பாபர் மசூதி இடிப்பு வழக்கு ! » Sri Lanka Muslim

பாபர் மசூதி இடிப்பு வழக்கு !

baabar

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

லக்னோ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கரசேவகர்களுக்கு எதிராக லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதல்-மந்திரியும், ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு கோர்ட்டுகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு கோர்ட்டில் நாள்தோறும் நடைபெற்று வந்த நிலையில், அத்வானி உள்ளிட்டோர், மே 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து, நேரில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அத்வானி உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய 3 பேருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மூன்று தலைவர்களும் பிணையத் தொகையாக தலா ரூ.20 ஆயிரம் செலுத்தி விலக்கு பெற்று கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Web Design by The Design Lanka