புதிய பிரதியமைச்சர் விடயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளதா முஸ்லீம்காங்கிரஸ்..? - Sri Lanka Muslim

புதிய பிரதியமைச்சர் விடயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளதா முஸ்லீம்காங்கிரஸ்..?

Contributors

(தந்திமகன்)

அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் பின்னர் இலங்கையின் அரசியல் போக்கில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதை இப்பகுதியின் ஊடாக முன்னர் கட்டுரையொன்றில் கூறியிருந்தோம். அந்த அடிப்படையில் அண்மையில்(10.10.2013) பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரதியமைச்சர் பட்டியலில் முஸ்லீம் காங்கிரஸின் பிரதிநிதிகள் மூவரின் பெயரும் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பட்டியலில் எந்த முஸ்லீம், தமிழ் உறுப்பினர்களின் பெயர்களோ காணப்படவில்லை. கடந்த சிலவாரங்களாக ஆளும் ஐக்கிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சியாகவும், முஸ்லீம் மக்களின் ஏகோபித்த கட்சியாவும் தன்னை வெளிக்காட்டிக் கொள்கின்ற முஸ்லீம் காங்கிரஸ் அதன் செயற்பாடுகள் பல ஆளும் அரசிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இதன்பிரகாரம் பார்க்கின்றபோது வழங்கப்பட்டுள்ள புதிய ஒன்பது பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்த படங்களையும் வெப்பதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. சனத் ஜயசூரிய – தபால் சேவைகள் பிரதி அமைச்சர், லக்ஷமன் பெரேரா – தொழில் மற்றும் வணிக பிரதி அமைச்சர், சரத் வீரசேகர – தொழில் மற்றும் தொழில் தொடர்பு பிரதி அமைச்சர், வை.ஜி.பத்மசிறி – விவசாயத்துறை பிரதி அமைச்சர், என்டனி விக்டர் பெரேரா – தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர், ஹேமால் குணசேகர – நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர், மொஹான் லால் கிரேரு – பிரதிக் கல்வி அமைச்சர், நிஷாந்த முத்துஹெட்டிகம – சிறு பயிர் ஏற்றுமதி அபிவிருத்தி, சரத் முத்துகுமாரன – புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் ஆகியோர் இந்த ஒன்பது பிரதியமைச்சர்களுமாவர். இவர்களுள் முஸ்லீம் தரப்பிலிருந்தோ, தமிழர் தரப்பிலிருந்தே ஆளும் கட்சிக்குள் ஆட்சியில் பங்குகொண்டுள்ளவர்கள் எவரும் இல்லாமையானது இத்தரப்புக்களிலிலுள்ள சில முரண்பாடுகளும் காரணமாக இருக்கலாமோ எனவும் சிந்திக்க தூண்டுகின்றது.
இதற்கிடையில் 2014ம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் இதுசம்பந்தமாக இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இத்தகவலை அறிவித்திருந்தார். இந்த பஜட்டுக்கும் புதிய பிரதியமைச்சர்கள் பணிக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் உண்டா? என்பதும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பஜட் விடயத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி அரசிற்கு அமோக ஆதரவைப் பெறுவதற்கு பலமிருந்தும் இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமையானது மேலும் அரசின் ஆதிக்கத்தை பொதுமக்களின்மீது அழுத்துவதற்கு இந்த பிரதியமைச்சர்களும் தங்களுக்குள்ள பதவிகள் ஊடாக முயற்சிப்பார்கள் என்பதையே இது காண்பிக்கின்றது. புதிய பிரதியமைச்சர்கள் 21 பேரை நியமிக்கப்போவதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இந்த கட்டுரை எழுதும் வரையில் ஒன்பது பிரதியமைச்சர்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆளும் அரசின் முக்கியமான ஒட்டுக்கட்சியொன்றின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச ஆளும் கட்சியின் சக அமைச்சரான ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்ச்சித்திருந்தார். பிரபாகரனுக்கும் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான ரணிலுக்கும் ஏற்பட்ட தலைவிதியே ரவூப் ஹக்கீமுக்கு ஏற்படும் என்று கடும் தொனியில் கூறியிருந்தார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ’13வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட அதிகளவான அதிகாரங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நீதியமைச்சர் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண சபைகள் தொடர்பில் இதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளன. இதில் ஒரேஒரு வித்தியாசம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் கூட்டமைப்பு அரசுக்கு வெளியில் இருந்து அந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றவே முஸ்லிம் காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தில் முயற்சித்து வருகிறது. கூட்டமைப்பின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றி அதன் பிறகு இந்த மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதே அவர்களின் தேவையாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத, பிரிவினைவாத தேவையுடன் இணைந்து செல்வதாகும். இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்து கொள்ளவும் அதன் எதிர்கால பயணத்தை தீர்மானிக்கவும் மக்களுக்கு இருக்கும் அதிகாரத்தில் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். மக்களின் அதிகாரத்தில் நம்பிக்கை வைக்காது சர்வதேச சக்திகள் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் தோல்வியடைந்த இரண்டு அரசியல் தலைவர்கள் நினைவுக்கு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். அவர்கள் மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்படவில்லை. சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கையில் அவரது ஈழ நாடு என்ற கனவு கட்டியெழுப்பட்டிருந்தது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மேற்குலக