பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கு வகிக்க வேண்டும் - ஜனாதிபயிடம் ஹசன் அலி கோரிக்கை! - Sri Lanka Muslim

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கு வகிக்க வேண்டும் – ஜனாதிபயிடம் ஹசன் அலி கோரிக்கை!

Contributors

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்குவகிக்க வேண்டுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, இன்று (08) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“நாட்டை மீளக் கட்டியெழுப்புகின்ற தேசிய வேலை திட்டத்தின் அடிநாதமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளை மாத்திரம் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத பதிவு செய்யப்பட்ட பல அரசியல் கட்சிகளுக்கும் உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளார்கள். அதே போல கடந்த பொது தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கட்சிகளும் உள்ளன.

இனி ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் மக்களால் தெரிவு செய்யப்பட கூடிய கட்சிகளும் வெளியில் உள்ளன.

மறுபுறத்தில் தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகின்ற கட்சிகள் மீதும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையீனத்தையே பெரிதும் வெளிப்படுத்துகின்றனர்.

ஆகவே, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க வருமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team