பாடசாலை படிப்பு பாவமா? (கவிதைகள்) » Sri Lanka Muslim

பாடசாலை படிப்பு பாவமா? (கவிதைகள்)

educ

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


பாடசாலை செல்லாதே
பாடங்களும் திட்டங்களும்
கேடு என்று சொல்லும்
தாடிகளின் கவனத்திற்கு!

இன்று எமக்குள்ளே
இம் மார்க்க எழுச்சிக்காய்
நன்றாகப் பாடுபடும்
நாடறிந்த தாயீக்களும்
அன்று பாடசாலையில்
அடிப்படையைக் கற்றவரே.
வழி தவறிப் போனார
ஒளி பெற்று வாழ்கிறாரா?

குத்பாவில் யூதனை
குதறி எடுத்துவிட்டால்
அத்தனை பிரச்சினையும்
அப்படியே தீருமா?
அவனின் நுட்பத்தை
அடித்து வீழ்த்தும் படி
கவனமாய்க் காய் நகர்த்த
கற்க வேண்டாமா?
கைபரில் அன்று யூதன்
கதவு மூடி சதி செய்தான்.
கோட்டையைத் தாக்கி
கொட்டத்தை அடக்கினார்கள்.
சைபரில் சற்றலைட்டில்
சதி செய்யும் யூதர்களின்
ஆற்றலைத் தாக்கி
அவர்களை அடக்க
கல்வியறிவு பெறுதல்
கடமைன்னு புரியலயா?

கல்வியென்றால் மார்க்கத்தை
கற்றல் மட்டுமா?

எதிரியைப் பிடித்து
எங்கள் ஆட்களுக்கு
கற்றுக் கொடுத்து விட்டு
கழன்று போ என்றார்கள்.
எதிரியிடம் கற்றது
ஈமானியக் கல்வியா?
பொதுவான கல்வியா
எதுவென்று உரைப்பீர்?

ஆராயச் சொன்னது
ஆண்டவன் திருமறை.
அரபு நூலை மட்டுமா?
ஆகாய விந்தையுமா?

தொழச் சொன்ன நபிகள்தான்
தோழரை அழைத்து
மொழிகளைப் படியென்றும்
மொழிந்தார்கள் இல்லையா?

குத்தி ரத்தம் எடுத்தல் முதல்
எத்தனையோ வைத்தியங்கள்
‘மறுப்பவரும்’ செய்தார்கள்
மக்காவில் அந் நாளில்.
அந்த நல்ல வைத்தியம்
அந்நியரின் நடைமுறை
கற்காதே என்று
கருணை நபி சொன்னாரா
நற் கருமம் என்று
நாடிச் செய்தாரா?

இன்றைய கல்வி முறையில்
இருக்கின்றன பல குறைகள்.
கலப்பு முறைக் கல்வி
கலாச்சாரத் தாக்கம்
பரிணாமக் கொள்கை
பயன்படா தியறிகள்
இப்படிப் பல குறைகள்
இருப்பதை மறுக்க முடியா.

ஆனால் அதற்காக
அப்படியே மூட்டை கட்டி
கல்லாதே நீ என்று
சொல்லுவது முறையா
அல்லது அக்குறையை
அகற்றி வாழ்க்கையை
வெல்லுவது முறையா
விளக்கமாய் சொல்வீர்!a

Web Design by The Design Lanka