பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா! - Sri Lanka Muslim

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா!

Contributors

தலிபான் பயங்கரவாதிகளின், தாக்குதலுக்கு உள்ளான, சிறுமி மலாலா, “”பாகிஸ்தான் பிரதமர் ஆவதே என் லட்சியம்,” என, கூறியுள்ளார்.

பாகிஸ்தானில், பெண் கல்விக்கு எதிராக, தலிபான்கள் குரல் கொடுத்து வந்தனர். இதை எதிர்த்து, பெண் கல்விக்கு ஆதரவாக, அந்நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி மலாலா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால், தலிபான்கள், மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த மலாலா, லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர்பிழைத்தார்.

லண்டனில் குடியேறியுள்ள அவர், தன் படிப்பை தொடர்ந்து உள்ளதோடு, பெண் கல்விக்கு ஆதரவான பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், தன், 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய மலாலா, ஐ.நா., சபையில் உரையாற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்படும் மலாலாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மலாலா, “டிவி’ பேட்டியில் கூறியதாவது: நான், தலிபான்களின் மிரட்டல்களை கண்டு அஞ்சவில்லை. முதன் முதலில் பயங்கரவாதிகள் என்னை சுட்ட போது, சாவைக் கண்டு அஞ்சினேன்; தற்போது அந்தபயம் எனக்கு இல்லை. நான் உயிர் வாழ விரும்புகிறேன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாக்., பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன்.

நான் முதலில், டாக்டர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர். இவ்வாறு மலாலா கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team