பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார் - முத்தையா முரளிதரன் - Sri Lanka Muslim

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார் – முத்தையா முரளிதரன்

Contributors

இலங்கையில் யுத்தம் முடிவடை யும் காலகட்டத்தில் வடக்கில் பொதுமக்கள் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நற்பெயருக்கு தீங்கிழைக்கும் எண்ணத்துடன் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். சனல் 4 தொலைக்காட்சி சேவையின் தயாரிப்பாளர்கள் தமிழர் என்ற முறையில் முத்தையா முரளிதரனிடம் இருந்து இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்தை எதிர்பார்த்தே இந்த பேட்டியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இலங்கை வாழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இதற்கு முன்னர் உலக நாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகள் மூலம் எடுத்துரைத்த முத்தையா முரளிதரன், சனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு ஒரு சரியான பதிலை அளித்தார்.

யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமமந்திரி உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றி ருக்கவில்லை. அதுமட்டுமல்ல இலங்கைக்கு கூட இதற்கு முன்னர் வரவில்லை. சிறு வயது நிகழ்வுகள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.

எனவே, அவர் இங்கு வந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்று தெரிவித்த முத்தையா முரளிதரன், அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் பிரதமமந்திரி தவறான விசாரணைகளை நடத்தி இல்லாத குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு எத்தனிக்கிறார். நான் அப்படியான கொள்கைகளை என்றுமே கடைப்பிடிப்பதில்லை என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் அப்படியானால் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், எனக்கும் என்னுடைய கடந்த காலம் ஞாபகம் இருக்கிறது.

நானும் ஒரு தமிழன். 1977ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது எனது குடும்பமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எங்களிடம் இருந்த அனைத்துமே அழிந்து போயின. அப்படியான துன்பங்களை அனுபவித்தாலும் நான் எனது கடந்த காலத்தை பற்றி நினைத்து துன்பப்படுவதே இல்லை என்றும் கூறினார்.

கடந்தகாலத்தைப் பற்றி மறந்து கடந்தகால துன்பங்களை இழைத்தவர்களுக்கு மன்னிப்பளித்து நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதே எனது நோக்கமாகும். இது பற்றி இயேசுநாதரும் ஒரு தடவை கூறியிருக்கிறார் என்றும் முத்தையா முரளிதரன் சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.thinakaran

Web Design by Srilanka Muslims Web Team