பின்னடைவு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: இராதாகிருஷ்ணன் - Sri Lanka Muslim

பின்னடைவு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: இராதாகிருஷ்ணன்

Contributors
author image

Editorial Team

‘நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றியில் மலையக மக்கள் முன்னணிக்கும் பாரிய பங்களிப்பு உண்டு’ என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

 

ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

 

‘ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கக்கூடிய ஒன்றாகும். ஆனாலும் ஆளும் கட்சியின் பின்னடைவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு காலம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியில் எமது மலையக மக்கள் முன்னணிக்கு பெரும்பங்குண்டு.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் எமது உறுப்பினர் மன்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 9,227 வாக்குகளை பெற்று வெற்றிபெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டார். அந்த வாக்குகள் இன்று ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்புக்கு   கிடைத்துள்ளன. பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்புக்கு   மேலதிகமாக 11,348 வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, இவ் வெற்றியில்  எமது பங்களிப்பும் உண்டு.

 

இன்றைய விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு என்பவற்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் மக்கள் அரசாங்கத்திற்கு உணர்த்தியுள்ளனர். எனவே, இந்த விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கையும் எமக்கு உண்டு.

 

எமக்கு அமைச்சு பலமோ வேறு எந்த பலமோ இல்லாமல் நாம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றோம். எமக்கு இருப்பது மக்கள் பலம் மாத்திரமே. இதனை அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். (TM)

Web Design by Srilanka Muslims Web Team