பிரேசிலில் கொரோனா தொற்று புதிய உச்சம், ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு - Sri Lanka Muslim

பிரேசிலில் கொரோனா தொற்று புதிய உச்சம், ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Contributors

பிரேசிலில் முதல் முறையாக கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு அந்நாட்டில் தொற்று வீதமும் உச்சம் பெற்றுள்ளது.

கொரோனா வைரசினால் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள நாடு பிரேசில் ஆகும். அங்கு இதுவரை 1 கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசின் பிடிக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிக உயிரிழப்பு எண்ணிக்கையை காட்டும் பிரேசிலில் இந்தப் பெருந்தொற்றினால் இதுவரை 268,370 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த புதன்கிழமை மாத்திரம் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு 2,286 பேர் உயிரிழந்துள்ளனர்.

மறுபுறம் ஒற்றை நாளில் மூன்றாவது அதிகபட்ச நோய்த் தொற்று சம்பவமாக கடந்த புதன்கிழமை 79,876 பேரிடம் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் பெற்ற புதிய கொரோனா வகைகளால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நோய்த் தொற்று அதிகரிப்பால் பிரேசிலின் பல பிராந்தியங்களிலும் சுகாதார கட்டமைப்பு நிலைகுலையும் நிலையை நெருங்கியிருப்பதாக அந்நாட்டின் முன்னணி பொதுச் சுகாதார மையமான பியுக்ரூஸ் எச்சரித்துள்ளது.

“இது பெருந்தொற்றின் மோசமான தருணமாக உள்ளது” என்று பியுக்ரூஸ் அமைப்பின் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான மர்க்ரேத் டெல்கொல்மோ எச்சரித்துள்ளார்.

“2021 மிகக் கடினமாக ஆண்டாக இருக்கப்போகிறது” என்றும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட அமெரிக்காவில் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், லத்தீன் அமெரிக்காவில் அது அதிகரித்து வருவதாகவும், ‘பான்’ அமெரிக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாகப், பிரேசிலில் வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளதால், தினந்தோறும் வைரஸ் தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு பிரேசில் மாநிலத்திலும், நோய்ப்பரவல் அதிகரித்து வருகிறது என்றும் அமேசன் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்றும், நிறுவன இயக்குநர் காரிசா எட்டியன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அங்குள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதைச் சமாளிக்க, பிரேஸிலில் மிகக் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்தது.

Web Design by Srilanka Muslims Web Team