பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர் இம்ரான்கான் 3–வது திருமணம் செய்தாரா? » Sri Lanka Muslim

பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர் இம்ரான்கான் 3–வது திருமணம் செய்தாரா?

imran66

Contributors
author image

Editorial Team

 பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர் இம்ரான்கான் 3–வது திருமணம் செய்தாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 1976–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டு வரை இடம்பிடித்து விளையாடியவர், இம்ரான்கான். இவருடைய தலைமையிலான பாகிஸ்தான் அணி 1992–ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான்கான் அரசியலில் குதித்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக் –இ –இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது எம்.பி.யாகவும் உள்ளார்.

1995–ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ஜெமிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இம்ரான்கான். அவருடன் 9 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை மேற்கொண்டார். 2 ஆண் குழந்தைகளும் பிறந்தன. பின்னர் 2004–ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2015–ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம் என்பவரை 2–வது திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்விலும் அவருக்கு கசப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த 10 மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தனது 2 திருமண வாழ்க்கையும் முறிந்து போனதால் மிகுந்த மன வேதனையுடன் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இம்ரான்கான் 3–வதாக புஷ்ரா மனேஹா என்ற 40 வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.

புஷ்ரா மனேஹா மூத்த சுங்க இலாகா அதிகாரி கவார் பரித்தின் முன்னாள் மனைவி ஆவார். இவர், இம்ரான்கானின் ஆன்மிக வழிகாட்டியும் ஆவார். இருவருக்கும் கடந்த 1–ந்தேதி லாகூரில் ரகசியமாக திருமணம் நடந்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை 66 வயதாகும் இம்ரான்கான் மறுத்துள்ளார். இதுபற்றி அவருடைய செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இம்ரான்கான் எந்த பெண்ணையும் 3–வதாக ரகசிய திருமணம் செய்யவில்லை. அதே நேரம் ஒரு பெண்ணிடம் திருமணத்துக்கான விருப்பத்தை கேட்டு உள்ளார். இதுபற்றி அந்த பெண் தனது குடும்பத்தினரிடமும், தனது குழந்தைகளிடமும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை மேற்கொள்வார். மேலும் இது இருவரின் தனிப்பட்ட மற்றும் உணர்வுப் பூர்வமான வி‌ஷயங்கள் ஆகும். அதுபற்றி தவறான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது சரி அல்ல.

அதுவும் பொதுவாழ்வில் இல்லாத ஒரு பெண் குறித்து வெளிப்படையாக விமர்சிப்பது சரியானது அல்ல. இம்ரான்கானின் விருப்பத்தை அந்த பெண் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை அந்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பற்றிய தனிப்பட்ட வி‌ஷயங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்திட வேண்டுகிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Web Design by The Design Lanka