பிரதேச சபையின் செயலாளர் சபையினை பிழையாக வழிநடாத்துவதற்கு முயற்சி: அட்டாளைச்சேனை பிரதி தவிசாளர் » Sri Lanka Muslim

பிரதேச சபையின் செயலாளர் சபையினை பிழையாக வழிநடாத்துவதற்கு முயற்சி: அட்டாளைச்சேனை பிரதி தவிசாளர்

DSC_8134

Contributors
author image

M.J.M.சஜீத்

சபையின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக, சட்டத்திற்கு முரணாக செயற்பட முடியாதெனவும், சட்டதின் பிரகாரமே சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2வது அமர்வு செவ்வாய்க்கிழமை (10) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது சபையின் முதலாவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தினை அமுல்படுத்தல், துணை விதிகள் சட்டம் மற்றும் நிதி, நிருவாக விதிகள் என்பவற்றை சபை அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல் மற்றும் அதிகாரங்களை கையளிக்கின்ற விடயங்கள், நடப்பு வருட பாதீட்டினை அங்கீகரித்தல் என முக்கிய விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. சட்டரீதியான முக்கியமான விடயங்களை தவிர்த்து பிழையான முறையில் இந்த அமர்வினை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே சட்டத்தின் பிரகாரம், முறைாக அமர்வினை நடாத்த வேண்டும்

சபையினுடைய அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக சபையினை பிழையாக வழிநடாத்தி, சட்டத்திற்கு முரணாக செயற்பட முடியாது. தவிசாளரையும், சபையையும் சட்டத்தின் பிரகாரம் வழிநாடத்துகின்ற பாரிய பொறுப்பும், கடமையும் செயலாளருக்கு உள்ளது. எனவே செயலாளரானவர் பக்கச்சார்பின்றி நீதி, நேர்மையாக செயற்பட வேண்டும்.

ஒரு பிரதேச சபைக்கு தவிசாளராக தெரிவு செய்யப்படுகின்றவர் அவர் சார்ந்த கட்சிக்கு மாத்திரம் தவிசாளராக இருக்கமுடியாது. அவர் குறித்த சபைக்கு மாத்திரமல்ல அந்தப்பிரதேசத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த மக்களினதும் தவிசாளராக இருந்து செயற்பட வேண்டும். ஆகவே, தவிசளரும் நீதி நேர்மையாக இருந்து செயற்பட வேண்டும்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் இந்த சபையிலே உறுப்பினர்களாக இருக்கின்றோம். ஆகவே மக்களது தேவைகளை அறிந்து சேவையாற்ற வேண்டும். அந்த வகையில் நானும் ஒரு பிரதி தவிசாளராக இந்த சபையிலே இருந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பினை வழங்கிய தேசிய காங்கிரசின் தலைவருக்கும், அதன் தேசிய அமைப்பாளருக்கும் இந்த பிரதேசத்திலே தேசிய காங்கிரசிக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த சபையிலே நாம் கட்சி ரீதியாக பிரிந்து செயற்படுவோமானால் எங்களால் இந்தப் பிரதேசத்திலே ஒன்றுமே செய்ய முடியாது போய்விடும், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மாத்திரமே, எனவே எமக்கு வாக்களித்த மக்களது எதிர்பார்ப்புக்கள் வீன்போகாத வகையில் உறுப்பினர்களாகிய நாம் செயற்பட வேண்டும். எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நலன்கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு முன்வர வேண்டும்.

குறிப்பாக இந்த சபையிலே கொண்டுவரப்படுகின்ற நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். அதேபோன்று பிழையானவைகளை பகிரங்கமாக எதிர்ப்போம். அதற்காக எமது பிரதேசமும், மக்களும் நன்மையடையக்கூடிய வகையில் நல்ல பல திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். பிரதானமாக நூலகங்கள், வீதிகள், வடிகான்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்தல், சுகாதார மற்றும் சுற்றாடல் மேம்பாடுகள், தெரு மின்விளக்குகள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நாம் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இருவாரங்களின் பின்னர் மேற்குறித்த விடயங்களை இணைத்துக்கொண்டு அடுத்த அமர்வினை கூட்டுவதாக சபை தவிசாளர் அறிவித்தார்.

DSC_8134 Pro

Web Design by The Design Lanka