பாலையடிவெட்டை விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறு முஸ்லிம் விவசாயிகள் கோரிக்கை - Sri Lanka Muslim

பாலையடிவெட்டை விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறு முஸ்லிம் விவசாயிகள் கோரிக்கை

Contributors
author image

PMGG ஊடகப்பிரிவு

 பல வருடங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு தமது பாலையடிவெட்டை விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறு  பொத்துவில் கராங்கோ பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் விவசாயிகள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினருக்கும் பொத்துவில் கராங்கோ பாலையடிவெட்டை விவசாயிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த 16ம் திகதி சனிக்கிழமை மாலை பொத்துவிலில்  நடைபெற்றது.

 

இச்சந்திப்பில் மேற்படி பிரதேச விவசாயிகளுடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், பொறியியலாளர் எம்.எம். பழுலுல் ஹக் மற்றும் PMGGயின் பொத்துவில் பிரதேச செயற்குழு உறுப்பினரான சகோ. அன்ஸார்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

பொத்துவில் பிரதேச விவசாயிகள் பாலையடிவெட்டை காணியில் 1976ம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வருகின்றனர். 1982ம் ஆண்டில் இருந்து ஏறத்தாள 503 ஏக்கர் காணிகள் முஸ்லிம் விவசாயிகளினால் பயிரிப்பட்டன. தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் விவசாயம் மேற்கொண்ட முஸ்லிம் விவசாயிகள் யுத்த காலத்தின்போது சில வருடங்கள் இக்காணியைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தனர். யுத்த நிலவரங்கள் தணிந்த நிலையில் 1996ம் ஆண்டு முதல் மீண்டும் அக்காணியில் விவசாயம் செய்து வந்தனர்.

 

இவ்வாறு விவசாயம் செய்யும் 250 பேரில் 100இற்கும் அதிகமானவர்களுக்கு இக்காணிகளுக்கான சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஏனையோருக்கு இவ்வனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்பாக லகுகல பிரதேச சிங்கள விவசாயிகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது நிறுத்தப்பட்டது. காணிக் கச்சேரி உள்ளிட்ட முறையான நடைமுறைகளுக்கூடாகவே முஸ்லீம்களுக்கு இக்காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பில் முஸ்லிம் விவசாயிகள் கேள்வி எழுப்பிய நேரம் இது மேலிடத்து உத்தரவு என பதிலளிக்கப்பட்டிருக்கின்றது.

 

உண்மையில் பாலையடிவெட்டைப் பிரதேசம் பொத்துவில் நிருவாக எல்லைக்குள்தான் அமைந்திருந்தது. இருந்தாலும்  லகுகல பிரதேச எல்லை விஸ்தரிக்கப்பட்டதன் விளைவு மேற்படி காணியும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் லகுகல நிருவாக எல்லைக்குள் உள்வாங்கப்பட்டது. தமக்கு சேரவேண்டிய இக்காணிகளை உரிய முறைப்படி மீட்டுத் தருமாறு முஸ்லிம் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என சகலரிடமும்  பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் முறையிட்டனர்.

 

கிழக்கு மாகாண சபையின் தலையீட்டோடு இப்பிரச்சினையினைத் தீர்பதற்கான முயற்சிகள் இடைக்கிடை மேற்கொள்ளப்பட்ட போதும் கூட இது இப்போது  எல்லோராலும் கைவிடப்பட்ட விடயமாக மாறியிருக்கிறது. இந்நிலைமையிலேதான் பொத்துவில் பிரதேச விவசாயிகள் PMGGயின் உதவியை நாடியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கூட பொத்துவில் வேகாமம் பிரதேசத்தில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள 1800 ஏக்கர் காணிகள் விடயத்திலும் PMGG சட்ட நடவடிக்கை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பாலையடிவெட்டை விவசாயிகளின் விடயங்களை கேட்டறிந்து கொண்ட PMGG சூறாசபை உறுப்பினர்கள் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு தம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

 

24

 

25

 

233

Web Design by Srilanka Muslims Web Team