பாலத்தீன் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் `பயங்கரவாதி` என அமெரிக்கா அறிவிப்பு » Sri Lanka Muslim

பாலத்தீன் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் `பயங்கரவாதி` என அமெரிக்கா அறிவிப்பு

hamas

Contributors
author image

BBC

பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை `பயங்கரவாதி` என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், இவர் ஆயுத சண்டைக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கூறி அவரை `பயங்கரவாதி` என்று அறிவித்துள்ளது அமெரிக்கா.

முன்பே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவித்து இருந்தன.

இதனை பயனற்ற ஓர் அறிவிப்பு என ஹமாஸ் இயக்கம் வர்ணித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, அந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியே அனுப்பும் எங்கள் முயற்சியில் இது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஹமாஸ் கூறி உள்ளது.

பாலத்தீன காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கம் வலுவான அமைப்பாக இருந்து வருகிறது.

2008 ஆம் ஆண்டிலிருந்து ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் நாட்டுடன் மூன்று முறை சண்டையிட்டுள்ளது. வெவ்வேறு தாக்குதல்களில் 17 அமெரிக்கர்களை ஹமாஸ் இயக்கம் கொன்றுள்ளது என்று அமெரிக்கா ஹமாஸை குற்றஞ்சாட்டி உள்ளது.

மூன்று அமைப்புகள்

இஸ்மாயில் ஹனியா மட்டுமன்றி, வேறு மூன்று அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது அமெரிக்கா.

காஸா மற்றும் மேற்கு கரையில் இயங்கும் ஹராகத் அல் சபிரீன், எகிப்த்தில் இயங்கும் லிவா அல் தவ்ரா மற்றும் ஹசம் ஆகிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் இறங்கியதுதான் காரணம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பை வெளியிட்ட அரசு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், “அவர்களை பயங்கரவாத செயல்களிலிருந்து தடுக்கும் மிக முக்கியாமன நடவடிக்கை இது” என்றார்.

Web Design by The Design Lanka