பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஈமானின் பலவீனத்தை காட்டுகின்றது -அஷ்ரப் ஹுஸைன் - Sri Lanka Muslim

பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஈமானின் பலவீனத்தை காட்டுகின்றது -அஷ்ரப் ஹுஸைன்

Contributors
author image

Junaid M. Fahath

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள தனது இராஜினமாக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கோழைத்தனத்தையும், அரசியல் வங்குரோத்துத்தனத்தையும் மட்டுமல்ல ஈமானின் பலவீனத்தையும் காட்டுவாதாக சர்வதேச முஸ்லிம் இளைஞர்கள் அசெம்பிளியின் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் ஹுஸைன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு இறைவனுக்கு அடுத்த படியாக நீங்களே இருக்கிறீர்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷவை தமது கடிதத்தில் விழித்துள்ள இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை மீறும் செயலாகுமென ஹாஜி அஷ்ரப் ஹுஸைன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அவர் தமது அறிக்கையில், அரசின்
சலுகைகளையும், சுகபோகங்களையும் கடந்த பல வருடங்களாக அனுபவித்து இன்று முஸ்லிம்களின் பாதுகாப்பையும் அவர்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் உயரிய நோக்கில் பொது வெட்பாளர் மைத்திரிபால
சிறிசேனாவை ஆதரிக்க முன்வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரினதும் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பஷீர் சேகுதாவூதின் இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள், ஜனாதிபதி ராஜபக்ஷவின் முஸ்லிம்களுக்கெதிரான கடந்த கால செயல்பாடுகளை முற்றும் முழுதாக ஆதரிப்பதாகவே தோன்றுகின்றது.
இப்படி கோழைத்தனமாக அரசை விட்டு வெளியேறியதை விட முனாபிக் தனமாக அல்லது ஜனாதிபதி ராஜபக்ஷவோடே இருந்து முஸ்லிம் காங்கிரசும் அதன் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியை ஆதரிக்காவிட்டாலும் இந்நாட்டு முஸ்லிம்கள் நூறு வீதமானோர், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சிக்கு ஆ முடிவெடுத்துள்ளதை இந்நாடே அறியும். இதனைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் சமூகம் தம்மை தனிமைப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில், அதுவும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டதன் பின்னர் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்த பச்சோந்தித்தனத்தையும் இந்நாட்டு முஸ்லிம்கள் நன்கறிவர்.

விகாரமகாதேவி பூங்காவில் எதிரணிகளின் கூட்டு ஒப்பந்தத்தில் முஸ்லிம் சார்பில் தேசிய ஐக்கிய முன்னணித் தலைவரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.ஸுஹைர், ஆஸாத் சாலி, நல்லாட்சிக்கான அமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கையொப்பமிடாது போனால் பொது எதிரணியில் முஸ்லிம்களின் கௌரவம் காற்றில் பறந்திருக்கும்.
முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியா மஹிந்த ராஜபக்ஷவே இருப்பதாக பஷீர் சேகுதாவூத் தமது இராஜினமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்திலிருந்து, அளுத்கம வரை சிங்கள இனவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிராக நடத்திய அடாவடித்தனங்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த பஷீர் சேகுதாவூத் குறிப்பிடும் பாதுகாவலன் எங்கிருந்தார் என்பதை பஷீர் சேகுதாவூத் தன்னையே ஒரு முறை கேட்டுப்பார்த்துக் கொள்ளட்டும். எனவே, பஷீர் சேகுதாவூத் தமது இராஜினமாக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கோழைத்தனத்தையும், அரசியல் வங்குரோத்துத்தனத்தையும் மட்டுமல்ல ஈமானின் பலவீனத்தையும் காட்டுகிறது.

 இஸ்லாத்தையும், ஈமானையும் பற்றி அவருக்குத் தெரியாவிட்டால் புனிதகுர்ஆனில் சூரத்துல் இப்ராஹீமில் 12 – ஆவது வசனத்தை இங்கு நாம் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம். ‘இன்னும் நாங்கள் அல்லாஹ்வின் மீது (முழுமையாக ) நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது?) திட்டமாக அவன் எங்களுடைய வழிகளை எங்களுக்குக் காண்பித்துள்ளான். மேலும் (நிராகரிப்போரே!) நீங்கள் எங்களுக்கிழைத்திருக்கும் துன்பங்களை நிச்சயமாக நாங்கள் பொருத்துக்கொண்டு (உறுதியாக) இருப்போம். 

இன்னும் (சகலகாரியங்களையும்) அல்லாஹ்விடம் ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கை வைக்கிறவர்கள் (யாவரும்) அல்லாஹ்வின் மீதே (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும். (அல் – குர்ஆன் 14:12)’ இதன் மூலம் பஷீர் சேகுதாவூத் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து இவ்வுலக சுகபோகங்களில் குளிர் காய முற்பட்டுள்ளார் என்பதையே காட்டுகின்றது.

அவரின் செயற்பாடானது முஸ்லிம் சமூகத்தின் மனதை வேதனைப்படுத்தி நிற்கின்றது. அவர் எழுதிய கடிதம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரவேண்டும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team