பாதுகாக்கப்படுமா முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரம்? - Sri Lanka Muslim

பாதுகாக்கப்படுமா முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரம்?

Contributors
author image

சை.மு .ஸப்ரி

                                                 
நாட்டின் மூன்று தசாப்தகால கொடூர யுத்தம் நிறைவடைந்ததன் பின் பேரினவாதிகள் சிலரின் பார்வை முஸ்லிம்கள் மீது திரும்பின. முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் நாடெங்கும் காட்டு தீ போல் பரவ தொடங்கியது.எமது அன்றாட சமய வழிபாட்டுகளுக்கு கூட தீவிரவாத சாயம் பூச தொடங்கினர். அரசியல் தலைமைகளோ மத தலைமைகளோ ஏன் மக்கள் கூட இதன் அபாயதன்மையை அன்று உணரவில்லை.தம்புள்ளை,ஹலால் பிரட்சினைகளின் பின்னரே அனைவரும் விழித்துக் கொண்டனர்.

 

தற்போது இவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தை எமது பெண்களின் ஆடைப் பழக்கங்களின் மீது திருப்பியுள்ளனர்.தொலைக்காட்சி , வானொலி, முகப்புத்தகம் வழியாக இதற்கெதிரான பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

 

அண்மையில் அரச நிறுவனங்களில் கூட அபாயா தடை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது.உதாரணமாக அண்மையில் தம்பலகாம பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலையை கூறலாம்.தம்பலகாம பிரதேச செயலாளர் வெளியிட்டிருந்த உள்ளக சுற்றறிக்கையை தொடர்ந்தே இவ் அசாதாரண நிலை உருவானது. “இனிமேல் அனைத்து பெண் ஊழியர்களும் அலுவலக நாட்களில் சேலை அணிந்தே தம் கடமையை மேற்கொள்ள வேண்டும்” என வெளியிடப்பட்ட அச் சுற்றறிக்கையை தொடர்ந்து இனிமேல் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அபாயவுக்கு தடை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு அறிவித்ததை அடுத்து கடந்த சில தினங்களாக இச் செய்தி ஊடகங்களில் பெரிதும் ஆராயப்பட்டது.பிரட்சினை பெரிதாவதை உணர்ந்த பிரதேச செயலாளர் அபாயவுக்கு தடை இல்லை என மறுப்பறிக்கையில் குறிப்பிட்டார்.

 

ஆனால் இப்பிரட்சினை தம்பலகாம பிரதேச சபையோடு முடிவடையபோவதில்லை. நாடங்கிலும் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் இவ்வாறான தடை விதிக்கப்படலாம். இவ்வாறான தடைகள் விதிக்கபட முன் எமது அரசியல் சமய தலைவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

 

தம்பலகாம பிரதேச சபை பிரட்சினையின் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் கூட முஸ்லிம் பிரதேச செயலாளர் இல்லை. முஸ்லிம் உயர் அதிகாரிகள் இருந்திருந்தால் இவ்வாறான பிரட்சினைகள் எழாமல் தவிர்த்திருக்கலாம் என்றொரு கருத்து அப் பிரதேச அரசியல்வாதிகள் சிலரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

 முஸ்லிம் பிரதேச செயலாளரின் நியமனம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவசியமானதே. எனினும் இதன் மூலம் அப்பிரதேசத்தில் மட்டும் குறித்த பிரட்சினையை கட்டுபடுட்ட முடியும். நாட்டின் சகல பகுதிகளிலும் பெரும்பான்மையினரோடு இணைந்து பணி புரியும் முஸ்லிம் பெண்களின் நிலை?

 

அலுவலகத்தில் சீருடை ஒழுங்கு வேண்டும் என்ற நோக்கிலயே தான் அவ்வாறான கட்டளையை பிறப்பித்ததாக தம்பலகாம பிரதேச செயலாளர் கூறியிருந்தார். தான் நிர்வகிக்கும் ஓர் அலுவலகத்தில் அனைத்து விடயங்களும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றே அனைத்து அதிகாரிகளும் எதிர்பார்ப்பர். அந்தவகையில்இவரின் எதிர்பார்ப்பும் தவறில்லை. ஆனால் அலுவலகத்தில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களையும் இவர் சுற்றறிக்கை வெளியிட முன் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

 

அபாயா அணிந்தால் சீருடை அமைப்பை பேண முடியாவிடின் அலுவலக சீருடையை அல்-குரான் ஹதீஸில் கூறப்பட்டதுக்கமைய அவ்றத்தை மறைக்கத்தக்கவாறு மாற்றிகொள்ளலாம். பாடசாலைகளில் இவ்வாறான நடைமுறையே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அல்-குரான் ஹதீஸின் அடிப்படையில் அவ்றத்தை மறைக்கத்தக்க ஆடைகளில் பெண்கள் அபாயவுக்கே முன்னுரிமை அளிப்பர். சில மாதங்களுக்கு முன் கொழும்பின் பிரபல பாடசாலையில் பெற்றோருக்கு அபாயா அணிந்து பாடசாலைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் நீதிபதி கூட அபாயா கண்ணியமான உடை என தெரிவித்திருந்தார்.

 

ஆனால் தற்போது சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் இனவாதிகளுக்கு வால் பிடித்து கொண்டிருப்பதனை பார்தால் இப் பிரட்சினை இன்னும் மோசமடையும் என்றே தோன்றுகிறது. அண்மையில்  அமைச்சர் விமல் வீரவம்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முஸம்மில் இலங்கை முஸ்லிம் பெண்கள் அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றி அபாயா அணியாமல் இந்தியா கலாச்சாரத்தை பின்பற்றி சேலை அணியுமாறு கோரி இருந்தார். ஆனால் இவருக்கு தெரியாது போலும் முஸ்லிம்கள் பின்பற்றுவது அரேபிய கலாச்சாரமோ இந்திய கலாச்சாரமோ அல்ல இஸ்லாமிய கலாச்சாரம் என்று.

 

ஆகவே தற்போது ஏற்பட்டிருக்கும் இப் பிரட்சினையின் தாக்கத்தை உணர்ந்து உடனே எமது அரசியல் சமய தலைமைகள் களத்தில் இறங்கி இப்பிரட்சினையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் அலுவலகத்தில் பணி புரியும் எமது பெண்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகும்.

 

பொதுபலசேனாவின் கேள்விகளுக்கு அறிக்கை விட்டுகொண்டிருக்கும் உலமா சபையும் ஊவாவில் சமூக ஒற்றுமை என மேடைகளில் முழங்கும் அரசியல் தலைமைகளும் உடனடியாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இப்பிரட்சினைகான பொருத்தமான  தீர்வை பெறவேண்டும். முடிந்தால் முஸ்லிம் பெண்களின் ஆடை சம்மந்தமான பொது சட்டம் ஒன்றை கொண்டு வருதல் சாலச் சிறந்ததாகும்.
.
                                   

Web Design by Srilanka Muslims Web Team