பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் 257 ஆக உயர்வு: - Sri Lanka Muslim

பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் 257 ஆக உயர்வு:

Contributors
author image

World News Editorial Team

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள செனாப், ஜீலம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

சியால் கோட், குஜ்ரன்வாலா மாவட்டங்களில் மட்டும் 556 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

 

பாகிஸ்தானில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்றைய நிலவரப்படி 257 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமையை சேர்ந்த ரீமா ஸுபாரி இன்று தெரிவித்துள்ளார். மழை சார்ந்த விபத்துகளில் சுமார் 500 பேர் நாடு முழுவதும் காயமடைந்து உள்ளனர். பல ஆயிரம் வீடுகள் பெரும்பகுதியாகவும், ஓரளவுக்கும் சேதமடைந்து,சிதிலமாகிக் காணப்படுகின்றன.

 

வெள்ளம் சூழ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர்களில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் அழுகி நாசமாகிப் போகின. அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த படைவீரர்களும், ராணுவத்தினரும் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மற்றும் இதர மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team