பிரதேச வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான சுகாதார கட்டமைப்பு வசதி - கண்டி வைத்திய அதிகாரிகள் சங்க வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு - Sri Lanka Muslim

பிரதேச வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான சுகாதார கட்டமைப்பு வசதி – கண்டி வைத்திய அதிகாரிகள் சங்க வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

Contributors

நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான பயன்தரக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நோக்கத்தை குறுகிய காலத்தில் அடைந்துகொள்வதற்காக புதிய ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கண்டியில் (07) நடைபெற்ற கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 43ஆவது வருடாந்த அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். ஆகவே நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காண்பதற்காக வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகள் நிபுணர்களை உள்ளடக்கிய அனைத்து சுகாதாரத் துறையை சார்ந்தவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது அவசியமாகுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சிக்காக 17மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது கிராமப்புற மற்றும் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக பார்வையிட முடிந்ததாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். சுகாதார கட்டமைப்பில் வெற்றிகொள்ளப்பட வேண்டிய பல்வேறு பலவீனங்களை அங்கு அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. இப்பலவீனங்கள் மேலும் தொடர்ந்தால் மோசமான பாரிய பின் விளைவுகள் உருவாகலாம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய மட்டத்தில் இந்நிலையை வெற்றி கொள்வதன் அவசியம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு வைத்தியர்களின் விரைவான அவதானம் இடம்பெற வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கல்வி அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (09) நிறைவுபெறும். இங்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் விசேட அனுபவங்கள் தொடர்பான ஆய்வுகள் விரிவாக ஆராயப்படும்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கண்டி நகர பிதா கேசர சேனாநாயக்க, கண்டி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் துஷ்யந்த மெதகெதர ஆகியோருடன் வைத்திய சங்கத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team