பாகிஸ்தான் அணி முழுப்பலத்துடன் ஆட வேண்டும்: மிஸ்பா உல் ஹக் » Sri Lanka Muslim

பாகிஸ்தான் அணி முழுப்பலத்துடன் ஆட வேண்டும்: மிஸ்பா உல் ஹக்

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தான் அணி முழுமையான பலத்தை வெளிப்படுத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

2 டெஸ்ற் போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடர் நிறைவடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரில் தென்னாபிரிக்க அணியின் ஹசிம் அம்லா பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்படுவதுடன், முதலிரண்டு போட்டிகளிலும் டேல் ஸ்ரெய்ன் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சற்றுப் பலம் குறைந்த அணியாக தென்னாபிரிக்க அணி களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மிஸ்பா உல் ஹக், இவ்வாறு எதிரணியின் பலம் குறைவடையும் போது பாகிஸ்தான் அணி சுயதிருப்தியடைந்து போட்டிகளில் தோல்வியடைகிறது எனக் குறிப்பிட்டதோடு, எதிரணி முழுமையான பலமான அணியாகக் காணப்படுவது சிறந்தது எனக் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்க அணியின் பலமான மாற்று வீரர்கள் காணப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்ட மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மன ரீதியாக பலமாகக் காணப்பட வேண்டும் எனவும், எதிரணியில் யார் விளையாடுகிறார்கள், யார் விளையாடவில்லை என்பது குறித்துக் கவனஞ் செலுத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ற் தொடரின் முதற்போட்டியில் பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியைப் பெற்ற போதிலும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி இனிங்ஸ் வெற்றியைப் பெற்று இத்தொடரைச் சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka