பிரித்தாளும் தந்திரத்தால் பின்தள்ளப்படும் பொத்துவில் » Sri Lanka Muslim

பிரித்தாளும் தந்திரத்தால் பின்தள்ளப்படும் பொத்துவில்

pottuvil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(வில்லூர் இர்சாத் ஜமால் (MA))


பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள, இயற்கை வளங்களை கொண்டதொரு முஸ்லிம் பிரதேசமாகும்.

இப்பிரதேச வாக்குகளை காவு கொள்வதற்கு வந்து செல்லும் அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகள் பல வழங்கிய போதும் அவையனைத்தும் இலவு காத்த கிளியின் கதை போலாகிப் போகின்றன.
சுமார் 25000 க்கு மேற்பட்ட வாக்கு வங்கியை கொண்ட இப்பிரதேசத்திற்கு பாராளுமன்ற, மாகாண உறுப்பினர்களை பெற்றெடுப்பதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. மருத்துவம் செய்து மலடி பெற்ற பிள்ளை போன்று கடந்த 2000ம் ஆண்டு, ஐ. தே. கட்சி, மு. கா வினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் ஊடாக அப்துல் மஜீட், மர்ஹூம் அப்துல் அஸீஸ் ஆகியோர் பாராளுமன்ற கதிரையில் அமரும் பாக்கியத்தை பெற்றனர். இருந்தும் அது நீடிக்கவில்லை.

2009ம் ஆண்டு நடைபெற்ற கி. மா சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அப்துல் மஜீத் அவர்கள் 2013ம் ஆண்டு மு. கா சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட போதும் தோல்வியை தழுவினார்.
பிரதேச நலம் பாராது சுயநல நிகழ்ச்சி நிரலில் அரசியற் செயற்பாடுகள் தோற்றம் பெற்ற போது பிணக்குகளும், பிரிவினைவாதமும் தோற்றம் பெற்றன. இதனை சாதகமாக பயன்படுத்திய அயல் அரசியல் வாதிகள் தமக்கான ஏஜன்டுகளை தேட விரித்த வலையில் தனித்தனி அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என சிக்கிக் கொண்டனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய மு.கா தலைவர் மறைமுகமாக அப்துல் மஜீதுக்கு எதிர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஏஜன்டுகளும் தமது எஜமானர்களின் வெற்றியை நோக்கி அயராது உழைத்தனர். இதனால் பொத்துவில் தொகுதியில் மஜீத் தனிமைப் படுத்தப்பட்டார். இக்காரணங்களே தோழ்விக்கு இட்டுச் சென்றது என இற்றைவரை குற்றம் சாட்டப்படுகின்றது.

மு.கா உறுப்பினர்களின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கும் போது எஞ்சியிருக்கும் அரசியல் அதிகாரமான தவிசாளர் பதவியும் பறி போகும் அச்சநிலை தோன்றியுள்ளது. பிரதேச சபையினை ஆட்சி செய்த மு.கா வின் முன்னால் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் ஏஜன்டுகளாக தொழிற்படும் பாராளுமன்ற, மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகளை கவனிக்கையிலே குறித்த சந்தேகம் எழுகிறது.

பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான எம்.எஸ்.எம் மர்சூக், எம். எஸ் அப்துல் வாசித் பிரதித் தவிசாளர் ஏ.எம் தாஜுடீன் மற்றும் எம். எஸ் முபாரக், எம்.எம் முபாரக், எம்.எச்.எம் ரஹீம் ஆகியோர் கடந்த பிரதேச சபை ஆட்சிக்காலத்தில் மு. காவை பிரதிநிதிப்படுத்தியவர்கள்.

எம். எஸ் அப்துல் வாசித்தினால் 2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஜட்டை தோற்கடிப்பதற்கான முஸ்தீபினை மேற்கொண்ட சக மு. கா உறுப்பினர்கள் மேற்கொண்டனர். இவர்களின் உள்வீட்டுப் பிரச்சினை சந்தி சிரிக்கும் விடயமாக மாறியது மாத்திரமின்றி வேதாலமேறிய தனிப்பட்ட அரசியல் பிணக்கானது, கிடப்பில் போடப்பட்ட அமைப்பாளர் பதிவி நியமனத்தின் போது அது தலைவிரித்தாடியதை காணலாம்.

அதிகூடிய வாக்கைப் பெற்று தவிசாளர் பதவியை வகித்தவரே அமைப்பாளர் பதவியால் அலங்கரப்பட வேண்டியவர். அவ்வகையில் தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாசித்தே அப்பதவிக்கு தகுதியுடையவர்.