சக்திகளின் அழுத்தங்களின் அடிப்படையில் நாடு பயணம் செய்யும் பாதையை மாற்ற முடியும் என்று எண்ணினார். மேற்குலக சக்திகளின் அழுத்தங்களின் அடிப்படையில் நாட்டின் பயணத்தை மாற்ற முடியும் என்ற நம்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன் தோல்வியடைந்ததுடன் ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரணில் மற்றும் பிரபாகரனின் தோல்வியடைந்த முகங்களுடன் ரவூப் ஹக்கீம் இணைந்துள்ளார் என்பதே எமது கருத்தாகும். ஹக்கீம், தமிழ் பிரிவினைவாத நிலைப்பாடுகளை முஸ்லிம் மக்கள் மீது பலவந்தமாக சுமத்தி சர்வதேச சக்திகள் மீது நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகிறார். ரணில் – பிரபாகரன் ஆகியோருக்கு நேர்ந்த கதியே நாளை ஹக்கீமுக்கும் நேரும். அதனை தவிர அவருக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இது குறித்து முஸ்லிம் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என விமல் வீரவன்ஸ தனது அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியின் அரசியல்போக்கிலிருந்து முஸ்லீம் காங்கிரஸின் தேவைகள் சிலவேளைகளில் தேவைப்படாமல் விலக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளாகவும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படாமை காணப்படுகின்றது.
அதேநேரம் கடந்தவாரம் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றபோது கடுமையான தொனியில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கும், அதன் தலைவருக்கும் எச்சரிக்கை சமிக்ஞை ஒன்றை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்ட அந்தக் கூட்டத்தின்போது முஸ்லிம் காங்கிரஸினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது அரசாங்கத்தில் இருந்துகொண்டே, அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சிப்பதாகவும், இந்த விமர்சனத்தை முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தாராளமாக வெளியேறலாமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருந்தார். அன்று நடைபெற்ற ஆளும்கட்சியின் பாராளுமன்ற கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவரும் பங்குகொள்ளாது இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்துக் கொண்டிருந்ததாகவும், அமைச்சர் பசீர் சேகுதாவூத் உடல் நலம் சரியில்லாமை காரணமாக இச்சந்திப்புகளில் பங்குகொள்ளவில்லை.
அதேவேளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் எம்.பி.யை பெயர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்ததாகவும், இந்தப்பாராட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஒரு ஆசனம் பெற்றுக்கொடுத்தமைக்காகவே இந்தப் பாராட்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பல சம்பங்களின் பின்னணியில்தான் புதிய அமைச்சர்கள் விடயத்திலும் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உண்மையில் கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட பதின் மூன்றுக்கு ஆதரவான சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும் என்கிற வாதங்கள் அரசியல் மட்டத்தில் சில பிரச்சினைகள் தூண்டப்பட்டிருக்கலாம். இருந்தாலும் இந்த விடயம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதாகவே அமைச்சர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் முகாவினர் அரசில் இருந்து கொண்டு அரசிற்கு எதிராக செயற்படுவதை தவிர்க்கும் நோக்கமாகவும் இது காணப்படலாம். இருப்பினும் அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றாலும் அதிகாரங்கள் கைகளில் பெற்றுக் கொண்டாலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளாது வெறும் பொம்மைகளாக காட்சியளித்தால் அப்பதவிகள் மூலம் அவர்கள் மாத்திரமே சுகபோகங்களை அனுபவிக்க முடியும். பொது மக்களுக்கு ஏனைய முஸ்லீம் இணைக்கட்சிகள் செய்கின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் எதுமின்றி வெறும் முஸ்லீம் கோஷத்தினால் எதுவுமே நடைபெறப்போவதில்லை. ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள முகாவின் தலைவர் வரும் வரையில் இவ்விடயங்கள் அனைத்து ஒன்று கூடி அரசிலிருந்து விலகுவோம் என்று முடிவெடுக்கப்படும். ஆனால் சிலர் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் என்று அரசு கூறுமாக இருந்தால் பலர் நிச்சயம் வெளியேறுவார்கள். கட்சி உடையும், கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் பிரிந்து செல்வபவர்கள் மீது விலகி தனிமரமாக காட்சிதருவார்கள்.
எனவே, தன்மானமுள்ள தமிழர் பெருமக்களின் தியாக உணர்விற்கு எடுத்துக்காட்டாக விளைந்துள்ள அண்மையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் அதிகப்படி ஒரேகட்சிக்குள் விழுந்ததன் மர்மம் ஒற்றுமை ஓங்கப்படுவதற்கேயாகும். அங்கு அபிவிருத்திகள் நடைபெறாமல் விட்டாலும் பரவாயில்லை இனம் ஒன்றுமைப்பட்டுள்ளது என்பதை உலகுக்கு பறைசாட்டவே. எனவேதான் முகாவினரும் தன்னிலை உணர்ந்து அரசின் ஏச்சுக்குள் வீழ்ந்து விடாமல், முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொண்ட பயங்கரங்களை இன்னும் முடிவுக்குள் அரசோ, சிங்கள பேரினவாதிகளோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் ஆளும் கட்சியின் கால்களுக்குள் என்ன செய்தாலும் வீழ்ந்து கிடப்பேன் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் இன்றைய முகாவினர் உள்ளனரா? என்றும் யோசிக்கத் தூண்டுகின்றது. எது எப்படியிருப்பினும் ‘மதியாதார் வாசல் மிதியாதே’ எனும் தமிழ் பழமொழியையும் சற்று சிந்திக்குமாறு முகாவின் பற்றுள்ள பலரும் கூறுவது எங்கே? காதுகளில் கேட்கின்றதா?

Web Design by Srilanka Muslims Web Team