பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு » Sri Lanka Muslim

பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

trump

Contributors
author image

Editorial Team

 பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என அமெரிக்கா கடுமையாக குற்றம் சாட்டி உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இதன் காரணமாக பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் பெரும் நிதி உதவி அளித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான், தன் மண்ணில் இருந்து கொண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிற ஹக்கானி வலைச்சமூகம், பாகிஸ்தான் தலீபான், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

அந்த இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாகவும் திகழ்ந்து வருகிறது.

இதன் காரணமாக அந்த நாட்டுக்கு வழங்குவதாக இருந்த 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த முடிவை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி நியாயப்படுத்தினார். இது தொடர்பாக அவர் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு ராணுவ நிதி உதவி 255 மில்லியன் டாலர் வழங்குவதை நிறுத்தியதற்கு அமெரிக்காவிடம் தெளிவான காரணம் உள்ளது. பாகிஸ்தான் பல்லாண்டு காலமாக பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

அவர்கள் எப்போதாவது எங்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அத்துடன், ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் படையினரை தாக்குகிற பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் தருகிறார்கள். இந்த ஆட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருப்பதுடன், பயங்கரவாதத்துக்கு ஆதரவும் அளித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பாகிஸ்தானுக்கான எல்லா நிதி உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் விரும்புகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு இடையே அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவி 255 மில்லியன் டாலரை நிறுத்தி வைப்பது என்ற முடிவை ஆகஸ்டு மாதமே எடுத்து விட்டோம். இந்த நிதி உதவியை பாகிஸ்தான் பெற வேண்டுமானால், பயங்கரவாத ஒழிப்பில் உண்மையான ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்னும், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிசும் பாகிஸ்தான் சென்றபோது இது குறித்து தெளிவாக கூறி விட்டனர்” என்று குறிப்பிட்டார்.

இதேபோன்று அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்சும் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசினார். அவர், “பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இன்னும் அதிகமாக செயல்பட முடியும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பயங்கரவாத ஒழிப்பில் தனது கடமைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது” என்று சாடினார்.

இப்படி அனைத்து தரப்பிலும் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பிடி இறுகி வருவது அந்த நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Web Design by The Design Lanka