இருந்த போதும் இவர்களுக்கு மத்தியில் காணப்பட்ட பதவியாசையின் காரணமாக ஓடும்  தண்ணில நழுவுர மீன் போல் ஓராண்டு ஒப்பந்ததின் அடிப்படையில் மு. கா தலைவரால் அமைப்பாளர் பதவி அப்துல் வாசித்திற்கு வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவரினால் பிரதான வீதியில் கட்சிக் காரியலயம் திறக்கப்பட்டு இன்று வரை அது இயங்கி வருகின்றது.

மர்ஹூம் அப்துல் அஸீஸ் அவர்கள் மு. காவின் அமைப்பாளராக இருந்த போது, அவர் ஊடாகவே அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதுடன், எம்.பிகள் வருவதாயின் அவரிடம் அறிவித்துவிட்டே வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது கட்சியின் காரியாலத்திற்கு வருகை தராமலும், தவிசாளருக்கு வருகையை அறியப்படுத்தாமலும் வந்து செல்வதை மு. கா எம்.பிகளும், மா. ச. உறுப்பினர்களும் தமது வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் பிரதேச அரசியல் வாதிகளுக்கு மத்தியில் காணப்படும் விரோதம் உச்சநிலை அடைகின்றது.

இச் செயற்பாடுகளின் பின்னணியில் ,எதிர்வரும் உள்ளூராட்சி, மாகண சபைத் தேர்தல்களின் போது தவிசாளர் மற்றும் மாகாண சபை கதிரைகளை இலக்கு வைத்து செயற்படும் அரசியல் தரகர்கள் இருப்பதாக தென்படுகின்றது.

இதன் பின்னணியில் மு.காவின் தலைவர், பிரதி அமைச்சர்கள், எம்.பிகள், மற்றும் மா.ச. உறுப்பினர்களின் பிரித்தாலும் தந்திரம் இருக்கத்தான் செய்கின்றது. ஏனெனில், இவர்களுக்கு மத்தியில் இருக்கும் பகையை மென்மேலும் எரியச் செய்வதனூடகவே கட்சியின் வாக்கு வங்கியின் திறவு கோலாக இருக்கும் பொத்துவில் பிரதேச நீண்ட நாள் பிரச்சினைகளை அடுத்த தேர்களின் போதும் துடுப்பாக பயன்படுத்த முடியும்.

இன்னும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது பொத்துவில் பிரதேசத்தை புறந்தள்ளி விட்டு அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்லும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைக்கும்.

மேலும், தனக்கான தரகரை தக்கவைப்பதனூடாக பொத்துவில் மக்களின் வாக்குகளை காவுகொள்ளலாம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வரும் பிரதி அமைச்சர்களான ஹரீஸ், பைசல் காசிம், எம். பி மன்சூர் மற்றும் கி. மா. அமைச்சர் ஏ.எல் நசீர், ஏ.எல் தவம் ஆகியோர்களுக்கு தனிப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களூடாகவே அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பிரிவினை வாதத்தினால் பொத்துவில் அரசியலில் கடுமையான போட்டித் தன்மையோடான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெறுவாதக அவரவர் தரகர்கள் சமூக வலைத்தளங்களில் காட்டிக்கொள்வது மாத்திரமின்றி மக்களை ஏமாற்றியும் வருகின்றனர்.

பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன, அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த வழி வைத்தியசாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதுதான். என பல நூறு கூட்டங்களில் தனது கோரிக்கையாக முன்வைத்த சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், தனது கோரிக்கையை மறந்து நிந்தவூர் வைத்திய சாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன், அபிவிருத்தி திட்டங்களுக்கு பல கோடியை ஒதுக்கியுள்ளார்.

பிரதி விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீஸின் செயற்பாடுகளும் அவ்வாறே உள்ளது. பல விளையாட்டுக் கழகங்கள் உள்ள இப்பிரதேசத்தில் பொது விளையாட்டு மைதானம் இல்லை. அம்மைதானத்தை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கிய போதும் தனது பிரதேச விளையாட்டு கழகங்கள், மைதானங்களை புனர் நிர்மாணம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு கை தட்டி ஓசை வராது. மின்சாரமின்றி மின் குமிழ் எரியாது என்பதனை ஏற்றுக்கொண்டு, பகைகளை மறந்து , சுய இலாபங்களையும், தேவைகளையும் பரம் தல்லி, பிரிவினைகளுக்கும், பிரித்தாலும் மந்திரத்திற்குள்ளும் அகப்படாமல் , பிரதேச அபிவிருத்தியை இலக்காக கொண்டு மு.கா உறுப்பினர்கள் ஒற்றுமையோடு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று சேர வேண்டும்.

Web Design by The Design Lanka