுத்தே பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மேற்படி எல்லையிடும் பணியில் ஈடுபட்டனர்.

 

இதற்கெதிராக காரைதீவு பிரதேச வாசிகள் சிலர் குறித்த காணியை விட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கோஷமிட்டனர்.

 

இதனையெடுத்து அப்பிரதேசத்தில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பிரதேசத்திற்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

 

நிலைமையை நேரில் கண்டறிய திகாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்தார். இருதரப்புடனும் மற்றும் பாதுகாப்பு படையினருடனும் பேசி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

 

இந்த சர்ச்சை குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்றினை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் உடன் கூட்டப்பட்டது.

 

இதில் இருதரப்பினரதும் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டன.

 

மிகவிரைவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குறித்த காணி சம்பந்தமாக கூடிப்பேசி ஒரு முடிவு காண்பதாகவும் அதுவரை இருதரப்பினரும் குறித்த காணிக்குள் நுளையக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு இணக்கப்பாட்டிக்கு வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் கே.ஜெகராஜன், பிரதேச சபை தவிசாளர் எம்.கோபிநாத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், பீ.கலையரசன், காரைதீவு பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இதேவேளை சாய்ந்தமருது பள்ளிவாலுக்கு சொந்தமான இந்தக் காணியில் 140 வருடங்கள் பழமை வாய்ந்தது. குறித்த காணியில் சியாரமொன்று காணப்பட்டதாகவும் அங்கு பிரயாணிகள் தொழுகை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காரைதீவு பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலப்பகுதியில் இச்சியாரம் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

 

25

 

26

 

27

 

28

 

29

Web Design by Srilanka Muslims Web Team