பிரதியமைச்சருக்கு வேடிக்கையாக தோண்றவில்லையா? » Sri Lanka Muslim

பிரதியமைச்சருக்கு வேடிக்கையாக தோண்றவில்லையா?

harees

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(நியாஸ் கலந்தர்)


கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக கூறி முஸ்லிம் காங்ரசின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் பின் கதவால் வந்ததை மறந்து விட்டு பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடகங்களில் “நல்லாட்சியை உருவாக்கியதில் பாரிய பங்கு முஸ்லிம் காங்ரசுக்கே உண்டு”என கூறுவது பிரதியமைச்சருக்கு வேடிக்கையாக தோண்றவில்லையா?

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு அரசுக்கு பாடம் புகட்டுவோம் எனக் கூறி இருக்கும் தாங்கள் அம்பாறை மாவட்டத்தின் இறக்காம பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கும்,பொத்தானை பள்ளிவாசல் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும் எதிராக முஸ்லிம் காங்ரஸ் கட்சியினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துக்கள்.உங்கள் கூற்றானது மரத்தில் இருக்கும் மாங்காய்களை வாய்களினால் பறிப்பதை போன்று உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பிறந்த சாதாரண குடிமகனுக்கு அரசியல் காய் நகர்த்தும் திறமை இருந்திருந்தால் முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் தலைவரை எப்போதோ நிராகரித்திருப்பார்கள். வாய்ச் சொல்லில் வீரம் பேசும் உங்களை போன்ற அரசியல்வாதிகளையும் நிராகரித்திருப்பார்கள்.

அம்பாறை மாவட்ட மக்கள் இன்னும் விளிப்படைய வேண்டிய தேவை இருக்கிறது.அம்பாறை மாவட்ட மக்கள் அழு குரல்களுக்கு அடிமையானவர்கள் என்பதை முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு புரிந்து வைத்திருப்பதனால் தான் இன்னும் நீங்கள் பாராளுமன்ற கதிரையை அலங்கரித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பெரும் தலைவர் அஷ்ரப் காட்டி தந்த வழியிலா உங்களது கட்சியின் நகர்வு உள்ளது என மனட்சாட்சியை கொண்டு பதிலளியுங்கள்.

யானைச் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற இனவாதத்தை வெளிப்படையாக பேசும் தயாகமகே போன்றவர்களுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களித்ததிற்கு பிரதான காரணம் அம்பாறை மாவட்ட மக்கள் உங்கள் கட்சி மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடாகும்.

ஒரு வகையில் தயாகமகே இனத்துவேசம் பேசும் அளவு அம்பாறையில் உருவாக்கப்பட்டதற்கு முஸ்லிம் காங்ரஸ் கூட காரணமாக இருக்கலாம்.தயாகமகேயினால் கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு பயிற்சியை மேற் கொள்ளும் வெளிநாட்டு பணியகத்தை அம்பாறைக்கு மாற்ற முடியுமாக இருந்த போது ஏன் அதை உங்களால் தடுக்க முடியாமல் போனது.

பாராளுமன்றத்திலே மக்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்தி அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பீர்கள் என உங்களை மக்கள் பாராளுமன்றத்திற்கு அவர்களின் பிரதிநிதியாக தெரிவு செய்திருக்கிறார்கள்.ஆனால் இதுவரை இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திலே உரையாற்றாமல் வாய்மூடி மெளனியாக இருப்பதன் காரணம் என்ன.

உங்களின் வீர வார்த்தைகளுக்கு கைதட்டல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேசிவிட்டு போகாமல் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கடுகளவேனும் நன்றியுடையவராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

Web Design by The Design Lanka