பிரதமர் பதவிக்கு பலர் கோட் சூட்டுடன் தயார் நிலையில் - அசாத் சாலி - Sri Lanka Muslim

பிரதமர் பதவிக்கு பலர் கோட் சூட்டுடன் தயார் நிலையில் – அசாத் சாலி

Contributors

 

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பினால் கொழும்பில் நேற்று(11.12.13) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

முதலில் மறைந்த மாமனிதர் தென் அபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் என்ற அமைப்பின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்காக இலங்கை அரசு இரண்டு நாள் துக்கதினத்தை பிரகடனம் செய்துள்ளது. இது நல்ல விடயம், இருந்தாலும் போதாது. அவரின் தலைமைத்துவப் பண்புகளை நமது அரசியல் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். தென் ஆபிரிக்காவில் அவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்கச் சென்றுள்ள நமது ஜனாதிபதி அங்கிருந்து திரும்பி வருகின்ற போதாவது அந்த மாமனிதரின் நற் சிந்தனைகளை நன்கு புரிந்து கொண்ட ஒருவராக நாடு திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இந்த நாட்டில் இந்த அரசின் கீழ்தான் பிரதமர் ஒருவர் இதுவரை எதிர்நோக்காத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளார். நாட்டின் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் பிரதமருக்கும் தொடர்பு உள்ளதாக இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் பதவி விலக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் கோரவில்லை. மாறாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும், அரசின் தீவிர ஆதரவாளர்களுமான பொது பல சேனாவும் தான் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது அரசாங்கத்துக்குள் பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியையே பிரதி பலிக்கின்றது. பலபேர் அந்தப் பதவிக்கான ‘கோட்சூட்டுடன்’ தயார் நிலையில் இருக்கின்றனர் போல் தெரிகின்றது. பாவம் எம்மைப பொறுத்தமட்டில் அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆனால் கள்வர் குகைக்குள் சிக்கி தற்போது அவரும் தடம் மாறி விட்டாரா? என்பது தெரியவில்லை. இந்த அரசாங்கம் ஒருவரை அவமானப்படுத்த நினைத்தால் எந்த எல்லை வரையும் செல்லும் என்பதையும் நாம் அறிவோம்.

CHOGM மாநாட்டுக்கு தருவிக்கப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு அந்தப் பணம் மாநாட்டு செலவுகளை ஈடு செய்ய பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த வாகனங்கள் அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார இக்கட்டில் அமச்சர்களுக்கு மேலும் ஒரு ஆடம்பர வாகனம் தேவையா? இந்த சுமையும் மக்கள் மீதல்லவா சுமத்தப்படுகின்றது.

புறக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களும், ஊழியர்களும் இன்று நடு வீதிக்கு கொண்டு வரப்பட்டடுள்ளனர். இது எப்படி நடந்தது என்பது மர்மமாக உள்ளது. எந்த விதமான விசாரணைகளையும் ஆரம்பிப்தற்கு முன்பதாகவே பொலிஸார் முந்தியடித்துக் கொண்டு சதி வேலைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறுகின்றனர். இந்த அவசரக் கூற்றுதான் அங்கு நிச்சயம் சதி வேலை இட்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். இது சதி வேலையாக இருப்பின் அதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் கடன் சுமை முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபா கடனாளிகளாக உள்ளனர். அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இந்த தனிநபர் கடன் தொகை இன்று அதிகரித்துள்ளது. ஆனால் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கு புது விளக்கமளித்துள்ளார். அரசாங்கம் ஒரு தனி மனிதனுக்காக மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாவை முதலீடு செய்துள்ளது என்று எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். அவர் எங்கு தான் தனது கணித பாடத்தை கற்றாரோ எனக்குத் தெரியாது. மக்களை ஏமாற்றுவதை மட்டுமே நோக்காகக் கொண்டு இப்போது எல்லோருமே உளரத் தொடங்கிவிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் இன்று மிக முக்கியமான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உச்ச நீதிமன்ற நிதியரசர்கள் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கின்ற போது பொது நலவாய அமைப்பு நாடுகளில் பின்பற்றப்படுகின்ற பொதுவான நடைமுறையே இலங்கையிலும் பின்பற்றப்பட வேண்டும் எனக் கோரும் வகையிலேயே இந்த பிரேரணை அமைந்துள்ளது. இந்தப் பிரேரணையை தட்டிக் கழிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.அப்படி தட்டிக் கழித்தால் அது பொது நல வாயத்தின் பொதுவான கொள்கைகளை அதற்கு தலைமை தாங்கும் நாடே மீறுவது போல் ஆகிவிடும்.ஜனாதிபதி பொது நல வாயத்தின் தலைவராக வரும் வரை காத்திருந்து விஜேதாஸ ராஜபக்ஷ இந்த தீhமானத்தைக் கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team