பிரதம செயலாளராக இருந்த தமிழர்களால் செய்ய முடியாதவற்றை வடமாகாண புதிய பிரதம செயலாளர் செய்வார் : அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்..! - Sri Lanka Muslim

பிரதம செயலாளராக இருந்த தமிழர்களால் செய்ய முடியாதவற்றை வடமாகாண புதிய பிரதம செயலாளர் செய்வார் : அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

வடமாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதம செயலாளரை வரவேற்கிறோம். வடமாகாண சபை வரலாற்றில் ஆரம்பம் முதல் இப்போதுவரை இருந்த பிரதம செயலாளர்கள் வடமாகாணத்தின் மீது பற்றோ அல்லது ஊழியர்கள் மீது கவனமோ இல்லாதவர்களாகவே இருந்தனர். கடந்த காலங்களில் முறையான திட்டமிடல்களை பிரதம செயலாளர்கள் செய்யாமையினால் மாகாண அபிவிருத்திக்கு மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பல நிதிகள் திரும்பிச்சென்றுள்ளது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி என்பன ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (07) கல்முனை தலைமைக் காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அவரது தலைமையிலான அமைச்சரவை போன்ற கட்டமைப்புக்கள் அப்போது இருந்தும் நிர்வாக ரீதியாக சரியாக இயங்காதவர்களே பிரதம செயலாளர்களாக வடமாகாண சபைக்கு இருந்துள்ளனர். இப்போது சிங்கள சகோதரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன, மத பேதங்களினால் எமது பிரதேசங்களும், நாடும் பின்தங்கியுள்ளது. எம்மை நாம் முன்னேற்ற பேதங்கள் கடந்து ஒன்றித்து பயணிக்க வேண்டும். உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு, கொடுப்பனவுகள், ஆட்சேர்ப்புக்களில் பல குறைகள் கடந்தகாலங்களில் இருந்தது அதனை போக்க ஆலோசனை குழுவமைக்குமாறு கோரினோம். அதுவும் அந்த காலங்களில் நடக்கவில்லை.

வடகிழக்கு இணைந்திருந்த காலத்தில் செய்த சேவைகளுக்கும் மாகாணங்கள் பிரிந்த பின்னர் செய்த சேவைகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. நிர்வாக ஆளுமை உள்ள எங்களை ஒன்றிணைத்து சென்றிருந்தால் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருப்போம். இப்போது முதுமையில் உள்ள எங்களின் மரணத்தின் பின்னர் எங்களின் அறிவு, திறமையும் பயன்படுத்தப்படாமலே சென்றுவிடும். வவுனியா மக்களினால் பெரிதும் பாராட்டப்பட்ட சமன் வந்துலசேன அவர்கள் புதிய பிரதம செயலாளராக பதவியேற்றதை தொடர்ந்து நாங்கள் அவருடன் பேசினோம். அவரது நல்ல குணவியல்புகளில் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. தமிழ் மகனால் வடக்குக்கு செய்ய முடியாத பலவற்றையும் புதிய பிரதம செயலாளர் செய்வார். இவரது நியமனம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனும் பேசினோம்.

வடக்கு கிழக்கில் உள்ள ஒரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாக பாராளுமன்றத்திலும், 25 வருடங்களாக அமைச்சரவையிலும் இருக்கும் சிரேஷ்ட அமைச்சர். டக்ளஸ் அவர்களை பலப்படுத்தி எமது பிரதேசங்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக எதிர்வரும் தேர்தல்களில் அவரது அணியை பலப்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஊடக சந்திப்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். யோகராசா, தேசிய அமைப்பாளர் ஐ.எம். இப்ரா லெப்பையும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team