பாகிஸ்தான் இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது - தூதரக அரசியல் செயலாளர் ஆயிசா பஹாத்..! - Sri Lanka Muslim

பாகிஸ்தான் இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது – தூதரக அரசியல் செயலாளர் ஆயிசா பஹாத்..!

Contributors

  • – மாளிகைக்காடு நிருபர் –

பாகிஸ்தான் இலங்கையுடன் எப்போதும் நல்லிணக்கத்தையும் நட்புறவையும் பேணவே விரும்புகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கை அழகான நாடு. இலங்கையர்கள் எல்லோரும் ஒருவித புத்துணர்ச்சி மிக்கவர்களாகவே உள்ளார்கள். இலங்கைக்கு பாகிஸ்தான் நட்புறவுடன் செய்யும் எந்த ஒரு உதவியும் முஸ்லிங்களுக்கு மட்டுமானதில்லை. இலங்கையர்கள் எல்லோருக்கும் பொதுவாகவே எங்களின் உதவிகளும், திட்டங்களும் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே அல்லாமா இஃபால், முஹம்மத் அலி ஜின்னா என பல்வேறு புலமைப்பரிசில்களையும் இலங்கையர்களுக்காக வழங்கி வருகிறோம் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார விவகாரங்களுக்கான செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் மேட்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் கல்வி பயில பாகிஸ்தான் அரசினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் கோரிய போது 60-70 வீதம் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானின் எந்த ஒரு செயற்திட்டமும் ஒரு இனத்தை குறிவைத்து அவர்கள் மட்டும் நன்மையடையும் வகையில் செயற்படுத்தவில்லை. எல்லா இலங்கையர்களுக்கும் நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் அவா. அதை வெற்றிகரமாக செய்துவருகிறோம். பிரதேச, இன, மத, பாலின வேறுபாடுகள் எங்களின் திட்டங்களில் இல்லை. பாகிஸ்தான் அரசினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் இலங்கையின் பல்லினங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். இலங்கை நண்பர்களுடன் உறவை வளர்க்க கிடைத்த மகிழ்ச்சியான தருணமாக இதை நோக்குகிறோம் என்றார்.

கிழக்கில் முதல் முறையாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைய உயரதிகாரிகளினால் நேரடியாக நடத்தப்பட்ட குறித்த தேர்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150 பேரளவில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் மட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் எந்திரி இஸட். நஸீர் அஹமட், பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீட், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும், மீஸான் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team