பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள்? - Sri Lanka Muslim

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள்?

Contributors
author image

Editorial Team

நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடமாகக் கருதப்படும் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணதெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 225 பேர் அங்கம் வகிக்கின்றோம். இதில் 94 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் சித்தியெய்த தகுதியில்லாதவர்களாக இருக்கின்றார்கள்.

 

மேலும் 142 பேருக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்த தகுதியில்லாதவர்களாக இருக்கின்றார்கள். சாதாரண தரம், உயர்தரம் ஆகியன ஒருவரின் புத்தி கூர்மையை மதிப்பீடு செய்யும் ஒரே அளவுகோல் அல்ல என்ற போதிலும், யதார்த்தத்தில் உயர்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களே இருக்கின்றார்கள்.

 

இவ்வாறானவர்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்மானங்களை எடுக்கின்றார்கள். இன்று முகநூல் ஓர் முக்கியமான தொடர்பாடல் சாதனமாக மாற்றமடைந்துள்ளது. இதில் இலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் வெளியாகும் கருத்துக்களே அரசியல்வாதிகளின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள போதுமானது.

 

அரசியல்வாதி என்றாலே கொள்ளை, கொலை, பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர் என்ற ஓர் பிழையான நிலைப்பாடு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நீலம், சிகப்பு நிற அரசாங்கங்களுக்கு பதிலாக பச்சை அரசாங்கமொன்று வந்தாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாது.

 

ஏனெனில், பச்சை அரசாங்கம் வந்தாலும் மோசமான அரசியல்வாதிகள் இதில் வந்து இணைந்து கொள்வார்கள். கட்சி மாறும் அரசியலில் ஈடுபட்டவர்கள் வரலாற்று காலம் முதல் மிக மோசமான விளைவுகளை சந்தித்துள்ளனர். நாட்டின் அரசியல் பொறிமுறைமையில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team