பிரியாவிடை » Sri Lanka Muslim

பிரியாவிடை

ramad

Contributors
author image

M.M.A.Samad

(முனையூரான் – எம்.எம்.ஏ.ஸமட்)


அருளையள்ளித் தந்து
அகம் நிறைய
ஆனந்த மழை மொழிந்து
அகன்று செல்லும் ரமழானே!
உனக்கு
எங்கள் அன்பு ஸலாம்!

பாவப் பிணிகளை
சுட்டெரித்து
இதயவெளிகளை
பரிசுத்தம் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் இதயத்து சோபனங்கள்!

புலன்களுக்கு
பூட்டுப் போட்டு
மனங்களில்
புலன்களாலே புதுப் பொலிவை
மலரச் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் மனதின் வந்தனங்கள்!

இரவுகளில்
இறைவனுக்காய் தொழச் செய்து
நெஞ்சங்களில் நன்மையினொலியினை
படரச் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் நெஞ்சத்து வாழ்த்துக்கள்!

பிறைக்கீற்றாய்
பிறந்து
மதியாய் வளர்ந்து
மனித நேயங்களை
மனிதர்களுக்குள்
மலரச் செய்து மறையும்
மாட்சிமைமிக்க ரமழானே!
உனக்கு
எங்கள் உள்ளத்து நன்றிகள்!

ஒரே மாதத்தில்
ஒரே நோக்கோடு
நோன்பை நோக்கச் செய்து
ஐக்கியத்தை
அகிலத்துக்கு அறிவித்த ரமழானே!
உந்தன் பிரியாவிடைப் பொழுதிலிருந்து
புலரும் இன்பப் பெருநாளோடு
வளர வேண்டும்
எங்களுக்குள் ஐக்கியம்!

(இக்கவிதை – 2005.11.05ம் திகதி நோன்புப் பெருநாள் தினமான அன்று இலங்கை ரூபவாஹினி தொலைகாட்சி சேவையில் ஒலிஃஒளி பரப்புச் செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் விஷேட நிகழ்ச்சியில் என்னால் வாசிக்கப்பட்டது)

Web Design by The Design Lanka