புதிய அதிபர்களுக்கான பாடசாலைப் பொறுப்புக்கள் 10 நாட்களுக்குள் - கல்வி அமைச்சு நடவடிக்கை » Sri Lanka Muslim

புதிய அதிபர்களுக்கான பாடசாலைப் பொறுப்புக்கள் 10 நாட்களுக்குள் – கல்வி அமைச்சு நடவடிக்கை

e88

Contributors
author image

பி. முஹாஜிரீன்

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களுக்கான பாடசாலைப் பொறுப்புக்களை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வழங்குவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின்; புதிய அதிபர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு புதன்கிழமை (11) திருகோணமலை விபுலானந்தர் கல்லூயில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களுக்கான பாடசாலைப் பொறுப்புக்களை வழங்குவது தெடர்பில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற புதிய அதிபர்களுடனான இச்சந்திப்பில், அதிபர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தங்களது இடநிலைப்படுத்தல் தாமதமாவது தொடர்பில் கோசங்களை எழுப்பி கண்டனங்களைத் தெரிவித்தனர்.

‘கடமை நிறைவேற்று அதிபர்களை திருப்திப்படுத்துவதற்காக எங்களது இடநிலைப்படுத்தலை தாமதப்படுத்த வேண்டாம், நாங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டப்படி பரீட்சைக்குத் தோற்றி, பயிற்சி பெற்று, பயிற்சியின் பின்னர் நடைபெற்ற பரீட்சையிலும் சித்தி பெற்று பாடசாலைகளை நிருவகிக்கக்கூடிய மன நிலையிலுள்ளோம். அதனால் சில அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களது இடநிலைப்படுத்தலை இழுத்தடிப்புச் செய்து வருவது மனித உரிமை மீறலாகும்.

புதிய அதிபர்ளது இடநிலைப்படுத்தல் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இன்னமும் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அவர்களிடம் தெளிவான திட்டமில்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நியமனம் கிடைக்கப்பெற்று பல மாதங்கள் கடந்த நிலையில் ஆசிரியர்களாகவே நாம் செயற்பட்டு வருகின்றோம். பொறுப்புக்கள் வழங்குவது தொடர்பில் பல தடவைகள் அங்குமிங்கும் அழைகக்ப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளோம். இதில் மத்திய கல்வி அமைச்சின் பணிப்புரைகளும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தாமதமில்லாமல் பொறுப்புக்களை வழங்குவதற்கு, இல்லாவிட்டால் மீண்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல கோரிக்கைகளை கோசங்களாகவும் கேள்விகளாகவும் அதிபர்கள் முன்வைத்தனர்.

இவர்களது கருத்துக்களை ஒவ்வொன்றாக செவிமடுத்த மாகாண கல்வி அமைச்சர் எஸ். துண்டாயுதபாணி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அதிபர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவர்களுக்கான இடங்கள் வழங்கப்படும். புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்கும்போது கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட்டு வரும் அதிபர்களையும் கவனத்திற்கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது.

கடந்த மாதம் அதிபர்களை இடநிலைப்படுத்தப்படுத்தலுக்கான பாடசாலைத் தெரிவுகள் நடைபெற்றன. அதிபர் போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் அதிபர்களால் அவர்களுக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. இவ்வாறான தெரிவுகள் பலரைப் பாதித்திருப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக பெண்களில் அதிகமானோருக்கும் இன்னும் பலருக்கு தூர இடங்களும் கிடைத்திருப்பதால் இத்தெரிவில் சில நெகிழ்வுத் தன்மையை கையாள வேண்டியுள்ளது.

இதனால் அதிபர்களது வதிவிடத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அதிபருக்கும் பாதிப்பில்லாமல் அவர்களுக்கான இடநிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும். இந்த இடநிலைப்படுத்தலை முறையாக மேற்கொள்ள வேண்டுமென்பதனால் காலதாமதம் ஏற்பட்டு விட்டன. இன்னும் இதில் தாமதம் ஏற்படாதவாறு விரைவாக பொறுப்புக்களை வழங்குவதற்கு நாங்கள் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 336 தரம்பெற்ற அதிபர்களுக்கும் ஒரே தடவையில் இடநிலைப்படுத்தலை மேற்கொள்ளவுள்ளோம். எந்தவொரு அதிபரும் கடமை நிறைவேற்று அதிபரின் கீழ் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனைய மாகாணங்களில் அதிபர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அங்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதனாலேயே கால தாமதம் ஏற்பட்டுள்ளன.

உங்களது இடநிலைப்படுத்தல் தொடர்பில் என்னை நீங்கள் நம்பலாம். யாருக்கும் அநீதிகள் இழைக்கப்படாது. உங்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதனால்தான் நானாக இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்து உங்களது கருத்துக்களை கேட்கின்றேன். மேலும், ஜனநாயக ரீதியாக உங்களது பிரச்சினைகள் தொடர்பில் நீங்கள் போராட்டங்கள் செய்யவும் உங்கள் உரிமைகளை கேட்கவும் பூரண சுதந்திரம் உண்டு. மாகாண சபையிலும் து தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான எல்லா நிலைமைகளையும் கருத்திற்கொண்டு உங்களது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

e e-jpg2-jpg3

Web Design by The Design Lanka