பள்ளிவாசலைத் தாக்கிப் புதுவருடம் கொண்டாடிய பேரினவாதம்! - Sri Lanka Muslim

பள்ளிவாசலைத் தாக்கிப் புதுவருடம் கொண்டாடிய பேரினவாதம்!

Contributors

-எஸ். ஹமீத்-

லங்கையின் கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய என்ற ஊரிலுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் என்ற பள்ளிவாசலை, 2014ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்கள் முன்பு பேரினவாதக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. கடந்த 31ம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட பள்ளிவாசலின் ஜன்னல்களுக்குக் கல்லெறிந்து அவற்றைச் சேதப்படுத்தியதோடு, கதவை உடைத்து, பள்ளிவாசலினுட் புகுந்து இந்த இனத் துவேஷ காடையர் கூட்டம் வெறியாட்டம் ஆடியிருக்கிறது.

அண்மைக் காலங்களில் பௌத்தமல்லாத மதஸ்தலங்களின்  மீதான தாக்குதல்கள் இலங்கையில் மிகவும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பது கவலை தருகிறது. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் கண்டனங்களைக் கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாது நிகழ்த்தப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் எடுக்கப்படாமல் இருப்பதானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
சமீப காலத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 27 வது பள்ளிவாசல் இதுவாகும். தலைநகரம் தொடக்கம் கிராமங்கள் வரையிலான இத்தனை பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும், அதற்குக் காரணமானவர்களென இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என்பது, இவ்வாறான சம்பவங்களின் பின்னால் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலுள்ள சிலருக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு பற்றிய சந்தேகங்களையும் ஊகங்களையும் மேலும் வலுவாக்குகிறது.
இனங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துவதன் மூலம் தமது அரசியல் வியாபாரத்தை இலாபகரமாக நீண்ட காலங்களுக்கு நடத்த முடியுமென்ற கேவலமான எண்ணங்களில் மூழ்கிக் கிடப்போர், தமது எண்ணங்களை மறு பரிசீலனைக்குட்படுத்துவது அவசியமென இன உறவையும் சகோதர சக வாழ்வையும் விரும்பி நிற்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரு மாதங்கள் முன்பு தம்புள்ளவில் மகா பத்ரகாளியம்மன் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட போது, அதற்கெதிராக முஸ்லிம் மக்களும் குரல் கொடுக்க வேண்டுமென்று இப் பத்தியாளர் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team