பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (02) - Sri Lanka Muslim

பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (02)

Contributors

டாம் லீ, த கிரான்ட் ராப்பிட்ஸ் பிரஸ்ஸூக்கு கருத்து தெரிவித்தபோது, “இந்த விவகாரம்தான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பின்-லேடனின் இருப்பிடம் பற்றி 2003-ம் ஆண்டே துல்லியமான தகவல்கள் இருந்தும், அதன்பின் அவரை 8 ஆண்டுகள் உயிருடன் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். இப்போது, தமமே பின்-லேடனின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததாக கிளெயிம் பண்ணுகிறார்கள்” என்றார்.

தமது கட்சிக்காரர் டாம் லீக்காக இந்த கேஸை எடுத்துள்ள வக்கீல் நிறுவனமும், சில ஆதாரங்களை திரட்டியுள்ளது. டாம் லீயை விசாரித்த எஃப்.பி.ஐ. ஏஜென்ட் கேட்ட கேள்விகள், அவற்றுக்கு டாம் லீ கொடுத்த பதில்கள் அடங்கிய ரிக்கார்ட் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அத்துடன், டாம் லீ இந்த விஷயத்தை முதலில் கூறிய கஸ்ட்டம்ஸ் அதிகாரியிடம் இருந்து, லீ கூறுவது நிஜம்தான் என கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் உள்ள மறைவிட வீட்டில் வைத்து பின்-லேடன் அமெரிக்க சீல் அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். அவரது உடலையும், அமெரிக்கர்களே எடுத்துச் சென்று விட்டனர். இந்த அதிரடி தாக்குதல் நடப்பதற்கு முன், பின்-லேடனின் இருப்பிடத்தை அறிவதற்காக சில வருடங்கள் தகவல் திரட்டியதாக கூறியிருக்கிறது சி.ஐ.ஏ.

அவர்கள் கூறுவதன்படி, போன், இ-மெயில் போன்ற தொடர்பு சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல், நம்பிக்கைக்கு உரிய மனிதர்களை செய்தி தொடர்பாளராக பயன்படுத்தி வந்த பின்-லேடனை, அவரது தகவல் தொடர்பாளர் ஒருவரை வைத்தே பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த நபரை ட்ராக்-டவுன் பண்ணிய சி.ஐ.ஏ., அவரது நடமாட்டங்களை பின்தொடர்ந்தது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர் சென்றுவருவது தெரிந்தது. குறிப்பிட்ட வீடு பல மாதங்களாக இவர்களால் கண்காணிக்கப்பட்டது. அதன்பின், அந்த வீட்டில் பின்-லேடன் மறைந்து இருக்கலாம் என்ற ஊக அடிப்படையிலேயே, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்டு, பின்-லேடன் சுடப்பட்டு, அவரது உடல் அடையாளம் காணப்படும் நிமிடம்வரை, அங்கு பின்-லேடன் நிஜமாகவே இருந்தாரா என்பது சி.ஐ.ஏ.வுக்கே உறுதியாக தெரியாது எனவும் கூறப்பட்டது.

ஊக அடிப்படையில் செய்த தாக்குதல் என்பதால், பின்-லேடன் தலைக்கு அறிவிக்கப்பட்ட 25 மில்லியன் டாலர் சன்மான தொகை யாருக்கும் கிடையாது என்பதே, அமெரிக்க அரசின் நிலைப்பாடு.

“இதில் ஊகமெல்லாம் எதற்கு? எமது கட்சிக்காரர் டாம் லீ, இதுதான் பின்-லேடனின் மறைவிடம் என்று துல்லியமாக தெரிவித்து விட்டாரே” என்கிறது, The Loevy & Loevy வக்கீல் நிறுவனம்.

இதற்குள் மற்றொரு விவகாரமும் உள்ளது.

பாகிஸ்தானில் அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பின்-லேடன் மறைந்திருக்கிறார் என டாம் லீ, 2003-ம் ஆண்டு சொன்னார். 2011-ம் ஆண்டு அதே அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பின்-லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரைக்கும் சரி. அதன் பின்னர்தான் இருக்கிறது அந்த மற்ற விவகாரம்.

2011-ம் ஆண்டு பின்-லேடன் மறைந்திருந்து சுடப்பட்ட அபொத்தாபாத் வீடு, 2005-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது என சி.ஐ.ஏ. கூறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது, ஏ.பி. செய்தி நிறுவனம். இதை சி.ஐ.ஏ. அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அந்த வீடு 2005-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், அந்த வீட்டில் பின்-லேடன் இருந்தார் என 2003-ம் ஆண்டே டாம் லீ கூறியிருக்க முடியாதே என கிளம்பும் புதிய விவகாரம்.

பாகிஸ்தானில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீடு ஒன்று எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு ரிக்கார்ட் ஏதாவது பாகிஸ்தானில் இருக்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை இருந்தாலும், அதை பாகிஸ்தான் கொடுக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம்.

அந்த வீட்டின் சுவர்களையும், சிமென்ட் பூச்சுக்களையும் ஆராய்ந்து, அவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறிய விஞ்ஞான வழிமுறைகள் உள்ளன. ஆனால், அதுகூட இந்த கேஸில் பயன்படாது. காரணம், பின்-லேடன் கொல்லப்பட்ட வீட்டை புல்டோஸர் போட்டு, முழுமையாக இடித்து தள்ளி, அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டது பாகிஸ்தான் அரசு.

பின்-லேடன் சுடப்பட்ட வீட்டையே முழுமையாக அழித்த பாக். அரசு, அந்த வீடு பற்றிய ஆவணங்களை விட்டு வைத்திருப்பார்களா? அனைத்தும் மாயமாக மறைந்திருக்கும்!

இந்த நிலையில், டாம் லீயும், அவரது வக்கீல் டீமும் உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு குடைச்சல் கொடுக்க போகிறார்கள். விவகாரம், 25 மில்லியன் டாலர் பணம் சம்மந்தப்பட்டது என்பதால், இரு தரப்பும் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இரு சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, மேலும் பல விஷயங்கள் வெளியாகும். அல்லது, கோர்ட்டுக்கு வெளியே, 25 மில்லியனைவிட சற்று குறைவான தொகைக்கு செட்டில்மென்ட் செய்து கொள்வார்கள்.(virippu)

Web Design by Srilanka Muslims Web Team