புதுசு இல்ல, பாவிச்சது எண்டாலும் பரவாயில்லை...!!! » Sri Lanka Muslim

புதுசு இல்ல, பாவிச்சது எண்டாலும் பரவாயில்லை…!!!

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்ரப்!


நண்பனின் வாட்சாப்பில் ஒரு ரெகுவஸ்ட் வந்தது. வழமையாக யாதேனும் தேவைகள், அல்லது யாருக்கேனும் ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் வாட்சப்பில் ரெகுடிங்க் அனுப்பும் நண்பனே இன்றும் அனுப்பியிருக்கிறான். அவன் அனுப்பியது ஐந்து ரெகோர்டிங்குகள், ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டு வந்தேன், அதிலும் ஒரு குடும்பத்திற்கு உதவி தேவைப்பட்டதாகவே கூறினான், ஆனால் இந்த உதவி எங்களுக்கு புதியது!!!

எமது அக்கரைப்பற்றில் வசிக்கும் ஒரு வறிய குடும்பம். தந்தை நோய்வாய்ப்பட்டவர், எழும்பி நடந்து மலசலகூடம் செல்லக்கூட முடியாதவர். தாயும் பிள்ளைகளும்தான் அவரை கவனிப்பது. தாயார் அயல்வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலைகள் செய்துகொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் நூறு இருநூறு ரூபாய்களைக்கொண்டு குடும்பத்தை நடாத்துபவர்.

இரண்டு (வயதிற்கு வந்த) மூத்த பெண்களைளும் அதனை அடுத்த சிறுவயது ஆண்பிள்ளைகளும். குறித்த தாய் பல பெண்கள் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்காக வந்தவர் “ஒங்குட ஊட்டுல நீங்க போடாம வெச்சிருக்கிற பாவிச்ச அபாயாக்கள் இருந்தா தாங்களன், எண்ட கொமர்ப் புள்ளயலுக்கு வெளிய போட்டுக்குப் போறதுக்கு ஒருங்கான உடுப்பில்ல” என்று கேட்டிருக்கிறார். இந்த தகவல் நண்பனுக்கு கிடைத்திருக்கின்றது. நண்பன் எனக்கு வாட்சாப் மூலம் ரெகோடிங் அனுப்பி இருந்தால் தருமாறு கேட்டிருக்கிறான். அதுதான் அவன் கேட்ட உதவி, அதுதான் அந்த ரெகோடிங்.

கேட்டதும் கவலை என்னை ஆட்கொண்டது. நாளைக்கே, ஒரு நாளும் தாமதிக்காமல் நாளைக்கே அவர்களுக்கு ஏதேனும் உதவியை அல்லது அவர்கள் கேட்ட உதவியை செய்துவிடவேண்டும் என்ற ஏக்கத்தில் ஒரு விடயத்தைப் பற்றி சிந்திக்கலானேன்.

சில அரபு நாடகளில் ஒரு பழக்கம் இருப்பதாக அறிந்திருக்கிறேன். அதாவது தங்கள் வீட்டில் இனி பாவிக்கத் தேவையில்லை, அல்லது பாவிக்க முடியாமல் பழையதாகிவிட்ட, அல்லது பழுதாகிவிட்ட பொருட்கள், ஆடைகள், மின்சார சமையல் உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்களை குறித்த ஒரு இடத்தில் வைத்துவிடுவார்கள் அல்லது குறித்த ஒரு இடத்திற்கு வழங்கி விடுவார்கள்.

வசதி குறைந்தோர் அந்த இடத்திற்கு வந்து அதில் தங்களுக்குத் தேவையான பயன்படுத்தக்கூடிய பொருட்களை அல்லது தங்களால் அணிய முடியுமான ஆடைகளை எடுத்துக்கொள்வார்கள். பின்னர் அதனை அவர்கள் பாவிப்பார்கள். இப்படியான வழிமுறை எமது பிரதேசங்களில் இல்லை. ஆனால் எமதான பிரதேசங்களில் இவ்வாறான விடயங்கள் இருந்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும் ஏழைகளுக்கு.

நாங்கள் பாவித்த, நாங்கள் உடுத்த, நாங்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், கல்வி உபகரணங்களை ஏன் இவ்வாறு நாங்கள் இன்னுமொருவருக்கு கொடுக்க முடியாது? ஏன் எங்களால் எங்களது பொருட்கள் வீணாகமல் இன்னுமொருவருக்கு பயன்பட முடியாது?

பாவம் அந்தப் பெண் பிள்ளைகளும் தாயும், எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகளோடு வாழ்வார்களோ தெரியாது. ஏக்கத்தோடு கழிகிறது எங்களது பொழுதுகள். பெருமூச்சோடு கரைகிறது அவர்களது ஆசைகள். எத்தனை அழகிய ஹபாயாக்களை, எவ்வளவு விலையுயர்ந்த ஹபாயாக்களை அணிந்து வந்த பெண்களைக்கண்டு பெருமூச்சி விட்டார்களோ!!!

நாங்கள் செய்யும் ஒவ்வொரு வீண் செலவும் இவர்களுடையதல்லவா? அநியாயம் இழைக்கிறோமா இல்லை கண்டுகொள்ளாமல் நகர்கிறோமா? அந்தக் கண்களில் நிச்சயம் ஈரம் இருக்கும் என்ற ஏக்கத்தோடு கண்களை மூடுகிறேன்!!!

குறிப்பு :- இதைப் பதிவிட நண்பனின் அனுமதி தேவையில்லை என்று எண்ணிக்கொள்கிறேன்!face

Web Design by The Design Lanka