பாலமுனை ஜனாஸா வாகனசேவைக்கு 10 வருடங்கள் பூர்த்தி..! - Sri Lanka Muslim

பாலமுனை ஜனாஸா வாகனசேவைக்கு 10 வருடங்கள் பூர்த்தி..!

Contributors
author image

Editorial Team

(அப்ஸத்அயாஷ்-பாலமுனை)

வைத்தியசாலையில் மரணமாகும் முஸ்லிம் ஜனாஸாக்களை வீடு கொண்டு சேர்க்கும் நோக்கில் பொதுமக்களின் நிதிப்பங்களிப்புடன் அம்பாறை மாவட்டத்தைச் சேரந்த பாலமுனை கிராமத்தில் 2012.06.23ம் திகதி ஆரம்பமான ஜனாஸா வாகன சேவைக்கு 10 வருடங்கள் கடந்துள்ளது. சுமார் 1000 க்கு மேற்பட்ட ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்சேவையானது பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரை வழங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஏனைய ஊர்களில் இச்சேவையினை ஆரம்பித்து வைத்த காரணத்தினால் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இச்சேவை இடம் பெறுகிறது.

வாகன சேவையின் மற்றுமொரு பணியாக ஜனாஸா உறவினர்களின் விருப்பத்திற்கு அமைவாக தூர வீடுகளில் இருந்து அடக்கஸ்த்தலத்திற்கு கொண்டு செல்லும் பணியும் இடம் பெற்றுவருகிறது.

இவ்வாகன சேவையினை பராமரிப்பதற்கு நிதி ரீதியான பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிய வேளை ஜனாஸா உறவினர்களின் நன்கொடை மற்றும் ஏனைய தனவந்தர்களின் உதவியையும் பெற்றதுடன், வருட இறுதியில் வாகனத்திற்கான வருடாந்த உத்தரவுப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்காக விசேட நன்கொடையை சிலர் வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்சேவையினூடாக பிரதேச மக்களின் அவல நிலையில் பணம் பெறுவதை தவிர்ப்பதற்காகவும் அரசியல் செல்வாக்கு வாகன பராமரிப்பில் தலையீடு செய்வதை தடுக்கும் நோக்கில் 2021 தொடக்கம் அரச ஊழியர்களின் பங்களிப்புடனும், 2 வருட ஒப்பந்த நன்கொடையாளர்களின் உதவியுடனும் ஜனாஸா வாகன சேவையானது முற்றுமுழுதாக இலவச சேவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!,

இவ்வாகன சேவையானது 10 வருடங்கள் கடந்து செல்லும் நிலையில் மேலும் இச்சேவையினை எதுவித தடங்களுமின்றி இடம்பெற பிரார்த்தனை செய்வதோடு, புதிய ஜனாஸா வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை வழங்குமாறும் பாலமுனை மரண உபகார நிதியத்தினர் வேண்டுகோள்விடுப்பதோடு,

ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உதவி செய்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team