பஸில் பிரதமரானால் இரு கரங்களையயும் உயர்த்தி வரவேற்க தயார் -ஆளும் கட்சி அறிவிப்பு..! - Sri Lanka Muslim

பஸில் பிரதமரானால் இரு கரங்களையயும் உயர்த்தி வரவேற்க தயார் -ஆளும் கட்சி அறிவிப்பு..!

Contributors

பஸில் ராஜபக்ஷ நாளை இந்த நாட்டின் தலைவராக வருவாராயின் இரண்டு கைகளையும் உயர்த்த நாங்கள் தயார் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் தனது பதவியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கிவிட்டு ஓய்வை அறிவிக்கப்போவதாக தென்னிலங்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே அடுத்த பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பியல் நிஷாந்த, நாமல் ராஜபக்சவுக்கு பிரதமராவதற்கும், பஸில் ராஜபக்சவுக்கு நாட்டின் தலைவராவதற்குமான தகுதிகள் காணப்படுவதாக கூறினார்.

“நாமல் ராஜபக்ச பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். வளர்ச்சியடைந்து வரும் பலம்வாய்ந்த நபர் அவர். எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விடயங்கள் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மிகுந்த பலம் உள்ளவரும், மக்களை சரியாக உணர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இருக்கின்றனர். எதிர்காலத்தில் பலரும் இருக்கின்றார்கள். அவர்களிடையே நாமல் ராஜபக்ஷவும் தகுதிகளைப் பூர்த்தி செய்து வருகின்றார்.

இன்று நாங்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது, நாட்டின் வெற்றியைப் பதிவு செய்தது பஷில் ராஜபக்ஷவினாலாகும். குறுகிய காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை அமைத்தமை, ஜனாதிபதியை நியமித்தமை, முதிர்ச்சியடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு அமர்த்தியமை, எம்மைப்போல புதியவர்களுக்கு முன்நோக்கி வர தலைமைத்துவம் வகித்தவரே பஷில் ராஜபக்ஷ. அவர் நாளை இந்த நாட்டின் தலைவராக வருவாராயின் இரண்டு கைகளையும் உயர்த்த நாங்கள் தயார். இருப்பினும் எமக்கு தற்போது பலம்வாய்ந்த ஒரு தலைவர் இருக்கின்றார்.

இதேவேளை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, மக்களிடையேயும், அரசியல்வாதிகள் இடையேயும் உள்ள ஒழுக்கவீனமே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். “குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். நாடு என்கிற ரீதியில் நியூஸிலாந்து பிரதமர், கொரோனா தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடிந்தது.

அதற்கு காரணம் மக்களிடையே ஒழுக்கம் இருக்கின்றது. அந்த வகையில் சில மக்களிடமும், அரசியல்வாதிகளிடத்திலும் எமது நாட்டில் ஒழுக்கம் என்பது இல்லை. அதனை தெரிவிக்க வேண்டும்.

இன்று எதிர்க்கட்சி கடமைகளை நிறைவேற்றுகின்றதா? இல்லை. குறுகிய அரசியல்நோக்கத்திற்காக பயணிக்கின்றார்களே தவிர, நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் கடமைகளை செய்கின்றார்கள் இல்லை.

ஆகவே தனிப்பட்ட ஒழுக்கங்களை உறுதிப்படுத்தினால் சிறந்த பயணத்திற்கு நாம் செல்லமுடியும். குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை சரிப்படுத்தி முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவுகின்றவர்கள் கைகளில்தான் அவை உடைகின்றன. அந்த வகையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினிரிடத்தில்தான் சில குறைபாடுக்ள நிகழ்கின்றன. எனினும் அனைவரும் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team