பாராளுமன்ற அமர்வுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் நேரடி ஒலி, ஒளிபரப்பு! - Sri Lanka Muslim

பாராளுமன்ற அமர்வுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் நேரடி ஒலி, ஒளிபரப்பு!

Contributors

பாராளுமன்ற அமர்வுகளை இன்னும் ஒரு மாத காலத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக நேரடியாக ஒளி, ஒலிபரப்புச் செய்ய உள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நேற்று பாராளுமன்ற வாகன தரிப்பிட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அகன்ற திரையினூடாக நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மொபிடெல் நிறுவனத்தின் அனுசரணையுடன் டிஜிட்டல் திரையில் ‘நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மேலும் கூறியதாவது:-

பாராளுமன்ற அமர்வுகளின் போது நடைபெறும் அனைத்து விடயங்களையும் அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஊடகங்கள் செய்தி திரட்டி வெளியிட்டாலும் அனைத்தையும் பிரசுரிப்பதோ ஒளி, ஒலிபரப்புவதோ கிடையாது. இங்கு நடக்கும் அனைத்தை யும் மக்கள் அறிவதற்காகவும் தமது மக்கள் பிரதிநிதிகள் பேசும் விடயங்களை மக்கள் தெரிந்து கொள்ளவுமே இந்த ஆரம்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரந்த திரையில் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்வதன் வெற்றியின் பிரகாரம் ஒரு மாத காலத்தில் முழுநாட்டிற்கும் நேரடி ஒளி, ஒலிபரப்பு மேற்கொள்ளப்படும். அதன்பின், நிலையியற் கட்டளைகள் பூரணமாக அமுல்படுத்தப்படும். இது பூர்வாங்க முயற்சியே என்றார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியதாவது:-

சபாநாயகர் நீண்டகாலமாக இது தொடர்பில் ஆர்வம் செலுத்தி வந்தார். இனிமேல் எம். பி. கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள நேரும். இன்றேல் மக்கள் அவர்களை அடுத்த தடவை பாராளுமன்றம் அனுப்பமாட்டார்கள் என்றார்.

-Tinakaran

Web Design by Srilanka Muslims Web Team