பிள்ளைகளால் தாக்கப்பட்டு பெற்றோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு : கவலைக்குரியதென்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Sri Lanka Muslim

பிள்ளைகளால் தாக்கப்பட்டு பெற்றோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு : கவலைக்குரியதென்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Contributors

எம்.மனோசித்ரா)

கிளிநொச்சியில் மகனால் தாக்குதலுக்குள்ளான தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மகனால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தந்தை நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 11 ஆம் திகதி கிளிநொச்சி – கனகபுரம் பிரதேசத்தில் 20 வயது மகனால் 53 வயதுடைய தந்தை தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மகனால் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

கடந்த சில மாதங்களாக இவ்வாறு பிள்ளைகளால் தாக்கப்பட்டு பெற்றோர் காயமடைதல் அல்லது உயிரிழத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team